
ஆடி பிரதோஷமும் விசேஷம். ஆடி மாதத்தில் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷம் வருவதும் சிறப்புக்குரியது. இன்று 12.8.19 திங்கட்கிழமை பிரதோஷம். எனவே இந்த அற்புதமான நாளில், சிவாலயம் சென்று, ஈசனையும் நந்திதேவரையும் மனதார வழிபடுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தையும் ஈடேற்றித் தந்தருள்வார் தென்னாடுடைய சிவனார்.
மாதந்தோறும் இரண்டு பிரதோஷங்கள் வரும். அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முன்னதாக வருகிற இந்த பிரதோஷ நாள் என்பது, சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். இந்தநாளில், சிவாலயங்களில், சிவலிங்கத் திருமேனிக்கும் நந்தியம்பெருமானுக்கும் விசேஷ அபிஷேங்கள் நடைபெறும். ஆராதனைகள் நடைபெறும். சிறப்பு பூஜைகள் அமர்க்களப்படும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் கூடிநின்று, ‘நமசிவாயம்’ சொல்லி, தென்னாடுடைய சிவனை வழிபடுவார்கள்.

திங்கள் என்பதற்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. திங்கள் என்கிற சந்திரனை, தன் சிரசில் பிறையென அணிந்துகொண்டிருக்கும் ஈசனுக்கு, சோமன், சோமநாதன் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்தன. மேலும், திங்களன்று வரக்கூடிய பிரதோஷம், சோம வாரப் பிரதோஷம் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
இன்று 12.8.19 திங்கட்கிழமை, பிரதோஷம். சோம வாரப் பிரதோஷம். அதிலும் ஆடி மாதத்தில் வருகிற பிரதோஷம். ஆடிச் செவ்வாய் முருகனுக்கு உகந்தது என்பது போல, ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்தது என்பது போல, ஆடிப் பிரதோஷம் என்பது சிவனுக்கு உரிய மிக முக்கிய நாளாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்றைய நாளில், மாலையில் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் ஆராதனைகளில் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் வழங்குங்கள். உங்களின் எல்லாப் பிரார்த்தனைகளையும் ஈடேற்ற்றித் தந்தருள்வார் சிவனார்!- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
