தானாக உருவான வளசரவாக்கம் சீரடி ஆலயம் பற்றி தெரியுமா..?

0

சீரடி சாய்பாபாவுக்கு உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. மனிதராக, மகானாக வாழ்ந்து கடவுள் அவதாரமாக உருவெடுத்த சீரடி சாய்பாபுவுக்கு சமீப காலமாக ஏராளமான ஆலயங்கள் தோன்றி வருகின்றன. தமிழ்நாட்டில் பாபாவுக்கு அதிகளவில் கோவில் கட்டப்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சென்னையில் எத்தனையோ சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது. அந்த வரிசையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயம் சற்று தனித்துவம் கொண்டதாக காணப்படுகிறது.

வியாழக் கிழமைகளில் இந்த ஆலயத்துக் குள் சென்று வருவதற்கே பக்தர்கள் திணற வேண்டிய திருக்கும். வளசர வாக்கம் மேற்கு காம கோடி நகரில் வேல வன் தெருவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வெளியில் இருந்து பார்த்தாலே பாபா நம்மை உள்ளே அழைப்பது போன்று ஒரு உணர்வு தோன்றும். சினிமா படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த ஆலயத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரோ, “இந்த ஆலயத்தை நான் கட்டவில்லை. பாபாவே தனக்கான இந்த இடத்தை தேர்வு செய்து தானே கட்டிக்கொண்டுள்ளார்” என்றார்.

2012-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மே மாதம் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட இந்த ஆலயம் தற்போது 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால் மிக பழமையான ஆலயத்தை நோக்கி பக்தர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் செல் வார்களோ அதே ஆர்வத்துடன், ஆத்மார்த்த உணர்வுடன் இந்த ஆலயத்துக்கும் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆலயம் உருவானதன் பின்னணியில் பல ருசிகரங்களும், ரகசியங்களும் அடங்கி உள்ளன. தமிழ் திரை உலகில் 1996&ம் ஆண்டு முதல் இந்தியன், குஷி, ரன், பாய்ஸ், எனக்கு 20 உனக்கு 18, தூள், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, ஆரம்பம், வேதாளம் உள்பட பல படங்களை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னத்தின் அலுவலகத்தின் ஒரு பகுதியில்தான் இந்த ஆலயம் உள்ளது.

இத்தனைக்கும் ஏ.எம்.ரத்னம் ஆரம்ப காலங்களில் சீரடி சாய்பாபாவின் பக்தனாக இருந்தது இல்லை. அவர் சபரிமலை அய்யப்பனின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 41 ஆண்டுகளாக அவர் ஒரு ஆண்டுகூட இடைவெளி விடாமல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்று வருகிறார். அவரது மனதில் சீரடி சாய்பாபா மெல்ல மெல்ல இடம் பிடித்தார். அது எப்படி என்பதை ஏ.எம்.ரத்னமே சொல்கிறார். கேளுங்கள்….

பொதுவாகவே நான் பழமையான ஆலயங்களை தேடிச் சென்று வழிபடுவேன். தமிழகத்தில் அறுபடை வீடுகள், சிவாலயங்கள் உள்பட பல பழமையான ஆலயங்களுக்கு சென்று இருக்கிறேன். அப்படிதான் மும்பைக்கு செல்லும்போது சீரடிக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் எனக்கு முன்பே சீரடி சாய்பாபா என் இல்லத்துக்குள் வந்து விட்டார்.

எனது மனைவி பத்மஜா மிக சிறந்த பாபாவின் பக்தை. நெல்லூர் மாவட்டத்தில் வளர்ந்த அவர் சிறு வயதிலேயே சீரடி சாய் பாபாவால் ஆட்கொள்ளப்பட்டவர். சிறு வயதில் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சுற்றுலா செல்வதற்காக 3 காலணா (75 காசு) கேட்டிருக்கிறார். அவரது தந்தை கொடுக்கவில்லை.
இதனால் அவர் அழுதுக்கொண்டே பள்ளிக்கு சென்று இருக்கிறார். அப்போது வழியில் உள்ள சீரடி பாபா ஆலயத்தில் இருந்து அவரது பெரியப்பா வெளியில் வந்திருக்கிறார். “ஏன் அழுகிறாய்?” என்று விசாரித்துள்ளார். அதற்கு பத்மஜா, “சுற்றுலா செல்ல 3 காலணா கேட்டேன். அப்பா தரவில்லை” என்று சொல்லி இருக்கிறார்.

உடனே அவரது பெரியப்பா தனது சட்டை பைக்குள் கையை விட்டு வெளியில் எடுத்து இருக்கிறார். அவரது கை நிறைய காலணா காசுகள் இருந்து இருக்கிறது. உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள் என்று சொன்னாராம். ஆனால் பத்மஜா, 3 காலணா போதும் என்று சொல்லி 3 மட்டும் எடுத்து இருக்கிறார். அன்று இரவு அவரது தந்தை, “சுற்றுலா செல்ல காசு கேட்டாயே இந்தா வைத்துக் கொள்” என்று கொடுத்து இருக்கிறார்.

அதற்கு பத்மஜா, “பெரியப்பா தந்து விட்டார்கள்” என்று சொல்லி உள்ளார். அவரது தந்தையால் நம்ப முடியவில்லை. ஏனெனில் பத்மஜாவின் பெரியப்பா யாருக்குமே ஒரு பைசா கூட கொடுக்காதவர். அவர் எப்படி கொடுத்து இருப்பார் என்று பத்மஜா தந்தை விசாரித்துள்ளார். அப்போது பத்மஜாவின் பெரியப்பா, “நான் காசு கொடுக்கவில்லை” என்று உறுதிபட கூறியுள்ளார்.

அதன் பிறகே “பத்மஜாவுக்கு மூன்று காலணா கொடுத்தது சீரடி பாபா” என்பதை அனைவரும் அறிந்து மகிழ்ந்துள்ளனர். உடனே பாபா ஆலயத்துக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். இப்படி எனது மனைவியின் சிறு வயதிலேயே அவருக்கு பாபாவின் அருள் கிடைத்து விட்டது. அதனால்தானோ என்னவோ அவர் எப்போதுமே சீரடி சாய்பாபாவின் நினைவிலேயே இருப்பார்.

வீட்டில் ஆங்காங்கே பாபாவின் சிலைகளை வாங்கி வைத்தார். அவற்றில் இருந்து மிகவும் பாசிட்டிவ்வான அலைகள் வருவதை நான் உணர்ந்தேன். அதிலிருந்து எனக்கும் பாபா மீது தனி ஈடுபாடு ஏற்பட்டது. இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் முன்பு எனது அலுவலகத்தின் தோட்டம்தான் இருந்தது. எனது அலுவலகத்துக்கு வருபவர்கள் இங்கிருந்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

ஒருநாள் என் மனைவி இந்த இடத்தில் பாபா சிலை ஒன்றை வையுங்கள். இங்கு வருபவர்கள் அவரை வழிபட்டு செல்லட்டும் என்று கூறினார். நானும் சரி சொன்னேன். பாபா சிலையை எங்கு வைப்பது என்று யோசித்த போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னற்றம் ஏற்பட்டது. முதலில் சுவர் ஓரத்தில் சிலையை வைக்கலாம் என்று நினைத்தேன். பிறகு மரத்தடியில் அவரை வைக்க முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மரத்தடியில் மிக சிறிய ஒரு அறை கட்டலாமா? என்று யோசனை தோன் றியது.

இதைத் தொடர்ந்து பக்தர் கள் நிற்பதற்கு அரங்கம் கட்டலாமா? என்ற யோசனை பிறந்தது. இப்படி ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து கடைசியில் அது ஒரு ஆலயத்தின் வடிவுக்கு வந்து நின்றது. உடனடியாக அந்த இடத்தில் பாபாவுக்கு ஆலயம் கட்ட ஏற்பாடு நடந்தது. அந்த வகையில் இந்த ஆலயம் பாபா தனக்காக தானே கட்டிக் கொண்ட ஆலயம்தான் என்று சொல்ல வேண்டும்.

ஆலயம் கட்டுமானப் பணிகள் நடந்தபோது துனி கட்ட வேண்டும் என்றார்கள். துனி பற்றி அப்போது எனக்கு எதுவுமே தெரியாது. பாபா சீரடியில் துவாரகமாயில் வசித்தபோது அவரால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா தீபம்தான் துனி என்று அழைக்கப்படுகிறது. அதுபோன்று துனியை இந்த ஆலயத்திலும் கட்ட ஒருவர் உதவி செய்தார்.

சீரடியில் பாபா ஏற்றி வைத்த அணையா தீபத்தில் இருந்து நெருப்பு எடுத்து வரப்பட்டு இங்கு துனி அமைக்கப்பட்டுள்ளது. சீரடியில் செய்யப்படுவது போன்றே இங்கு 4 நேர ஆரத்தி பாபாவுக்கு நடத்தப்படுகிறது. இதற்காக சீரடியில் இருந்து அர்ச்சகர்களையும் அழைத்து வந்துள்ளோம்.

சீரடியில் யுகாதி, ராமநவமி, குருபவுர்ணமி, விஜயதசமி, தத்தாத்ரேயர் ஜெயந்தி ஆகிய 5 விழாக்களும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதே போன்று இங்கும் விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலை உயிரோட்டமானது. அதை நேரில் பார்த்து அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்களுக்குதான் அந்த சிறப்பு தெரியும்.

இந்த ஆலயத்தில் பாபாவின் சிலை எப்படி அமைய வேண்டும் என்று அவரே எனக்கு கண்ணில் காட்டி இருந்தார். அதற்கேற்ப சிலைகள் ஜெய்ப்பூரில் இருப்பதாக கேள்வி பட்டேன். சிரித்த முகத்துடன் உட்கார்ந்த நிலையில் பாபா இருக்கும் சிலையை தேடினேன். நீண்ட தேடுதலுக்கு பிறகு ஜெய்ப்பூரில் இந்த சிலை கிடைத்தது. அதைத்தான் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளோம்.

மற்ற சிலைகள் அனைத்தும் பைபர் கிளாசால் செய்யப்பட்டவை. ஒரு தடவை சினிமா கலை இயக்குனர் தோட்டாதரணி வந்திருந்தபோது பிரமாண்டமான பெருமாள் சிலை செய்ததாக கூறினார். உடனே நாங்கள் அதே போன்று பாபாவுக்கும் பெரிய சிலை செய்ய சொன்னோம். அதன்படி 9 அடியில் விஸ்வரூப பாபா சிலை செய்து இங்கு நிறுவப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆலயத்துக்கும் விஸ்வரூப சீரடி சாய்பாபா மந்திர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தோறும் இங்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கானவர்கள் அன்று வந்து வழிபடுகிறார்கள். நிறைய பேரின் வாழ்வில் இந்த ஆலயத்தின் பாபா அற்புதங்கள் செய்து இருக்கிறார். தாங்கள் நினைத்ததை இந்த பாபா நிறைவேற்றி கொடுக்கிறார். அப்படி காரியம் நிறைவேறிய பிறகு பலர் பாபாவின் அற்புதத்தை சொல்கிறார்கள். அனைத்து மதத்தினரும் பாபாவை இங்கு வழிபட்டு செல்வது சிறப்பான ஒன்றாகும்.

பாபாவை குருவாகவோ, தந்தையாகவோ, மகானாகவோ நினைத்து சரணடைந்தால் போதும். அவர் நிச்சயம் நம் வாழ்வில் அதிசயம் செய்வார். இந்த ஆலயத்தை நாங்கள் கட்டவில்லை. அவராகவே கட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை.

இவ்வாறு படஅதிபர் ஏ.எம்.ரத்னம் கூறினார்.

இந்த ஆலயத்தின் பொறுப்பாளராக பாலகிருஷ்ணன் இருக்கிறார். அவர் சாய்பாபாவின் மிக தீவிரமான பக்தராக திகழ்கிறார். அவர் கூறுகையில், “என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை பாபா நிகழ்த்தி இருக்கிறார். ஒரு தடவை நான் மரத்தில் இருந்து விழுந்து விட்டேன். நான் எழுந்து நடக்கவே 5 வருடங்கள் ஆகும் என்றார்கள். நான் இந்த பாபாவைதான் கண்ணீர் மல்க அழைத்தேன். 15 நாளிலேயே எழுந்து விட்டேன்.இரவு 7 மணிக்கு இங்கு வந்து பாருங்கள். அவரையே உற்று பாருங்கள். அவர் உங்களோடு பேசுவார். அந்த அற்புதத்தை நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் உணர முடியும்” என்றார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply