ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் பாத்திரம் துரோகத்துடன் தொடங்கி துரோகத்துடனேயே முடிந்தது!

0


ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் பாத்திரம் துரோகத்துடன் தொடங்கி துரோகத்துடனேயே முடிந்தது. தமிழகத்தில் போராளி இயக்கங்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்த காலம் அது.

இந்திய உளவுத்துறை இயக்கங்களை பிரித்து வைத்து கையாள சதிகளை முடுக்கி விட்டிருந்த போதும் அதற்குப் பலியாகாமல் இயக்கங்கள் ஓரளவு கருத்துடன்பாடுடன் இயங்கிய காலம் அது.

அந்த நேரத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் போராளி இயக்கங்களின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு பொருளாதார உதவி வழங்கவும் ஒருமித்து எல்லோரும் தன்னை சந்திக்குமாறு ஒரு திகதியைக் குறிப்பிட்டு பகிரங்க அறிவித்தலை விடுக்கிறார்.

இந்திய புலனாய்வுத்துறை விழித்துக் கொள்கிறது. கருணாநிதியின் கபட சுயநல அரசியல் உணர்வை அவர்கள் தூண்டி விட்டதன் விளைவாக எம்ஜிஆர் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக தன்னைச் சந்திக்குமாறு இயக்கங்களுக்கு ஊடகங்கள் வழி கருணாநிதி கோரிக்கை விடுக்கிறார். போராளி இயக்கங்களுக்குள் குழப்பம். கருத்து மோதல்.


தலைவர் பிரபாகரன் கருணாநிதி வழியாக இயக்கங்களைப் பிளவு படுத்தும் இந்திய புலனாய்வுத் துறையின் சதியை உணர்ந்து எம்ஜிஆர் அவர்களைச் சந்தித்த பின் பின்பொரு நாளில் கருணாநிதியை சந்திப்பது தான் சரியானது என்பதை வலியுறுத்துகிறார்.

ஏற்கனவே இந்திய சதிக்குள் மெல்ல மெல்ல தம்மை பலியாக்கிக் கொண்டிருந்த இயக்கங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

விளைவு , மெல்ல மெல்ல துளிர் விடத் தொடங்கியிருந்த இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடு இதையொட்டி ஒரு கொதிநிலைக்கு சென்று ஒரு யுத்தமாக வெடிக்கிறது. இது வரலாறு.

இதன் வழி கருணாநிதி எந்த சகோதர யுத்தத்திற்கு தூபமிட்டு வளர்த்து விட்டாரோ பின்னாளில் அவரே புலிகள் மீது அதைப் பாரிய குற்றமாகத் திருப்பவும் தவறவில்லை.

அதன் பின் தமிழக – இந்திய அளவில் தொடர்ந்த ஒவ்வொரு நுட்பமான துரோகத்தின் பின்னும் அவர் இருந்தார். என்ன வேதனையென்றால் அவர் மரணப்படுக்கையில் சுய நினைவிழந்து கிடக்கும் போதும் அவரைக் குறியீடாக்கி ஈழப் போராட்டம் மீதான துரோகம் கட்டியெழுப்பப்படுவது தான்.

பிராந்திய புவிசார் அரசியல் சார்ந்து தமிழகத்திலிருந்து “தமிழீழத்தை” முற்றாக நீக்கம் செய்ய வேண்டிய இக்கட்டில் இந்திய புலனாய்வுத் துறை இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகவே ஜெயலலிதா “கொல்ல” ப்பட்டார். தமிழகத் தமிழர்களையும் தமிழீழத் தமிழர்களையும் எதிரெதிர் துருவங்களாக நிறுத்துவதனூடாகவே அதைச் சாதிக்க முடியும் என்பது வெளிப்படை.


அதுதான் இன்று கருணாநிதி யின் உடலை வைத்து அவருக்கு வெள்ளையடிக்க நுட்பமாக இறக்கி விடப்பட்டிருக்கும் கட்சி தலைவர்கள், அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் என்ற போர்வையிலுள்ள இந்திய லொபி குழாம். அது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கணிசமான வெற்றியாக குவிந்து கொண்டிருக்கிறது.

சாதாரண தமிழக மக்களும், தமிழீழ மக்களும் இதைப் புரிந்து கொண்டு செயற்பட்டாலொழிய இந்தப் பிளவு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

முடிவாக தமிழீழ வரலாற்றைப் பொறுத்தவரை,கருணாநிதி “செத்தும் கெடுத்தார்” என்பதாகவே இருக்கும் என்பதையே இன்றைய நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன.

இதை வரலாற்று பொய்களாலும், புனைவுகளாலும், வாதிடும் தர்க்கங்களினாலும் தற்போது தற்காலிகமாக மறைக்கலாம். ஆனால் உண்மையான வரலாற்றின் மீது யாரும் இருளைப் பாய்ச்ச முடியாது.

ஓசோவின் புகழ் பெற்ற வாசகம் இது, “தர்க்கம் மிகச் சிறியது, ஆனால் உண்மை அதை விடப் பெரியது. எந்தப் பெரிய தர்க்கத்தினாலும் ஒரு சிறிய உண்மையைக் கூட உங்களால் மூட முடியாது”


தமிழ் தமிழ் என்று முழங்கும் கருணாநிதி மருந்து வாங்க வந்த போராளிகளையும் கைது செய்து பணத்தையும் ஆட்டையப் போட்டதை மனவருத்ததுடன் குறிப்பிட்டு அதை மீட்டுத் தருமாறு நெடுமாறன் ஐயாவிற்கு தலைவர் எழுதிய கடிதம் இது..

கருணாநிதி மீது இப்போது எமக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் வரலாற்றில் அவருக்கான இடத்தைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் நீதி வேண்டி நிற்கும் எமக்கு அது முக்கியம். – Source: tamilwin


– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply