முருகனுக்கு உகந்த செவ்வாய் விரதம்..!

0

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிகவும் உயர்ந்தது. வீட்டில் விரதமிருப்பதைவிட செவ்வாய் சம்பந்தம் உடைய முருகன் தலங்களுக்குச் சென்று அங்கு இரவு தங்கி 1 நாள் விரதம் இருந்து அத்தலத்தில் உள்ள முருகன் சன்னதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து திருமுருகனை பூஜித்தால் பலன்கள் அதிகம். செவ்வாய் விரதம் பற்றி வள்ளலார் பின்வருமாறு கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து, உடல் தூய்மை பெற நீராடி திருநீற்றை நீரில் குழைத்து முறைப்படி தலை உச்சி முதல் உடல் எங்கும் தரித்துக்கொண்டு விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்ச மந்திரத்தை 108 முறை ஜெபித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும். அதன் பிறகு சூரியனைப் பார்த்து ‘ஓம் சிவசூரியாய நம’ என்று கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து பரமசிவன், பார்வதி, முருகனை மனத்துக்குள் வணங்கி 108 அல்லது 1008 முறை ஜெபம் செய்து 100 கிராம் மிளகினை ஒரு புதுத்துணியில் முடிந்து ஓம் வைத்தியலிங்கார்ப்பணம் என்று கூறி ஓரிடத்தில் அதை வைத்து சிவனடியார் ஒருவரை வீட்டிற்கழைத்து, உபசரித்தல் நல்லது. அமுது படைத்து தாம்பூலம் தட்சனை கொடுத்து பின்பு சுத்தமாக பச்சரிசி, பாசிப்பருப்பு, நெய், மிளகு, சீரகம் சேர்த்த உப்பில்லாப் பொங்கல் பொங்கி சுவாமிக்கு நிவேதனம் செய்து அப்பிரசாதத்தை அரை வயிறு மட்டும் உண்டு.

அன்று மாலை சிவாலய தரிசனம் செய்து சிவத்தியானத்துடன் திரும்பி வந்து சிவபுராணம் அல்லது கந்தபுராணம் படிக்கக் கேட்டு பின்பு இரவு ஏதும் உண்ணாமலே பாய் தலையணை இன்றி வெறும் தரையில் கம்பளம் விரித்துப்படுத்துறங்க வேண்டும். வாசனாதி திரவியங்கள் தாம் பூலம், பெண்சுகம், பெருந்தூக்கம் இவைகளை விட வேண்டும். இதுவே செவ்வாய் விரதம் அனுஷ்டிக்கும் முறையாகும். நவக்கிரகங்கள் எனும் ஓன்பது கோள்களில் ஒன்று அங்காரகன் எனும் செவ்வாய் கிரகம்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply