சீரடி சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

0

என்னை முழுமையாக நம்பு, இனி வரும் நாளெல்லாம் திருநாளே என்று சீரடி சாய்பாபா அடிக்கடி தன் பக்தர்களிடம் கூறுவதுண்டு. பாபாவின் இந்த அறிவுரையை “சிக்“கெனப் பிடித்துக் கொண்டவர்கள் வாழ்க்கையில் சிறப்புப் பெற்றனர்.சில பக்தர்கள் தம் வாழ்வில் வளம் பெருகி, வசந்தம் வீசும் வரை பாபாவை ஆராதிப்பார்கள், மனம் உருகி வழிபடுவார்கள். கணக்கிட முடியாத அளவுக்கு பணம் சேர்ந்ததும், பாபா மீதான பற்றும், பாசமும் அவர்களிடம் இருந்து காணாமல் போய் விடும் அல்லது குறைந்து விடும்.

அப்படி மனம் மாறியவர்களை பாபா விட்டு விடுவதில்லை. மீண்டும் அவர்களை அவர் தன் அன்புப் பிடிக்குள் கொண்டு வந்து விடுவார். சீரடியைச்சேர்ந்த பலரது வாழ்க்கையை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதில் அஜய் பல்போரே என்பவர் வாழ்வில் பாபா நிகழ்த்திய மாற்றங்கள் தனித்துவம் நிறைந்தது. அஜய் பல்போரே சீரடியில் சிறு, சிறு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். சுமாராக வியாபாரம் நடக்கும். சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

பாபா மீது அவருக்கு ஒரு கால கட்டத்தில் அளவு கடந்த மரியாதையும், பக்தியும் ஏற்பட்டது. காலை, மாலை என இரு நேரமும் துவாரகமாயி மசூதிக்கு சென்று சாய்பாபாவை தரிசித்து ஆசி பெறுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அஜய்யின் பணிவு மற்றும் பொறுமை பாபாவையும் கவர்ந்திருந்தது. அவர் மீது பாபா அன்பு காட்டினார். தமக்கு சேவை செய்யும் பலரில் அஜய்யை பாபா அதிகமாக விரும்பினார்.

ஒருநாள் பாபாவிடம் அஜய், “நான் கங்காதாம் யாத்திரை செல்லலாம் என்று விரும்புகிறேன். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எப்போது என்னுடைய அந்த ஆசை நிறைவேறுமோ தெரியவில்லை” என்றார். அதற்கு பாபா, “அவசரப்படாதே…. கொஞ்சம் பொறுமையாக இரு. நீ காத்திருந்தால் நிச்சயமாக உனக்கு கங்காதாம் யாத்திரை செல்லும் வாய்ப்புத் தேடி வரும்” என்றார்.

சில மாதங்கள் கரைந்தோடியது. அஜய்க்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு வரவே இல்லை. அவரும் அதை சற்று மறந்திருந்தார். திடீரென ஒருநாள் அவரிடம் பாபா, “கங்காதாம் யாத்திரை செல்லவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அஜய், “இல்லை பாபா…. கையில் காசு இல்லாமல் எப்படி செல்ல முடியும்? எனக்கு அந்த பாக்கியம் இல்லை” என்றார் வேதனையுடன்.அவரது இந்த வேதனையை பாபா உடனே போக்கினார். “அஜய், கவலைப்படாதே… அடுத்த வியாழக்கிழமை நீ கங்காதாம் யாத்திரை சென்று வருவாய்” என்றார்.

அஜய்க்கு ஆச்சரியமாக இருந்தது. “அது எப்படி முடியும் பாபா? என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இல்லையே” என்றார். பாபா சிரித்தார். “என் ஆசீர்வாதத்தால் நீ யாத்திரை மேற்கொள்வாய். உனக்கு அதற்கான வழி இன்றே தெரியும்“ என்றார். அஜய்க்கு எதுவும் புரியவில்லை. பாபாவிடம் விடை பெற்ற அவர் மனம் குழம்பியபடி கடை திரும்பினார். கடை முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு வாடிக்கை யாளர்கள் திரண்டிருந்தனர். பொருட்கள் வாங்குவதற்கு முண்டியடித்தனர். “முதலில் எனக்கு கொடு” என்று காசை நீட்டினார்கள்.

நடப்பதெல்லாம் கனவா… என்று ஆச்சரியத்தில் மிதந்தபடி அஜய் சுறுசுறுப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டார். அன்றிரவு கடையை மூடும் முன்பு விற்பனை கணக்கை பார்த்தார். வழக்கமாக விற்கும் பொருட்களை விட மூன்று மடங்கு அதிகமாக பொருட்கள் விற்பனை ஆகி இருந்தது. வருமானமும் கணிசமாக உயர்ந்திருந்தது. மகிழ்ச்சி அடைந்த அஜய் அந்த பணத்தைக் கொண்டு மேலும் புதிய பொருட்கள் வாங்கினார். ஓராண்டில் விற்கும் பொருட்களை ஒரே வாரத்தில் வாங்கிக் குவித்தார். இதனால் கடையில் வியாபாரம் மேலும் அதிகரித்தது.

தனி ஆளாக நின்று அவரால் வாடிக்கையாளர்களை சமாளிக்க இயலவில்லை. எனவே 2 பேரை தன் கடையில் வேலைக்கு அமர்த்தினார். மிகக் குறுகிய காலத்தில் அஜயின் கடை சீரடியில் உள்ள கடைகளில் புகழ் பெற்ற கடையாக மாறியது. கையில் பணம் சேர்ந்து விட்டதால் கங்காதாம் யாத்திரைக்கு செல்ல அஜய் திட்டமிட்டார். குடும்பத்தினருடன் அவர் யாத்திரை சென்றார். ஆனால் அவரது மனம் யாத்திரையில் லயிக்கவில்லை. ஞாபகம் முழுக்க கடை வியாபாரம் மீதே இருந்தது.

கங்காதாம் யாத்திரையை அவசரம், அவசரமாக முடித்துக் கொண்டு அஜய் சீரடி திரும்பினார். முன்பை விட அவரிடம் பண ஆசை அதிகரித்தது. பணம் குவிந்ததால் பகட்டும் அதிகரித்தது. புது பணக்காரன் என்பதால் சீரடி ஊர் மக்களும் அவருக்கு தனி மரியாதைக் கொடுத்தனர். இதனால் அஜய்க்கு பணம் சம்பாதிப்பது தொடர்பான பேராசை மேலும் அதிகரித்தது.

அதிகாலையிலேயே அவர் கடையைத் திறந்து விடுவார். இரவும் நீண்ட நேரம் கழித்தே கடையை மூடுவார். இதனால் அவர் துவாரகமாயி மசூதிக்கு வந்து பாபாவை சந்தித்து ஆசி பெறுவது குறைந்தது. நாளடைவில் பாபாவைப் பார்க்க வருவதே நின்று விட்டது. பாபா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு நாள் அவர் தன் அருகில் அமர்ந்திருந்த தாத்யாவிடம், “ஏன் இப்போதெல்லாம் அஜய் இங்கு வருவது இல்லை என்று கேட்டார். தாத்யாவுக்கு எதுவும் புரியவில்லை. அஜய்யை நேரில் பார்த்து இது தொடர்பாக பேசி விட்டு வருவதாக அவர் கூறினார்.

அன்று பிற்பகல் அஜய் கடைக்கு தாத்யா வந்தார். கடையில் கடுமையான கூட்டம் காணப்பட்டது. அஜய் வியாபாரம் செய்வதில்தான் மும்முரமாக இருந்தார். தாத்யாவிடம் பேச அவர் முன்வரவில்லை. அஜய்யிடம் பேசி விடலாம் என்று தாத்யா மூன்று தடவை முயற்சி செய்தார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த தாத்யா கடை வெளியில் ஒரு பலகையில் உட்கார்ந்து விட்டார். இதுபற்றி பாபாவுக்கு தெரிய வந்தது. அவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். அஜய் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதை நேரில் சென்று பார்த்து முடிவு செய்யலாம் என்று பாபா முடிவு செய்தார்.

அடுத்த நிமிடம் மசூதியில் இருந்து எழுந்து வெளியில் வந்த பாபா, நேராக விறுவிறுவென அஜய் கடையை நோக்கி நடந்தார். அஜய் கடையை நெருங்கியதுமே, நாலாபுறமும் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை பாபா பார்த்தார். என்றாலும் அஜய்யிடம் பேசி விட்டுச் செல்லலாம் என்று நினைத்த அவர், “அஜய்…. அஜய்… என் குழந்தாய்….” என்று அழைத்தார்.

வியாபாரத்தில் மும்முரமாக இருந்த அஜய், பாபா வந்ததையோ, அழைத்ததையோ கவனிக்கவில்லை. பாபா மூன்று தடவை அழைத்தும் அஜய்க்கு கேட்கவில்லை. பாபா வருத்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். அடுத்த நிமிடமே அஜய்யின் கடையில் வாடிக்கை யாளர்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. மறுநாள் அஜய் வழக்கம் போல அதிகாலையிலேயே கடையைத் திறந்தார். ஆனால் தினமும் வரும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரவில்லை. அன்றிரவு அஜய் கணக்குப் பார்த்தபோது வியாபாரம் சற்று குறைந்து இருப்பதை உணர்ந்தார்.

அதற்கு அடுத்த நாள் வியாபாரம் மேலும் குறைந்தது. கடையில் பொருட்கள் இருப்பும் குறைந்தது. பத்தே நாட்களில் அஜய் கடையின் வியாபாரம் படுத்து விட்டது. ஒரு கட்டத்தில் கடையில் முழு நேரமும் உட்கார்ந்த போதும் ஒரு வாடிக்கையாளர் கூட வராதது கண்டு அஜய் ஆச்சரியப்பட்டார். கடையில் வியாபாரமே இல்லாமல் அஜய் இதுவரை சம்பாதித்த பணமும் சேமிப்பில் இருந்து கரைந்தது.

வெகு விரைவிலேயே அவர் நிலைமை மோசமாகி விட்டது. குறிப்பாக ஒரு நேர சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பரிதாப சூழ்நிலைக்கு அஜய் தள்ளப்பட்டார். நான்கே மாதத்தில் கடையை இழுத்து மூடி விட்டார். வியாபாரமே நடக்காத கடையை திறந்து வைத்திருந்து என்ன பலன் கிடைக்கப்போகிறது… என்ற சலிப்பு அஜய்க்கு ஏற்பட்டு இருந்தது. கடைக்கு போகப் பிடிக்காமல் அவர் வீட்டில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது அவர் மனைவி வந்தார். அவள், “இன்று வியாழக்கிழமை. சாய்பாபா வீற்றிருக்கும் மசூதியில் சிறப்பு பூஜை நடத்துவார்கள். பிறகு பிரசாதம் தருவார்கள். அந்த பிரசாதத்தை வாங்கி வாருங்கள். ஒரு நேரம் வயிறாவது நிறையும்“ என்றாள். அப்போதுதான் அஜய்க்கு மண்டையில் “சுரீர்” என தான் செய்த தவறு உறைத்தது. பணம் குவிந்ததும் பாபாவை மறந்து விட்டது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை உணர்ந்தார்.

அவர் கால்கள் தாமாக எழுந்து பாபா வீற்றிருக்கும் மசூதியை நோக்கி நடந்தன. மசூதிக்குள் நுழைந்ததும் பாபா, அவரைப் பார்த்து புன்னகைத்தார். “அருகில் வா” என்று அழைத்து கட்டிப்பிடித்துக் கொண்டார். அஜய் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கவும் செய்தார். அஜய்யால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உரத்தக் குரலில் பொங்கி அழுதபடி கண்ணீர் விட்டு கதறி பாபா காலில் விழுந்தார். பாபா அவர் முதுகில் தட்டிக் கொடுத்து, “போ இனி எல்லாம் நல்லதாக நடக்கும்” என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

மசூதியில் இருந்து வீடு வந்து சேர்வதற்குள், அவருக்கு ஏற்கனவே பணம் கொடுக்க வேண்டிய மூன்று பேர் அடுத்தடுத்து வந்து பணத்தை கொடுத்து விட்டுச் சென்றனர். அஜய்க்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பஜாருக்கு சென்று யாருக்கெல்லாம் கடனை தீர்க்க வேண்டுமோ அனைவருக்கும் பணத்தைக் கொடுத்தார். அதன் பிறகும் அவர் கையில் பணம் மீதி இருந்தது. இது பாபா நடத்தும் அற்புதம் என்று முழுமையாக நம்பினார்.

கையில் இருந்த பணத்தைக் கொண்டு, பொருட்கள் வாங்கி வந்து மீண்டும் கடையைத் திறந்தார். இப்போது கடைக்கு பாபாவின் பெயரைச் சூட்டியிருந்தார். வியாபாரம் அமோகமாக நடந்தது. கடையை கவனிக்க உரிய ஆட்களை நியமித்த அவர் காலை, மாலை இரு நேரமும் பாபாவை சந்தித்து அவருக்கு பணி விடைகள் செய்தார். அஜய் தன் இறுதி காலம் வரை பாபாவுக்கு பணி விடைகள் செய்தார்.

அஜய்க்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை அறிந்த பலரும் பாபா மீதான பக்தியில் இம்மி அளவு கூட குறைக்கவில்லை. மாறாக கண்கண்ட தெய்வமாக பாபாவைப் போற்றி ஆராதித்தனர்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply