சனி பகவான் பிடியில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

நவகிரகங்களிலே மிகவும் பிரசித்திபெற்றவர் சனிபகவான். நவகிரக பரிபாலனத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பல்வேறு விதமான ஆதிக்கம், இலாக்காக்கள் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பொதுகாரகம் என்று தனியே வழங்கப்பட்டுள்ளது. அதுதவிர ஒவ்வொரு லக்னத்திற்கும் தனித்தனியே ஆதிபத்திய பலம் என்று மாறுபட்டு இருக்கும். அந்த வகையில் சனி பகவானுக்கு ஆயுள்காரகன், கர்மகாரகன் என்ற மிக முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தீர்க்காயுள், பூரண ஆரோக்கியம், சகல சௌபாக்கியங்களுடன், நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பது எல்லோரும் விரும்புவதுதான். இந்த மூன்றையும் அருள்பவர் சனிபகவான். இவர் நியாயவான், தர்மவான் நீதிமான் என போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழில் அதிபர், அன்றாடங்காய்ச்சி என எல்லோரும் இவருக்கு சமமானவர்களே.

அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப தன்னுடைய தசா காலங்களிலும், பெயர்ச்சிக் காலங்களிலும் அவரவர்களின் யோக, அவயோகங்களுக்கு ஏற்ப பலா பலன்களை அருள்கிறார். இவருடைய ஆற்றலை பற்றி ஜோதிட சாஸ்திரத்திலும் புராணங்களிலும், இவருடைய பெருமைகள் சொல்லப்பட்டுள்ளது. ‘அவரவர் வினை வழிவந்தனர் யாவரும்’ என்ற திருஞானசம்பந்தப் பெருமானின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் வாங்கி வந்த வரம் என்ற பிறவி வினைப்பயனை அதற்குரிய காலத்தில் நமக்கு கூட்டி வைக்கின்றார் சனிபகவான். எல்லா கிரகங்களும் நம் கர்மவினைக்கேற்ப, பூர்வ புண்ணிய பலத்திற்கோ நன்மை, தீமைகளை வழங்குகின்றன. அந்த வகையில் சனி பகவானும் அதே பரிபாலனத்தைத்தான் செய்கிறார் ஆனால், மிகவும் கொடூரமான கஷ்டங்களை தரும் கிரகம் என எல்லோர் மனதிலும் பயம் ஏற்பட்டுவிட்டது. உண்மையிலே சனி பகவான் துன்ப, துயரங்களைத் தருவதில்லை.

மாறாக அவரின் ஆளுமைக் காலத்தில் நமக்கு நல்ல அறிவையும், ஞானத்தையும் தந்து கஷ்ட, நஷ்ட சிரம காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை தந்து நம்மை பண்படுத்துகிறார். ஒருவரின் ஜாதக அமைப்பின்படி அவருக்கு எப்படிப்பட்ட பலா பலன்களை தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சனிபகவான், சர்வ முட்டாள்களைகூட மிகப் பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்துவிடுவார். அதேநேரத்தில் அதி புத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட நிலைகுலையச் செய்துவிடுவார் இவர் 12 ராசிகளை சுற்றிவர சுமார் 30 ஆண்டு காலம் ஆகிறது. இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு அனுபவங்களை ஒரு ஜாதகருக்கு ஏற்படுத்துகிறார். ஆகையால்தான் ஜோதிட சாஸ்திர தத்துவத்தில் 30 ஆண்டுகளை ஒரு குறியீடாக, இலக்காக சொல்கிறார்கள். காரணம் ஒவ்வொரு 30 ஆண்டுகால சுழற்சியில் வாழ்வு, தாழ்வு, உயர்வு, ஏற்றம், இறக்கம், சோதனை, வேதனை, சாதனை என பல அம்சங்கள் மாறி மாறி வரும்.
பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு ஜாதகத்தில் திசாபுக்திகள் நீச்சமாகவும், இறக்கமாகவும், சத்ரு விரய ஸ்தான அமைப்புக்களுடனும் கோச்சார சனியின் பார்வை சரியில்லாமலும் இருந்தால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்துவிடும். பட்டம், பதவி, தனவிரயம், வழக்கு, விபத்து, தொழில் முடக்கம், குடும்பப் பிரிவு, சொத்து பிரச்னை என்று எல்லா வகையிலும் தோஷம் காட்டும். அதே நேரத்தில் சனி பகவான் மூலம் யோக பலன்கள் நடக்க வேண்டும் என்று ஜாதக அம்சத்தில் இருந்தால் அவர்களுக்கு நடைபெறும் ராஜயோக பலன்களை அளவிட முடியாது. எங்கும் எதிலும் வெற்றி அஷ்ட ஐஸ்வர்ய செளபாக்கிய யோகமும் கிட்டும். நவகிரக வழிபாட்டு ஆகம நூல்களில் சனியின் செயல்கள் பற்றி பல்வேறு விதமான புராண இதிகாச கதைகள் கூறப்பட்டுள்ளது. இந்திரன் முதல் கொண்டு பல மகான்கள் சனிபகவானின் பாகுபாடு இல்லாத நீதி பரிபாலனத்தில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள முடியவில்லை என்பதை காட்டுகிறது.

இந்த புராண வரலாறுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அவரவர் பிரஸ்தப்படி அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான் என்பதாகும். திருக்கச்சி நம்பிகள் சனிக்கிரகம் ஒருவருக்கு 71/2 சனி என்ற நிலையை பெறும்போது சுப, அசுப பலன்கள் இருக்கும் என்பது சாஸ்திர வழிமுறையாகும். இறைவனின் அடியாட்கள், மகாராஜாக்கள் மகான்கள் போன்றவர்களை பிடிக்கும்போது அவர்களின் இறைத்தன்மை கருதி நான் உங்களை பீடிக்கப் போகிறேன் என்று சொல்வார் அவர்களும் உங்கள் தர்ம பரிபாலனத்தை தாராளமாக செய்யலாம் என்று இசைவு தெரிவிப்பார்கள். அந்த வகையில் பஞ்சாச்யார்களில் ஒருவர் திருக்கச்சி நம்பிகள் இவர் யோக புருஷன், இறைவனுடன் ஏகாந்தத்தில் பேசும் மகா பாக்கியத்தைப் பெற்றவர். இவரை சனிபகவான் நெருங்கி தங்களை நான் பிடிக்க வேண்டிய காலம் வந்துள்ளது என தெரிவிக்க, அதற்கு நம்பிகள் இசைந்து ஒன்றைக் கேட்டார்.

சனைச்சரனே என்னை நீ பிடிப்பதனால் எனக்கு எந்த இடையூறும் இல்லை ஆனால், பகவத் கைங்கர்யத்திற்கு எந்தவிதமான குந்தகம் வந்தவிடக்கூடாது என நினைக்கிறேன் அதனால் 71/2 ஆண்டு என்பதை குறைத்துக் கொள் என்று சொல்ல சனியும் தங்களை 71/2 நாழிகை பிடித்துக் கொள்கிறேன் என்று சொல்ல அதற்கு நம்பிகள் ஒப்புக் கொண்டார். அதன்படி அந்த கால கட்டம் வந்தபோது சனி தன் ஆதிக்கத்தை அவர் மீது காட்டினார். திருக்கச்சி நம்பிகள் வழக்கம்போல் தம்முடைய இறை கைங்கர்யத்தை ஆலயத்தில் செய்துவிட்டு தம் இடத்திற்கு திரும்பினார். அப்பொழுது கோவில் அர்ச்சகர் இறைவனுக்கு திருவாராதனம் செய்ய தங்க வட்டிலைத் தேடினார், வட்டிலை காணவில்லை.

உடனே அர்ச்சகர் வட்டிலை காணவில்லை அந்தரங்க கைங்கர்யம் செய்பவர் நம்பிகள்தாம் அவரிடம் கேட்க வேண்டும் என்று அதிகாரியிடம் தெரிவித்தார். அதிகாரி தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார். எல்லா இடங்களிலும் தேடச் செய்தார், தேடினார், கிடைக்கவில்லை. கடைசியில் வேறு வழி இல்லாமல் நம்பிகளிடம் சென்று கேட்டார்கள். இப்படி ஒரு சூழ்நிலை பழி வந்துவிட்டதே என்று நம்பிகள் துடித்தார். சற்று நேரம் கழித்து அர்ச்சகர் முதலானோர் ஆலயத்தில் இருந்து ஓடிவந்து தங்க வட்டில் உருண்டு பகவானுடைய பாத பீடத்தின் அடியில் கிடந்திருந்ததை தெரிவித்தனர். பின்பு அனைவரும் நம்பிகளிடம் வருத்தம் தெரிவித்து தவறுக்கு வருந்தினர். நம்பிகள் மட்டும் சனியின் கால நேரம் என்பதை உணர்ந்து கொண்டார். ஏழரை நாழிகை நீங்கி விட்டபடியால் வட்டிலும் கிடைத்தது பழியும் அகன்றது.

சனியின் கோச்சார பலன்

சனிகிரகம் ஒரு ராசியில் அதிகபட்சமாக 30 மாதங்கள் வரை இருப்பதால் சனிப் பெயர்ச்சி என்பது மிகவும் பிரசித்தம். ஒரு ஜாதகத்தில் அவரவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனி பகவான் கடந்து செல்லும்போது ஏழரைச் சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதே போல் ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ஏழாம் வீட்டில் இருக்கும்போது கண்ட சனியாகவும் எட்டாம் வீட்டில் அமரும்போது அஷ்டம சனியாகவும் பரிபாலனம் அமைகிறது. நமக்கு குடும்பத்தில் கஷ்ட, நஷ்டங்கள், உடல் நலக்குறைவு, விபத்துக்கள், தொழில், வியாபாரம் மந்தம், கடன், நஷ்டம், இடமாற்றம், பதவி இறக்கம், கோர்ட், போலீஸ், வீண் வம்புகள், வீட்டில் பிள்ளைகள் மூலம் பிரச்சனைகள் வரும்போது உன்னை 71/2 சனி பிடித்து ஆட்டுகிறது என்று சொல்லி திட்டுவார்கள். மாறாக உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறான், உனக்கு கேது பிடித்து இருக்கிறது என்று பலரும் சொல்வதில்லை. ஜாதகத்தில் எந்த கிரக தசா, புத்தி மூலம் ஒருவருக்கு சிரமம், கெடுதல் வந்தாலும் சனிதான் காரணம், அவர் தலைதான் உருளும். இதில் சிறிதளவு உண்மை கிடையாது. இதைப் போன்ற கட்டுக் கதைகள் சமூகத்தில் வேருன்றிவிட்டது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை, யோகம், அதிர்ஷ்டம், கஷ்ட நஷ்டங்களைத் தருகின்ற தன்மை அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால் சனி மட்டுமே கெடுபலன்களைத் தருவார் என்ற தவறான கருத்து பரவலாக நம்மிடையே ஏற்பட்டுவிட்டது.

ஏழரைச் சனியின் சுபம்

சனி பகவான் தனது தசா காலங்களில் அந்தந்த லக்ன ஆதிபத்தியத்திற்கேற்ப யோக பலன்களை தருவார். கோச்சார நிலையிலும் பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். மக்கள் செல்வாக்கு, அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும், கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச் சனியில் விரய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக்கொடுப்பார். வராத பணம், கடன்கள் எல்லாம் வசூலாகும். கூடவே அலைச்சல், சில அநாவசிய செலவுகளும் இருக்கும். நான்கில் சனி வரும்போது அலைச்சல், அதிகமான பிரயாணங்கள், இடமாற்றம், சுககுறைவு தாய்க்கு தோஷம் என்று இருந்தாலும், பூர்வீக சொத்துக்களை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்கியம் கிடைக்கும்.

அவரர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும், அது கூடுமானவரை அவசிய சுப செலவுகளாக இருக்கும். வாங்கிய கடனை திருப்பி அடைப்பீர்கள். பேச்சில் நிதானம், கவனம் தேவை. பஞ்சாயத்து, ஜாமீன் போன்றவைகள் கூடாது. பயணத்தின் போது கவனம் தேவை. பொருள் உடைமைகள் இழப்பு ஏற்படும். வண்டி ஓட்டும்போது கவனம் தேவை. விபத்துக்கள் வரலாம். ஏதாவது ஒரு வகையில் குடும்பத்தில் யாருக்காவது மருத்துவச் செலவுகள் வரும். குடும்ப பூர்வீக சொத்துக்கள், பாகப் பிரிவினை தடைகள் நீங்கி நல்லபடியாக முடியும். தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் வரும்போது ஏறத்தாழ இதே பலன்கள் அமையும். கடன் சுமை குறையும், சிலருக்கு பல காரணங்களுக்காக கடன் வாங்க நேரிடும். பெண்கள் சொந்த பந்தங்களிடம் அவர்களின் குடும்ப உள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பொதுவாக வாழ்க்கை என்பது ஏற்ற இறக்க, நிறைகுறைகள் உள்ளதுதான் அதை கிரகங்கள் அந்தந்த கால கட்டங்களில் நமக்கு தருகின்றன.

சனி பகவானின் பொதுவான யோக பலன்களில் மிக முக்கியமானது ஸ்தான பலம். சனி இருக்கும் ஸ்தானத்தை பலப்படுத்துவார், விருத்தி செய்வார். அவர் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் இருந்தால் மிக அதிக பலம். குரு இருக்கும் இடம்பாழ். சனி இருக்கும் இடம் விருத்தி ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி இருந்தால் கரிநாக்கு என்று சொல்வார்கள். இவர்கள் எதையாவது தேவை இல்லாமல் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அனுபவ ஞானிபோல் பேசுவார்கள். சில சமயங்களில் இவர்களின் வாக்கு பலிக்கும். கையில் பணம் இருந்தால் ஏதாவது செலவுகள் வந்துகொண்டே இருக்கும். பலருக்கு அடுத்தவர்
களின் பணம் கையில் புரளும். இப்படிப்பட்டவர்களுக்கு பினாமியாக இருக்கும் யோகம் கிடைக்கும். பெரும்பாலும் சிறு வயது முதலே குடும்பத்தை விட்டு வேறு இடத்தில் வளர்வார்கள்.

அயல்நாட்டில் பணிபுரியும் யோகமும், அங்கு சொத்து வாங்கும் யோகமும் இவர்களுக்கு கூடி வரும். ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூதோஷம் ஏற்படுகிறது. ஒரே ராசியில் சனி சந்திரன் இருப்பது, இருவருக்கும் பார்வை சம்பந்தம் ஏற்படுவது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது போன்றவைகள் எல்லாம் புனர்பூதோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே. திடீர்திடீரென்று நடக்கும். முயற்சி செய்யும் நேரத்தில் முடியாது. எல்லாம் தானாக கூடிவரும். திருமண விஷயமும் திடீரென்று மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் எதிர்பாராதவிதமாக கூடிவந்துவிடும். இவர்களின் மனம் அமைதி இல்லாமல் இருக்கும் சலனம், சபலத்திற்கு அதிக வாய்ப்பு உண்டு. எந்த ஒரு காரியம் முடியும் வரை நிச்சயமற்ற தன்மைகள் இருக்கும். சிலருக்கு நிச்சயதார்த்தம், ஏன் திருமண தேதிகள் கூட மாறலாம்.

வழிபாடு பரிகாரம்

பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் என்பது பகவான் ரமணரின் வாக்காகும். இதற்கேற்ப மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நோயாளிகள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் சுமப்போர் துப்புரவுத் தொழிலாளிகள், தொழுநோயாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் தொண்டும், உதவியும் சனிக்கு மிகவும் பிடித்தமானதாகும். தர்மம் தலைகாக்கும், ஏற்போருக்கு இட்டது என்றாயினும், எங்காயினும் வரும் என்பதற்கேற்ப இல்லாதோர், இயலாதோர், வறுமையில் வாடுவோருக்கு நாம் காட்டும் கருணை நம்மைக் காக்கும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமாளின் வாக்கும் அதுவே. ஏழைகளுக்கு குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் தரலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை, மருத்துவ உதவிகள் செய்யலாம். சனிக்கிழமை மற்றும் சனி நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நாட்களில் அன்னதானம், வஸ்திரதானம் செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வணங்கலாம். சனிப் பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்து கருப்பு உளுந்து கலந்த கிச்சடி செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply