இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

0

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்.

ராமன்

பகவான் மகா விஷ்ணுவின் 7-வது அவதாரம், ராம அவதாரம். இவர் அயோத்தியை ஆட்சி செய்து வந்த தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாக பிறந்தார். தசரதனின் மூன்று மனைவி யரில் முதலாவது மனைவி கவுசல்யா, ராமனின் தாய் ஆவாள். தசரதரின் இரண்டாவது மனைவி கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக, ராமர் பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியாமல், 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு தம்பி லட்சுமணனும், சீதையும் சென்றனர். வனத்தில் இருந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்றான். சுக்ரீவன் மற்றும் வானரர்களின் துணையோடு, இலங்கைக்குச் சென்று ராவணனை கொன்று, சீதையை மீட்டார் ராமர். அதன் பிறகு அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டார். இந்த அவதாரத்தில் ஒரு சராசரி மனிதனைப் போல, அதே நேரத்தில் அறத்தின் வழி நடப்பவராக ராமர் இருந்தார்.

ரத்தபீஜன்

சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அதன்பலனாக வரம் பெற்றவன் ரத்தபீஜன். தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அவனை, பார்வதிதேவி துர்க்கையாக அவதரித்து வதம் செய்ய வந்தாள். இருவருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் ரத்தபீஜனை துர்க்கை வெட்டினாள். ஆனால் கீழே விழுந்த அவனது ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்து ஒரு அசுரன் உருவானான். சிவபெருமானிடம் இருந்தும் அவன் பெற்றிருந்த அற்புதமான வரம் இதுவாகும். இதனால் திகைத்த துர்க்கை தேவி, உடனடியாக சாமுண்டீஸ்வரி அன்னையின் உதவியை நாடினாள். அதன்படி துர்க்கை ஒவ்வொரு ராட்சசனாக வதம் செய்ய, சாமுண்டீஸ்வரி அந்த அசுரனின் ரத்தம் பூமியில் சிந்தாதபடி குடித்து விட்டாள். இதனால் ரத்தபீஜன் இறந்தான்.

சகாதேவன்

பாண்டவர்களில் இளையவன் சகாதேவன். பாண்டுவின் மனைவி மாதுரிக்கு, அஸ்வினி குமாரர்கள் அருளிய இரட்டைக் குழந்தைகளுள் ஒருவன். கவுரவர்களிடம் சூதாடி பாண்டவர்கள் தங்களின் நாட்டையும், உடைமைகளையும், தங்களையுமே இழந்தனர். இதனால் அவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செல்லும்படி ஆனது. அவர்களது வனவாசத்தில் கடைசி காலத்தை விராட தேசத்து அரசனுக்கு பணிவிடைகள் செய்து கழித்து வந்தனர். சகாதேவன், தன்ட்ரிபலா என்னும் பெயரில் அரண்மனை பசுக்களின் தலைமை பராமரிப்பாளனாக பணியாற்றினான்.

ரதி

காமதேவனின் மனைவிதான் ரதி. காமதேவன் தன்னை சீண்டியதால் கோபம் கொண்ட சிவபெருமான், காமதேவனை சாம்பலாக்கி விட்டார். தனது கணவனின் மறுவாழ்விற்காக ரதி சிவபெருமானிடம் வேண்டினாள். அப்போது சிவபெருமான், “காமதேவனை உயிர்ப்பித்துத் தருகிறேன். ஆனால் அவன் உன் கண்களுக்கு மட்டுமே இனி தெரிவான்” என்று கூறினார்.

ராவணன்

பத்து தலை கொண்டவன், அசுரர்களுக்கெல்லாம் தலைவனாக செயல்பட்டவன், ராவணன். இலங்கையின் அரசன். தன்னுடைய சகோதரன் குபேரனை, இலங்கையில் இருந்து விரட்டி விட்டு, அங்கே தனக்கான சாம்ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டவன். ‘மனிதனைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது’ என்னும் வரத்தை பிரம்மதேவரிடம் இருந்து ராவணன் பெற்றிருந்தான். வரம் பெற்ற பின் அவனது அராஜகம் அதிகமானது. பூமி மட்டுமல்லாது சொர்க்கத்தையும் அவன் ஆட்டிப் படைத்தான். ராவணனின் ஆணவத்தை அழிக்க விஷ்ணு மனித உருவில் ராமனாக அவதாரம் எடுத்தார். சீதையை ராவணன் கடத்திச் சென்றதன் காரணமாக அவனது அழிவு எழுதப்பட்டது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply