
சாய்பாபா, தனக்கான உணவு பற்றி ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. சீரடியில் உள்ள 5 பேரின் வீடுகளில் சென்று யாசகம் கேட்டு உணவு பெறுவதை தம் கடைசி காலம் வரை வழக்கத்தில் வைத்திருந்தார். பக்தர்களுக்கு உணவூட்டுவதற்கு சாய்பாபா முடிவு செய்தார். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் சாய்பாபா தம் கையால் சமைத்து உணவு கொடுப்பார். சீரடி தலத்தில் பல தடவை இந்த அற்புதம் நடந்துள்ளது. அவர் சமையல் செய்யப் போகிறார் என்றால் காலையிலேயே தெரிந்து விடும். சமையல் செய்வதற்கு அவர் யாரிடமும், எத்தகைய உதவியும் பெற மாட்டார் உத்தரவிடவும் மாட்டார். நூறு பேருக்கு சமையுங்கள், இரு நூறு பேருக்கு சமையுங்கள் என்று பாபா ஒரு வார்த்தை சொன்னால் போதும், சமைப்பதற்கு தயாராக எத்தனையோ பேர் இருந்தனர்.
அவர் கண் அசைவு உத்தரவுக்காக சீரடியில் ஏராளமானவர்கள் காத்து இருந்தனர். ஆனால் சாய்பாபா உணவு தயாரிக்கும் விஷயத்தில் யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள மாட்டார். எல்லாவற்றையும் தாம் ஒருவராகவே செய்வார். சாய்பாபாவே நேரில் வந்து தங்களுக்கு பிரசாதம் தந்து ஆசீர்வதிப்பதாக ஒவ்வொரு பக்தரும் நினைக்கிறார்கள். அதிலும் அன்னதான செலவை ஏற்றுக் கொள்பவர்கள் பாபா தம்மை பரிபூரணமாக ஆசீர்வதிக்கிறார் என்று நம்புகிறார்கள். யார் ஒருவர் தம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறாரோ, அவரை பாபா தம் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பதாக நம்பிக்கை உண்டு. பாபாவுக்கு யாராவது ஒரு பக்தர் ஏதாவது உணவுப் பொருட்களைப் படைத்து அதை ஆலயத்துக்கு வரும் மற்றவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பதுதான்.

அதிலும் குறிப்பாக வியாழக்கிழமைகளில் பெரும்பாலான சாய்பாபா தலங்களில் அன்னதானம் நடத்தப்படுகிறது. ஏழைகள் முதல் கோடீசுவரர்கள் வரை வரிசையில் வந்து நின்று அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். பொதுவாகவே பக்தர்கள் பசியோடு இருப்பது சாய்பாபாவுக்கு சுத்தமாக பிடிக்காது. யாரும் பட்டினி கிடந்து, உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு தன்னை வழிபட வேண்டாம் என்று சாய்பாபா அறிவுறுத்தி உள்ளார். நன்றாக சாப்பிடுங்கள். பசியாறிய பிறகு நல்ல தெம்பாக இருந்து என்னை ஆராதனை செய்யுங்கள் என்றே பாபா கூறியுள்ளார். அதனால்தான் இன்று நாடு முழுவதும் சீரடி சாய் தலங்களில் தானங்களில் உயர்ந்த அன்னதானம் சீரும், சிறப்புமாக நடத்தப்படுகிறது.
ஏழைகள் வயிறு நிறைந்து விட்டது என்பதை குறிப்பால் உணரும் போது பாபா மிகவும் மகிழ்ச்சி அடைவார். சிலருக்கு அவர் தம் கையால் உணவை எடுத்து ஊட்டி விட்டதும் உண்டு. நினைத்துப் பாருங்கள், அவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள். மிகப்பெரிய புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பாபாவிடம் உணவு வாங்கி சாப்பிடும் கொடுப்பினை அவர்களுக்கு வாய்த்திருக்கும். சாய்பாபா தொடங்கி வைத்த உணவு வழங்கும் பழக்கம் சீரடியில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சீரடிக்கு வரும் ஏழை,எளியவர்கள் அந்த உணவை பாபாவே தருவதாக நம்பி சாப்பிட்டுச் செல்கிறார்கள். தற்போது சாய் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் தங்கள் வீட்டில் உணவு சமைத்து முடித்ததும் அதை முதலில் பாபாவுக்கு படைத்த பிறகே உட்கொள்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அவர்களது வீடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட பாபா விட்டதில்லை என்பது நிதர்சனமான உண்மை. – Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
