கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம்

0

எண்ணற்ற பல ஞானிகளும், மகான்களும் இந்நாட்டில் அவதரித்திருக்கின்றனர். அப்படி பலராலும் இன்றளவும் வணங்கப்படும் ஒரு மகானாக குரு ஸ்ரீ ராகவேந்திரர் இருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்படும் ஸ்ரீ ராகவேந்திரர் விரதம் இருக்கும் முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரருக்கு விரதம் மேற்கொள்ள வாரத்தில் வரும் வியாழக்கிழமை சிறந்த நாள் ஆகும். மற்ற நட்சத்திர தினங்களில் வியாழக்கிழமை வந்தாலும் அந்த தினம் பூசம் நட்சத்திரம் தினமாக இருப்பது மிகவும் சிறப்பு. அந்த வியாழக்கிழமை அன்று குரு ஹோரை நேரத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு பூஜை செய்ய சிறந்த நேரம் ஆகும்.

வியாழக்கிழமை தினத்தில் ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, வெற்றிலைப் பாக்கு, பழம், வாசமுள்ள மலர்கள், தூப தீபங்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜையறையை சுத்தம் செய்து, கோலங்கள் வரைந்து, பூஜைக்கு என்று வைத்திருக்கும் மனைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும்.

ராகவேந்திரரின் படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றும் குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை இரண்டு குத்து விளக்கிற்கும் நடுவில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். ராகவேந்திரருக்கு பூஜை செய்ய தொடங்கும் முன்பு முதலில் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டு, பிறகு ஒரு மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து, அதற்கு சந்தனம், குங்குமம், மலர்கள் சூட வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலிய நைவேத்தியங்களை படத்தின் முன் வைத்த பின் ராகவேந்திரருக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் துதித்து பூஜையைத் தொடரலாம்.

மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி எடுத்ததும், கையில் துளசி தளங்களை வைத்துக்கொண்டு எழுந்து நின்று ராகவேந்திரர் மந்திரத்தை சொல்லிக் கொண்டே ராகவேந்திரர் படத்தையும், குத்துவிளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்லிய வாறே வலம் வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்து, ராகவேந்திரர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவர் உங்கள் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்த பின் அவரின் படத்திற்கு முன்பு கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

ஆறு வியாழக்கிழமைகளில் மேற்கூறிய விதத்தில் ராகவேந்திரருக்கு பூஜைகள் செய்ய வேண்டும். ஆறு வியாழக்கிழமைகள் கடந்து வரும் ஏழாவது வியாழக்கிழமை ராகவேந்திரர் பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும். இவ்வாறு நாம் பூஜை செய்து பிரார்த்தனை செய்யும் போது நமது கோரிக்கைகள் அனைத்தும் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் அருளால் நிச்சயம் நிறைவேறும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply