துன்பமும் கஷ்டமும் தொடர்கதையாக இருக்கிறதா..? இந்த அதிசய சனீஸ்வரன் கோயிலுக்குப் போங்க…

0

கஷ்டத்துக்கு காரணம் சனி என்பார்கள்.

ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்றும் சொல்லுவார்கள். குறிப்பாக சனி திசையில் கஷ்டம் அதிகமாக இருக்கும். ஏழரை சனி என்றாலோ சொல்ல வேண்டியது இல்லை. கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் தான்.

தொடர்கதையாக தொடர்ந்து வரும் துன்பத்தையும் போக்கி கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியையும் அமைதியையும் தரக்கூடிய சனீஸ்வரனுக்கு விழுப்புரம் அருகே தனிக்கோயில் இருக்கிறது. இந்தியாவில் சனீஸ்வரனுக்கு என்று தனிக் கோயில் இருப்பது இங்கு மட்டும்தான். இங்கே 21 அடி உயர சனீஸ்வரன் சிலை இருக்கிறது. இதுதான் இந்தியாவிலேயே பெரிய சனீஸ்வரன் சிலை. இது ஒரு அதிசய கோயில். இந்த கோயிலில் உண்டியல் கிடையாது. தனியார் பெயரில் அர்ச்சனை செய்வதும் இல்லை.

விழுப்புரம் திருக்கோவிலூர் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் கல்பட்டு என்ற சிற்றூரில் இந்தச் சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து பேருந்து போகிறது. மாம்பழப்பட்டு என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தால் கல்பட்டு இருக்கிறது.

கல்பட்டில் சுயம்பிரகாச ஆசிரமம் இருக்கிறது. அந்த ஆசிரமத்துக்குள் இந்த சனீஸ்வரன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சனீஸ்வரன் நின்ற கோலத்தில் இருக்கிறார். 21 அடி உயரம் கொண்ட இந்த சனீஸ்வரனுக்கு யோக சனீஸ்வரன் என்று பெயர். சனீஸ்வரனின் இடது கால் பீடத்தில் பதிந்துள்ளது. வலக்கால் அவரது வாகனமான காகம் மீது இருக்கிறது. சனீஸ்வரன் சன்னதிக்கு மேல் கோபுரம் எழுப்பப்பட்டிருக்கிறது. கோபுரத்தில் ஒன்பது கலசங்கள் உள்ளன. அவற்றை நவக்கிரக கலசங்கள் என்று சொல்கிறார்கள்.

இத்திருத்தலத்தில் சனி பகவானோடு சேர்த்து, கணபதி, சிவன் பார்வதி, ஆஞ்சநேயர், தண்டாயுதபாணி என பல கடவுளின் பிரமாண்ட சிலைகள் உள்ளன. இங்குள்ள பஞ்சமுக ஈஸ்வரரின் சிலை 11 அடி உயரம் கொண்டது. அதேபோல இங்கு 18 அடியில் பிரமாண்டமான துர்க்கை சிலையும் உள்ளது. இங்குள்ள கணபதியின் சிலை தேசிங்குராஜா காலத்தில் அவரால் வழிபடப்பட்ட சிலை என்று கூறப்படுகிறது.

இங்குள்ள சனிபகவானையும் துர்கை அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, சூரிய காயத்ரி மந்திரம் அதை 108 முறை ஜபித்தவாறு சனிபகவானுக்கு தாமரை மலரை சமர்ப்பித்தால் ஏழரை சனி உள்ளிட்ட அனைத்து விதமான சனி தோஷங்களில் இருந்தும் விடுபட்டு சிறப்பான வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply