தமிழகத்தில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

0

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு விஜயம் செய்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் மற்றும் தமிழக கூட்டுறவு அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் அங்குவாழும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளனர்.

இதன்போதே, இலங்கை அகதிகளுக்காக 20 கோடி இந்திய ரூபா செலவில் 1000 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக குறித்த மூன்று முகாம்களை ஒன்றிணைத்து நிரந்த குடியிருப்பை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான 108 முகாம்கள் உள்ளன.

இதனிடையே, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இந்திய மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply