சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு செய்த சமையல்..!

0

சீரடி சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்கள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட சாய்பாபா ஆலயம் கட்டப்பட்டுள்ளதில் இருந்து, பாபா எந்த அளவுக்கு மக்கள் மனதில் ஊடுருவி இருக்கிறார் என்பது புலனாகும். பாபாவின் ஆலயங்களில் ஒரு ஒற்றுமையை நீங்கள் உன்னிப்பாக கவனித்திருந்தால் அறிந்து இருப்பீர்கள். அது, பாபாவுக்கு யாராவது ஒரு பக்தர் ஏதாவது உணவுப் பொருட்களைப் படைத்து அதை ஆலயத்துக்கு வரும் மற்றவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பதுதான்.

அதிலும் குறிப்பாக வியாழக்கிழமைகளில் பெரும்பாலான சாய்பாபா தலங்களில் அன்னதானம் நடத்தப்படுகிறது. ஏழைகள் முதல் கோடீசுவரர்கள் வரை வரிசையில் வந்து நின்று அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

சாய்பாபாவே நேரில் வந்து தங்களுக்கு பிரசாதம் தந்து ஆசீர்வதிப்பதாக ஒவ்வொரு பக்தரும் நினைக்கிறார்கள். அதிலும் அன்னதான செலவை ஏற்றுக் கொள்பவர்கள் பாபா தம்மை பரிபூரணமாக ஆசீர்வதிக்கிறார் என்று நம்புகிறார்கள். யார் ஒருவர் தம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறாரோ, அவரை பாபா தம் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பதாக நம்பிக்கை உண்டு.

பொதுவாகவே பக்தர்கள் பசியோடு இருப்பது சாய்பாபாவுக்கு சுத்தமாக பிடிக்காது. யாரும் பட்டினி கிடந்து, உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு தன்னை வழிபட வேண்டாம் என்று சாய்பாபா அறிவுறுத்தி உள்ளார். நன்றாக சாப்பிடுங்கள். பசியாறிய பிறகு நல்ல தெம்பாக இருந்து என்னை ஆராதனை செய்யுங்கள் என்றே பாபா கூறியுள்ளார். அதனால்தான் இன்று நாடு முழுவதும் சீரடி சாய் தலங்களில் தானங்களில் உயர்ந்த அன்னதானம் சீரும், சிறப்புமாக நடத்தப்படுகிறது.

சாய்பாபா, தனக்கான உணவு பற்றி ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. சீரடியில் உள்ள 5 பேரின் வீடுகளில் சென்று யாசகம் கேட்டு உணவு பெறுவதை தம் கடைசி காலம் வரை வழக்கத்தில் வைத்திருந்தார். அப்படி 5 வீடுகளில் வாங்கி வரும் உணவை ஒரு பெரிய சட்டியில் கொட்டுவார். சோறு, குழம்பு எல்லாவற்றையும் மொத்தமாக கலந்து விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பார்.

பிறகு தான் கொஞ்சம் சாப்பிடுவார். மற்றவற்றை பக்தர்களுக்கு கொடுத்து விடுவார். அவர் கையால் பிசையப்பட்ட உணவை வாங்கி சாப்பிட்டவர்கள், மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்கள். நாளடைவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபாவிடம் ஆசி பெற சீரடிக்கு படையெடுக்கத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்தே அந்த பக்தர்களுக்கு உணவூட்டுவதற்கு சாய்பாபா முடிவு செய்தார்.

பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் சாய்பாபா தம் கையால் சமைத்து உணவு கொடுப்பார். சீரடி தலத்தில் பல தடவை இந்த அற்புதம் நடந்துள்ளது. அவர் சமையல் செய்யப் போகிறார் என்றால் காலையிலேயே தெரிந்து விடும். சமையல் செய்வதற்கு அவர் யாரிடமும், எத்தகைய உதவியும் பெற மாட்டார் உத்தரவிடவும் மாட்டார்.

நூறு பேருக்கு சமையுங்கள், இரு நூறு பேருக்கு சமையுங்கள் என்று பாபா ஒரு வார்த்தை சொன்னால் போதும், சமைப்பதற்கு தயாராக எத்தனையோ பேர் இருந்தனர். அவர் கண் அசைவு உத்தரவுக்காக சீரடியில் ஏராளமானவர்கள் காத்து இருந்தனர். ஆனால் சாய்பாபா உணவு தயாரிக்கும் விஷயத்தில் யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள மாட்டார். எல்லாவற்றையும் தாம் ஒருவராகவே செய்வார்.

முதலில் காலையிலேயே கடை வீதிக்கு செல்வார். பாபாவை பார்த்ததும் கடைக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டோடும். ஏனெனில் அந்த அளவுக்கு பாபா அவர்களிடம் பொருட்கள் வாங்குவார். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தானிய வகைகள், காய்கறிகள் என்று மூட்டை, மூட்டையாக வாங்குவார். எல்லா பொருட்களுக்கும் சரியாக பணம் கொடுத்து விடுவார்.

அந்த பொருட்களை கடை வீதியில் இருந்து மசூதிக்கு தாமே எடுத்து வருவார். மசூதியில் வைத்து அந்த உணவு தயாரிப்புப் பொருட்களை சுத்தம் செய்வார். கோதுமையை அரைக்க வேண்டும் என்றால் தாமே அரைப்பார். மற்றவர்கள் உதவி செய்ய வந்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். சமையலுக்கான பொருட்கள் தயாரானதும் பிறகு மசூதி எதிரில் உள்ள அகன்ற மைதானத்தில் சமையலை தொடங்குவார். சமைப்பதற்கு 2 பெரிய பாத்திரங்களை சாய்பாபா வைத்திருந்தார்.

அந்த பாத்திரங்களுக்கு “ஹண்டி” என்று பெயர். ஒரு பாத்திரம் சுமார் 50 பேருக்கு சாப்பாடு தயாரிக்கும் வகையிலும், மற்றொரு பாத்திரம் சுமார் 100 பேருக்கு சாப்பாடு தயாரிக்கும் வகையிலும் இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சாய்பாபா உணவு தயாரிப்பார். அவர் உணவு தயாரிக்கும் விதமே அலாதியானது. பக்தர்கள் நாக்குக்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று பார்த்து, பார்த்து சமைப்பார்.

அவர் சமைக்கும் “மிட்டா சாவல்” எனப்படும் சர்க்கரைப் பொங்கல் மிக, மிக ருசியாக இருக்கும். அவரைக்காயைப் பயன்படுத்தி அவர் “வரண்” எனும் சூப் தயாரிப்பார்.
அந்த சூப்பில் கோதுமை மாவை சிறு, சிறு உருண்டைகளாகப் பிடித்து போட்டு பாபா மிதக்க விடுவார். அல்லது கோதுமையை தட்டை ரொட்டிகளாக தயாரித்து மிதக்க விடுவார்.

அப்போது அந்த சூப்பில் இருந்து வரும் வாசனை நாக்கில் எச்சிலை ஊறச் செய்யும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் அம்பில் எனும் ஒரு வகை உணவை பாபா தயாரிப்பார். அம்பில் என்பது கேழ்வரகு மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு, பிறகு அதை தயிருடன் கலந்து தயாரிக்கப்படும் உணவாகும். உணவு தயாரிக்கும் போது பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் ஒரு அற்புதத்தையும் பாபா அடிக்கடி நிகழ்த்தி காட்டுவார். பாத்திரத்தில் போடப்பட்டுள்ள உணவு சரியான பக்குவத்துக்கு வந்து விட்டதா என்பதை அறிய, கரண்டியை விட்டு கிளறி, எடுத்து பார்ப்பதுதான் வழக்கம்.

ஆனால் பாபா அவ்வாறு செய்ய மாட்டார். தனது கையையே உணவு கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தக்குள் விட்டு கலக்குவார். தொடவே முடியாத அந்த பாத்திரத்தின் சூட்டை மீறி உணவை கையால் கிளறி விடுவார். பாத்திரத்தின் அடிப்பாகத்தில் இருந்து உணவை எடுத்துப் பார்ப்பார். நாம் அப்படி பாத்திரத்துக்குள் கையை விட்டால், கை வெந்து பொத்து போகும்.

ஆனால் பாபாவுக்கு எதுவுமே ஆகாது. சூடான உணவுக்குள் அவர் கையை நுழைத்து கிளறி விடும்போது புன்முறுவல் பூத்த முகத்துடன் காணப்படுவார். இந்த அற்புதத்தை பக்தர்கள் பார்த்து மெய் மறந்து போவார்கள். உணவு சமைத்து முடித்ததும், பாத்திரங்கள் அனைத்தும் மசூதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அதை கடவுளுக்கு படைத்து பூஜைகள் நடத்தப்படும்.

பிறகு உணவில் ஒரு பகுதியை எடுத்து தனது முதன்மை சீடர்களான மகல்சாபதிக்கும், தத்யா பாட்டீலுக்கும் கொடுத்து அனுப்புவார். இதைத் தொடர்ந்து விருந்து நடைபெறும். பக்தர்களை வரிசையாக உட்கார வைத்து, உணவு பரிமாறப்படும். பாபாவே தம் கைப்பட உணவுகளை எடுத்து வைப்பார்.

சில பக்தர்களிடம் இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு உணவு வகைகளை அன்புடன் கலந்து கொடுப்பார். அவர் உணவு வழங்கும் போது பிச்சைக்காரர்களும், ஏழைகளும் வரிசையில் இருப்பதுண்டு. அவர்களுக்கு கருணையோடு உணவு கொடுப்பார். ஏழை – எளியவர்கள் ரசித்து – ருசித்து சாப்பிடுவதை பாபா கண் இமைக்காமல் பார்ப்பார். ஏழைகள் வயிறு நிறைந்து விட்டது என்பதை குறிப்பால் உணரும் போது பாபா மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

சிலருக்கு அவர் தம் கையால் உணவை எடுத்து ஊட்டி விட்டதும் உண்டு. நினைத்துப் பாருங்கள், அவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பாக்கிய சாலிகள். மிகப்பெரிய புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பாபாவிடம் உணவு வாங்கி சாப்பிடும் கொடுப்பினை அவர்களுக்கு வாய்த்திருக்கும். நீண்ட நாட்கள் பாபா சீரடியில் தனது பக்தர்களுக்காக சமைப்பதை பழக்கமாக வைத்திருந்தார்.

ஒரு தடவை ஒரு பக்தர், “நான் சைவ உணவு சாப்பிட மாட்டேன். அசைவ உணவுதான் வேண்டும்” என்று கேட்டார். அதைக் கேட்டு பாபா கோபப்படவில்லை. அசைவ உணவு தயாரிக்க இயலாது என்று சொல்லவில்லை. அந்த பக்தனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாமிசம் வாங்கி வரச் செய்தார். அந்த மாமிசத்துண்டுகளை சுத்தம் செய்து அசைவ உணவை தம் கைப்பட தயாரித்துக் கொடுத்தார். அவர் தயாரித்த அசைவ உணவும் பக்தர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் சாப்பிடும் விஷயத்தில் பாபா எந்த பக்தருக்கும் எந்த கட்டுப்பாடும் விதித்ததே இல்லை. என்ன வகை உணவு பிடிக்கிறதோ, அதை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று பக்தர்களிடம் கூறுவார். சாய்பாபா தொடங்கி வைத்த உணவு வழங்கும் பழக்கம் சீரடியில் இன்றும் நடைமுறையில் உள்ளது. திருப்பதி போல எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள்.

சீரடிக்கு வரும் ஏழை-எளியவர்கள் அந்த உணவை பாபாவே தருவதாக நம்பி சாப்பிட்டுச் செல்கிறார்கள். தற்போது சாய் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் தங்கள் வீட்டில் உணவு சமைத்து முடித்ததும் அதை முதலில் பாபாவுக்கு படைத்த பிறகே உட்கொள்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அவர்களது வீடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட பாபா விட்டதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

சீரடியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த பாபா, அதேபோன்று மத நல்லிணக்கத்துக்கான ஒரு விழாவையும் தொடங்கி வைத்தார். இன்றும் அந்த விழா சீரடியில் சீரும் சிறப்புமாக நடக்கிறது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply