பக்தர்களின் மனங்களில் உள்ள விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவேற்றும் ஷீர்டி சாய்பாபா..!

0

ஷீர்டி சாய்நாதர் எப்போதும் தம் பக்தர்களின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தம்முடைய பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள், எத்தகைய பிரச்னையில் சிக்கித் துன்பப்படுகிறார்கள் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். அதன் காரணமாகவே பாபா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தம்முடைய பக்தர்களைக் காப்பாற்றி அருள் புரிந்திருக்கிறார். பக்தர்களின் மனங்களில் உள்ள விருப்பங்களையும் அறிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார்.

சாய்நாதரின் பக்தர்களில் ஒருவர் ஹரி சீதாராம் தீக்ஷித். அவர் ஒருநாள் சாய்நாதர் பாபாவுக்கு தரிசிக்கச் சென்றபோது, அவருக்கு அணிவிக்க ஒரு மாலையை வாங்கிச் சென்றார். மேலும் சாய்நாதருக்குக் காணிக்கையாக இருபத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் விரும்பினார். துவாரகாமாயியை அடைந்த தீக்ஷித், தான் வாங்கி வந்திருந்த மாலையைப் பாபாவுக்கு அணிவித்து வணங்கி விட்டு பாபாவின் அருகில் அமர்ந்தார். பாபாவைச் சுற்றிலும் பக்தர்கள் பலர் அமர்ந்திருந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் பாபாவுக்குத் தான் கொடுக்க நினைத்த காணிக்கையைக் கொடுக்க மறந்துவிட்டார். சற்று நேரம் சென்றது. தீக்ஷித்தைப் பார்த்த பாபா, ”நீ எனக்கு மாலை மட்டும்தான் அணிவித்தாய். காணிக்கை தரவில்லையே. இருபத்தைந்து ரூபாயாவது காணிக்கை செலுத்து” என்று கூறினார்.

தாம் நினைத்ததை அப்படியே பாபா கூறியதை நினைத்து தீக்ஷித் மெய்சிலிர்த்துவிட்டார். தான் நினைத்தபடியே பாபாவுக்கு இருபத்தைந்து ரூபாய் காணிக்கை கொடுத்தார். மற்றொருநாள் தீக்ஷித் தான் இருந்த இடத்தில் பாபாவின் படத்துக்குப் பூஜை செய்தார். பாபாவுக்கு நைவேத்தியம் செய்தவர், தாம்பூலம் வைக்க மறந்துவிட்டார். பிறகு அவர் துவாரகாமாயிக்குச் சென்றபோது, பாபா தீக்ஷித்திடம், ”எனக்கு வெற்றிலை பாக்கு கொடு” என்று கேட்டார். அப்போதுதான் தான் பூஜையில் பாபாவுக்குத் தாம்பூலம் வைக்கவில்லை என்பது அவருக்கு நினைவு வந்தது
பாபா தன்னுடைய பக்தர்களிடம் மட்டுமல்லாமல், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் அருள்புரிந்திருக்கிறார்.

ஒருநாள் நாகபுரியில் இருக்கும் தீக்ஷித்தின் தம்பி கடுமையான காய்ச்சலால் அவதிப்படுவதாகத் தந்தி வந்தது. தீக்ஷித் கலங்கிவிட்டார். பாபாவிடம் சென்று, “கடுமையான காய்ச்சலால் அவதிப்படும் என் தம்பிக்கு ஆறுதல் சொல்ல நான் அருகில் இல்லையே” என்று வருந்தினார். அதற்குப் பாபா அவரிடம், “உன்னால் அவனுக்குப் பயன் இல்லாவிட்டால் என்ன? என்னால் அவனுக்குப் பயன் உண்டு” என்றார்.

தீக்ஷித்துக்கு பாபா சொன்னதன் பொருள் விளங்கவில்லை.

அதே தருணத்தில் தீக்ஷித்தின் தம்பி வீட்டுக்குச் சென்றார் பாபா. அவரை ஆச்சர்யமாகப் பார்த்தார் தீக்ஷித்தின் தம்பி. “என்ன அப்படி என்னை வியப்புடன் பார்க்கிறாய்? என்னால் உனக்குப் பயன் உண்டு” என்றார் பாபா. பின்னர் அவருடைய கடுமையான காய்ச்சலையும் போக்கி அருள்புரிந்தார்.

பின்னால் தீக்ஷித் நாகபுரி சென்றபோது, பாபா, ‘தன்னால் அவனுக்குப் பயன் உண்டு’ என்று சொன்னதன் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டார்.

மற்றொரு முறை தீக்ஷித்தின் மகன் தேர்வுக்குச் செல்வதைத் தடை செய்தார் பாபா. இப்படி இரண்டு முறை தடை செய்திருக்கிறார். அதற்கும் காரணம் இருக்கவே செய்தது.

தீக்ஷித்தின் மகன் பம்பாயில் படித்துக்கொண்டிருந்தான். தீக்ஷித் ஷீர்டியில் இருந்தார். தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருடைய மகனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுப் பாடாய்ப்படுத்தியது. தன்னுடைய ஒரே புகலிடமான பாபாவிடம் ஓடினார். பாபா அவரிடம், “உன் பையனை புத்தகங்களுடன் இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

பாபா சொன்னபடியே தீக்ஷித் தன் மகனை அழைத்துக்கொண்டு ஷீர்டிக்கு வந்துவிட்டார். மகனைப் பாபாவிடம் அழைத்துச் சென்றார். உதி கொடுத்து ஆசீர்வதித்த பாபா, “நீ உன் அப்பாவுடன் இங்கேயே தங்கியிரு. இங்கிருந்தபடியே படி. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினார். பையனும் நோயிலிருந்து விரைவில் நிவாரணம் பெற்றதுடன் ஆர்வத்துடன் படிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான்.

தேர்வுகள் தொடங்கும் நாள் நெருங்கியதும், பையனைப் பம்பாய்க்கு அனுப்பி வைக்கும்படி தகவல் வந்தது. தீக்ஷித் பையனை அழைத்துக்கொண்டு பாபாவிடம் சென்றார். பாபாவை நமஸ்கரித்து விட்டு, பம்பாய்க்குச் செல்ல அனுமதி கேட்டார். ஆனால், பையனை பம்பாய்க்கு அனுப்ப பாபா மறுத்துவிட்டார். பாபா வார்த்தைகளையே வேதவாக்காக எண்ணும் தீக்ஷித், பையனை பம்பாய்க்கு அழைத்துச் செல்லவில்லை. தீக்ஷித்துக்கு வேண்டியவர்கள், ‘பையனைத் தேர்வு எழுதச் செய்யவிடாமல் பாபா தடுக்கிறாரே’ என்று குறைபட்டுக்கொண்டனர். தீக்ஷித்தின் மகனும் அப்படியே நினைத்தான்.

இதேபோல் இரண்டு முறை தடுத்த பாபா, மூன்றாவது முறையாகத்தான் தீக்ஷித்தையும் அவருடைய மகனையும் பம்பாய்க்குச் செல்ல அனுமதித்தார்.

பம்பாய்க்குப் போன பிறகுதான், தேர்வு நடைபெறும் மையத்தில் பிளேக் காய்ச்சலை ஏற்படுத்தும் எலி இருந்ததால் தேர்வுகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது தீக்ஷித்துக்குத் தெரிய வந்தது. பாபாவின் வார்த்தைகளை மீறி பையன் பம்பாய்க்குச் சென்றிருந்தால், பிளேக் எலி என்ற அச்சத்துக்கு ஆளாகி, தேர்வு எழுதுவதில்கூட குழப்பமடைந்திருக்கலாம். எனவேதான் பாபா இரண்டு முறை தடுத்தார். பிறகு அவன் நல்லபடி தேர்வுகள் எழுதி, சிறப்பான முறையில் வெற்றி பெற்றான்.

பாபாவின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அப்போது புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பின்னர் அவருடைய வார்த்தைகளின் உண்மைப் பொருளை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடியும் என்பது முற்றிலும் உண்மை. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply