எண்ணியதை நிறைவேற்றும் ஒன்பது அனுமன்கள் வழிபாடு

0

சிறிய திருவடியான அனுமனுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. பிற ஆலயங்களிலும் அனுமன் சந்நதி பக்தர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டு அனுமனுக்குரிய சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சாதாரணமாக அனுமனை, ஒரு கரத்தில் சஞ்சீவி மலையைத் தாங்கி, மற்றொரு கரத்தில் சௌகந்திக மலர் ஏந்திய நிலையில் வடிப்பது வழக்கம். இது போன்ற அனுமன் சிலைகளை 700க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்ரீவியாசராயர் பிரதிஷ்டை செய்துள்ளார். பிரபலமான இந்த திருவுருவத்தைத் தவிர, அனுமனை யோக ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் காட்சி தருகின்ற சதுர்புஜ ஆஞ்சநேயர் போன்ற பல்வேறு திருவுருவங்களில் தரிசிக்கலாம்.

இதுபோன்ற பல்வகை வடிவங்களில் ஒன்பது வகையான திருமேனிகளைக் கொண்ட அனுமனின் ஒன்பது சந்நதிகளை ஒரே ஆலய வளாகத்தில், ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகரில் தரிசிக்கலாம். இந்த ஆலயம் நவாவதார (ஒன்பது உருவங்கள்) ஆஞ்சநேயர் ஆலயம் என்று பிரபலமாகியிருக்கிறது. ஆலய நுழைவாயிலில் சுமார் 20 அடி உயரமான, நின்ற நிலையில் உள்ள ஸ்ரீஅனுமன் திருவடிவம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் பிரதான சந்நதியில் முதலாவது அனுமனாக ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கிறார். சுமார் பத்து அடி உயரத்தில் காட்சி தரும் இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் முகத்தோடு, தசாவதாரங்களில் முக்கியமான அவதாரங்களான வராகம், நரசிம்மர் போன்ற முகங்களும், திருமாலின் இன்னொரு பிரபலமான அவதாரமான ஹயக்ரீவர் முகம் மற்றும் பெரிய திருவடியான கருடன் முகமும் உள்ளன.

ஐந்து முகங்கள், பத்து கரங்களோடு இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த சந்நதியின் இருமருங்கிலும் இதர அனுமன் சந்நதிகள் உள்ளன. இரண்டாவதாக ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் அபய ஹஸ்தத்தோடு, தாச ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். மூன்றாவது சந்நதியில் அனுமன் ஸ்ரீ வீர ஆஞ்சநேயராக, இடுப்பில் வலக்கையை வைத்து, கதை ஏந்தி காட்சி தருகிறார். இவரை வழிபட மனோபயம் தீர்ந்து வீரம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்து நான்காவது சந்நதியில் அனுமன் ஸ்ரீ விம்சதி புஜ (20 கரங்கள்) ஆஞ்சநேயராக இருபது கரங்களோடு காட்சி தருகிறார். அனுமன் பிரம்மாவை உபாசித்து அனுக்கிரகம் பெற்றதாகவும், பிரம்மாவின் கோரிக்கைக்கேற்ப இருபது கரங்களோடு விம்சதி ஆஞ்சநேயராகக் காட்சி தருவதாக ஐதீகம்.

ஐந்தாவது சந்நதியில் துர்வாச முனிவரை அனுமன் வழிபட்டு விஸ்வரூபத்தோடு பதினெட்டு கரங்கள் பெற்று ஸ்ரீ அஷ்டாதச (அஷ்டம் 8, தசம் 10) புஜ ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். ஆறாவது சந்நதியில் அனுமன் தன் தேவியான ஸ்ரீ சுவர்ச்சலா தேவியை தன் இடது தொடையில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீ சுவர்ச்சலா ஸமேத ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார். சூரிய பகவானிடம் வியாகரணங்களைக் கற்று, நவவியாகரண பண்டிதர் என்ற பெயர் பெற்ற அனுமனின் பக்தியில் மெச்சிய சூரிய பகவான், அனுமனுக்கு தன் புத்திரியான ஸ்ரீ சுவர்ச்சலா தேவினை மணம் செய்து கொடுத்தாராம். ஏழாவது சந்நதியில் அனுமன் நான்கு கரங்களோடு ஸ்ரீ சதுர்புஜ (சதுர் 4) ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். அபய வரத ஹஸ்தத்தோடு, சங்கு சக்கரம் ஏந்தியிருக்கிறார் இவர்.

அடுத்து வருவது முப்பத்தியிரண்டு கரங்களைக் கொண்ட ஸ்ரீ த்வாத்ரும்ச புஜ ஆஞ்சநேயர். ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு ஆயுதத்தை ஏந்தி காட்சி தரும் இந்த எட்டாவது சந்நதி ஆஞ்சநேயரை தரிசித்தால் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒன்பது அனுமன் சந்நதிகளைக் கொண்ட இந்த ஸ்ரீ நவாவதார ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஒன்பதாவது சந்நதியில் அனுமன் தன் இயற்கையான வடிவத்தோடு ஸ்ரீ வானராஹார எனும் திருப்பெயரில் காட்சியளிக்கிறார். அனுமனின் சகஜ ரூபமான இந்தத் திருமேனியில் அனுமன் தலைப்பாகையோடு, வலக்கை அபய முத்திரையாகவும், இடக்கையில் கதையை ஏந்தியும் காட்சி தருகிறார். இவரை வழிபட பக்தர்களின் புத்தி, ஆரோக்கியம், செல்வம் பெரும் என்பது நம்பிக்கை.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply