எளிய பக்தர்களை எப்போதும் கை நீட்டி அழைத்து ஆசீர்வதிக்கும் மகான்! – பாபா மகிமைகள்!

0

மனிதர்கள் தங்களின் குறைவான ஞானம் குறித்து வருத்தம் கொள்ளாமல், அதைக் குறித்துப் பெருமிதம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும், கடவுளின் அவதாரம் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் பலரும் தங்களின் தகுதிகள் குறித்து மிகுந்த கர்வம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களையே கண்டிருந்த ஷீரடி மக்களுக்கு, பாபா மிகவும் ஆச்சர்யமாகவும் புதிராகவும் அதேவேளை கொண்டாடப்படவேண்டிய தெய்வமாகவும் திகழ்ந்தார்.

பாபாவைக் கொண்டாட ஷீரடியின் விவசாயிகள் எந்த வேதத்தையும் தேடவில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி அவரைத் துதித்தார்கள். அதுவே பாபாவுக்கும் பிரியமானதாக இருந்தது. எளிய பக்தர்களை அவர் எப்போதும் கை நீட்டி அழைத்து ஆசீர்வதிப்பவராகவே இருந்தார்.

பாபாவின் பல செயல்கள் அதிசயமாக இருக்கும். ஒருமுறை அவர் வெறும் கைகளால் சமைத்தார். மற்றொருமுறை தண்ணீரை விட்டு விளக்கேற்றி ஒளிரச் செய்தார். வெறும் கோதுமை மாவைக் கொண்டு காலராவை ஓடச்செய்தார். இப்படியான அதிசயங்களை பாபா செய்கிறபோதெல்லாம் அவற்றை அவர் எப்படிச் செய்கிறார் என்கிற கேள்வி அவர்களுக்குள் இருக்கவே செய்தது.

ஆனால், பாபாவோ, பக்தர்களின் தேவைகளுக்காகவும் அவர்களுக்கு அறிவுறுத்தவும் அவற்றைச் செய்தாரே அல்லாமல், தன் புகழ் பாடப்படவேண்டும் என்று நினைத்ததே இல்லை. அதனால், மக்களில் சிலர் அவரை ஆராய்வதை வெறுத்தார். அந்தச் சந்தர்ப்பங்களில் அப்படிப்பட்டவர்கள் பாபாவிடம் அடி வாங்குவார்கள், கடும் சொற்களால் வசவுகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவையும்கூட அவர்களுக்கு ஆசீர்வாதமாகவே மாறும்.

பாபா படுப்பதற்கு ஒரு பலகையைக் கொண்டுவந்து கொடுத்தார் நானா சாஹேப். பாபா , அந்தப் பலகையைத் தரையில் போடாமல், அவரிடம் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு கட்டி ஓர் ஊஞ்சலாகத் தொங்கவிட்டார். உண்மையில், அந்தப் பலகை தொங்கும் அளவுக்கு அந்தத் துணிகள் உறுதியானவையல்ல. எப்போதும் அறுந்துகொள்ள கூடிய கந்தல் துணி. ஆனால், பாபா அவற்றைக் கொண்டே கட்டித் தொங்கவிட்டார், அதுவும் நல்ல உயரத்தில். ஒரு மரக் குதிரையோ ஏணியோ இன்றி அதில் ஏறமுடியாது. ஆனால் பாபா அதில் படுத்து ஓய்வு கொள்வார்.

பாபா அப்படிப் படுத்திருக்கும் காட்சியை சில பக்தர்கள் கண்டிருக்கிறார்கள். அந்த ஊஞ்சலின் நான்கு முனைகளிலும் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். பலகை, மெல்லிய காற்றில் மலர்ச்செடி போல ஒய்யாரமாக ஆடும். பாபா அதில் யோக நித்திரை கொண்டிருப்பார். அப்படி அவர் சயனித்திருக்கும்போது அந்த விளக்குகளை விட அதிக ஒளி அவரின் முகத்தில் ஜொலிக்கும். அந்த அற்புதக் காட்சியைக் காண நாளுக்கு நாள் பக்தர்கள் கூட ஆரம்பித்தனர்.

பாபாவை தரிசிக்கவும் அந்த ஆனந்தத்தில் திளைக்கவும் எல்லோருக்கும் உரிமையிருக்கிறது. ஆனால், மனிதர்களின் மனம் விசித்திரமானதில்லையா. பாபா இத்தனை உயரமான ஊஞ்சலில் எப்படி ஏறிப் படுக்கிறார் என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. அதை அறிந்துகொள்ள அவர்கள் எப்போதும் பாபாவை மறைந்திருந்து உளவு பார்க்க ஆரம்பித்தனர். இதை அறிந்த கணத்தில் பாபா, அந்தப் பலகையை உடைத்துப் போட்டார். தங்களின் மடமையை எண்ணி அவரின் பக்தர்கள் வருந்தினர்.

பாபா சொல்லும் தீர்வுகளை, சாதாரண அறிவைக்கொண்டு தெளிய முடியாது. சில நேரங்களில் அவை சம்பந்தமற்றவைபோலத் தோன்றும். அதை யார் எல்லாம் நம்பிக்கையோடு மேற்கொள்கிறார்களோ அவர்கள், உடனடியாகத் தங்கள் பிரச்னைகளிலிருந்து மீள்கிறார்கள். பாலா கண்பத் ஷிம்பி என்கிற பக்தருக்கு மலேரியா ஏற்பட்டது. சகல வைத்தியங்கள் செய்தும் அவருக்குக் குணம் ஏற்படவில்லை. தன் தெய்வமான ஷீரடி நாதனைத் தவிர தன்னைக் காப்பவர்கள் இல்லை என்பதை அறிந்து ஓடிவந்து சரணடைந்தார். பாபா, அவரை எழுப்பி ஆசீர்வதித்தார்.

“தயிர்சாதம் செய்து அதை லட்சுமி கோயில் அருகில் நிற்கும் ஒரு கறுப்பு நாய்க்குக் கொடு” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.

`தயிர் சாதத்தை நாய்க்குக் கொடுப்பதன் மூலம் மலேரியா சரியாகுமா? லட்சுமி கோயில் அருகில் நாய் நிற்குமா… அதுவும் கறுப்பு நாய் ?’ saiஎன்றெல்லாம் அவர் சிந்திக்கவேயில்லை. வேகவேகமாக வீட்டிற்கு வந்து தயிர்சாதம் பிசைந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயிலுக்குச் சென்றார். பாபா சொன்னதைப் போலவே அங்கே ஒரு கறுப்பு நாய் நின்றது. பாலா அதற்கு தயிர்சாதத்தை உருட்டித் தந்தார். நாய் சாப்பிட்டுவிட்டு ஓடியது. அந்த கணத்திலேயே பாலாவின் நோயும் தீர்ந்துவிட்டது.

உண்மையில் நாய்க்குத் தயிர்சாதம் இட்டபோது பாலா குணம் பெறவில்லை. பாபாவின் சொற்களைக் கேட்டு, அதில் நம்பிக்கை வைத்தபோதே அவர் குணமடைந்துவிட்டார். எந்த அளவிற்கு பாலா தன் சொற்களை நம்புகிறான் என்று பார்க்க பாபா ஒரு சிறு பரிகாரத்தை முன்வைத்தார். அதைக் கெடுத்துவிடாதபடிக்கு பாலாவும் அதைச் செய்து நிவாரணம் பெற்றார். பாலா மட்டுமல்ல, சாயியின் பாதங்களில் சரணடைந்துவிட்ட கணத்திலேயே நம் பிரச்னைகளிலிருந்து விடுதலையாகி விடுகிறோம். தாமதமாவதாக நாம் கருதும் காலம் நம் நம்பிக்கையைச் சோதிக்க பாபா செய்யும் திருவிளையாடலே அன்றி வேறில்லை. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply