
தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
வழிபட்டால்…. வாழ வைக்கும்…. வக்கிர காளியம்மன் கோவில்
தலக்குறிப்பு :
கோவிலின் பெயர்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்
கட்டியவர்: ஆதித்திய சோழன் என்னும் சோழ மன்னன்
காலம்: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இறைவனின் திருநாமம்: அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்
தேவாரத் திருப்பெயர்: அருள்மிகு சந்திரசேகர பிறையணி கொன்றயினான்
இறைவியின் திருநாமம்: அருள்மிகு அமிர்தாம்பிகையம்மன்
தேவாரத் திருப்பெயர்: அருள்மிகு வடிவாம்பிகையம்மன்
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சூரிய புட்கரணி. சந்திர புட்கரணி
ஆறு: வராக நதி (எ) சங்கராபரணி
பூஜை: மூன்று காலம்
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.
பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.
அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி என எந்த நகரத்திலிருந்து வந்தாலும் சுமார் 27 கி.மீ. தொலைவில் திருவக்கரை அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 10 கி.மீ. தூரம் சென்றால் திருவக்கரையை அடையலாம்.
அதே போல் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் திருக்கனூர் என்னும் இடத்தில் இறங்கி வடக்கு நோக்கி சுமார் 5 கி.மீ. சென்றாலும் இக்கோவிலை அடையலாம். ‘வராக நதி’ என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இத்தல இறைவன் சந்திரமவுலீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் எங்கும் காண முடியாத அரியவகையான மூன்று முகலிங்கமாக அருள்பாலிக்கின்றார்.
ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.
திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.
இத்திருக்கோவில் ஆதித்ய சோழன் என்னும் சோழ மன்னரால் ஏறக்குறைய 2000-ம் ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது எனத் தெரிகிறது. பின்னர் கி.பி.907 முதல் கி.பி.953 வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த, சிவபக்தனாக விளங்கிய முதலாம் பராந்தகச் சோழனின் மகனான கண்டராதித்தச் சோழனால் கி.பி.950 முதல் கி.பி.957 முடிய உள்ள காலத்தில் திருக்கோவில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவன் பெயரிலேயே கண்டராதித்தன் ‘‘திருக்கோபுரம்’’ எனவும் ‘‘கண்டர் சூரியன் திருக்கோபுரம்’’ எனவும் வழங்கப்பட்டதாக வரலாற்றுச் செய்தி கூறுகிறது.
கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பாடல் பெற்றகோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருமுதுக்குன்றம், தென்குரங்காடு துறைபோன்ற கோவில்களைக் கற்றளியாக்கி திருப்பணி செய்துள்ளார். அதே போல திருவக்கரை திருத்தலத்தையும் கற்றளியாக்கி சிறந்ததொரு திருப்பணி செய்துள்ளார். கோவில்களுக்கு தானங்கள்பலவும் செய்துள்ளதை வரலாற்றுச் செய்தி மூலம் அறிய முடிகிறது. மாதேவியாரின் அரிய திருப்பணியால் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் திருக்கோவிலோடு சேர்ந்து அவரது பெயரும் புகழோடு நிலைத்து நிற்கின்றது.
திருவக்கரை கோவிலின் சிறப்புகள்
* இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், நந்தி, கொடிமரம், மூலஸ்தானம் முதலியன நேர்கோட்டில் அமையவில்லை.
* இத்திருக்கோவிலில் இறைவன் மூன்று முகலிங்கமாக காட்சி தருகின்றார்.
* பிரதான சிவத்தலமான இத்திருத்தலத்தில் வரதராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும்.
* குண்டலினி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள பெருமையுடையது இத்திருக்கோவில்.
* இத்திருக்கோவிலில் எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கை காட்சி தருகின்றார்.
* சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது இத்திருக்கோவில்.
* பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது இத்திருக்கோவில்.
* சனிபகவான் வாகனமான காகம் எல்லாத் தலங்களிலும் அவருக்கு வலப்புறமாக இருக்கும். ஆனால் இங்கு அவருக்கு இடப்புறமாக அமைந்து வக்கிரமாக காட்சியளிக்கிறது.
* உலகத்தை ரட்சிக்கும் ஜகன்மாதா இங்கு வக்கிரகாளியாக நமக்கெல்லாம் சரணாகதித் தத்துவத்தை உணர்த்தி அருள்புரியும் திருக்கோலம் ஒரு தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை பலன்கள்
வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்கப்பெற்று வாழ்க்கையில் பயனடைவர். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும்.
திருமணமாகாதவர், பிள்ளைப்பேறு அற்றவர் இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்து வந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நினைத்த காரியம் கைகூட வேண்டுமென்போர் பவுர்ணமி தினத்தன்று வக்கிரகாளி அம்மனை தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி அன்று தரிசித்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பலன் பெற்று வருகின்றார்கள். கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பயனடைகிறார்கள்.
இத்திருக்கோவில் தனியாக அமைந்துள்ள தீப லட்சுமியின் திருக்கோவிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி இந்த அம்மனை கும்பிட்டு மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
