சீரடி சாய்பாபா யார்? அவர் இந்துவா அல்லது முஸ்லிமா?

0

சீரடி மண்ணில் சாய்நாதர் என்றைக்கு தம் பாதத்தை எடுத்து வைத்தாரோ… அன்றே இந்த சர்ச்சை தொடங்கி விட்டது. சீரடி கண்டோபா ஆலய பூசாரியான மகல்சாபதி, முதன் முதலாக பாபாவை பார்த்தபோது, அவரது தோற்றம் மற்றும் உடையை பார்த்து விட்டு, அவர் இஸ்லாமியராக இருப்பாரோ என்று சந்தேகப்பட்டார்.

ஆனால் மிக விரைவிலேயே பாபா, “மனித உருவில் வந்த கடவுளின் அவதாரம்” என்பதை முழுமையாக உணர்ந்தார். அதனால்தான் அவர் ஒருநாள் கூட விடாமல் தினமும் பாபாவுக்கு பூஜை நடத்தி வழிபடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். பாபா இனி சீரடியை விட்டு எங்கும் செல்ல மாட்டார் என்பது உறுதியான காலக்கட்டத்தில் அதாவது 1865-ம் ஆண்டுக்கு பிறகு சாய்பாபா இந்துவா அல்லது முஸ்லிமா என்ற சர்ச்சை அதிகரித்தது. சீரடியில் உள்ள இந்துக்கள் அனைவரும், “பாபா இந்து” என்றனர். சீரடி அருகில் உள்ள கிராமங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள், பாபா ஒரு முஸ்லிம் என்றனர்.

இதையடுத்து நிறைய பேர், சாய்பாபா யார்? என்பதை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் குதித்தனர். சில ஆய்வாளர்கள் நீண்ட ஆராய்ச்சி நடத்தினார்கள். இறுதியில் பாபாவை நேரில் பார்த்த பிறகு ஆராய்ச்சியாளர்கள் எல்லாரும் அமைதியில் ஆழ்ந்து போனார்கள். சாய்பாபா பற்றி எதையும் உறுதியாகச் சொல்ல முடியாமல் வியந்தனர். திகைத்தனர்.

நதிமூலத்தையும், ரிஷிமூலத்தையும் ஆராயும் தகுதி- திராணி நிச்சயமாக இந்த உலகில் எவருக்குமே இல்லை. அப்படி இருக்கும்போது பரம்பொருளாகத் திகழ்கிற சாய்பாபாவை இந்துவா அல்லது முஸ்லிமா என்ற ஒரு வட்டத்துக்குள் எப்படி கொண்டு வர முடியும்?
சாய்பாபா மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டவர். ஆசையோ, ஆணவமோ மற்றும் குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த நடவடிக்கைகளோ அவரிடம் காணப்படவில்லை.

எல்லாரையும் அவர் சமமாகத்தான் நடத்தினார். உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அவர் இறைவனை கண்டார். அந்த போதனையை தினம், தினம் அவர் மக்கள் மத்தியில் கூறினார். தனது செயல்பாடுகளிலும் அவற்றை பிரதிபலிக்கச் செய்தார்.
ஆனால் அந்த மகானின் மகத்துவத்தை புரியாதவர்கள், அவர் இந்து என்றும், அவர் முஸ்லிம் என்றும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தனர். பாபா மதம் கடந்த ஞானி என்பதை அவர்கள் உணரவே இல்லை.

பாபா சாதாரண மானிட பிறப்பை எடுத்து இந்துவாக வளர்ந்திருந்தால், அவர் திருக்குர்ஆனை முழுமையாக கற்று உணர்ந்தவராக இருக்க மாட்டார். முஸ்லிம்கள் அணிவது போன்று கஃப்னி உடை அணிந்திருக்க மாட்டார். மசூதியில் போய் தங்கி இருக்க மாட்டார். எப்போதும் அவர் “அல்லா மாலிக்” என்று சொல்லி இருக்க மாட்டார்.

அது போல அவர் இஸ்லாமியராக பிறந்து வளர்ந்திருந்தால், அவர் மசூதியில் யாக குண்டம் வளர்த்திருக்க மாட்டார். தினமும் இந்துக்கள் தனக்கு மணி அடித்து பாத பூஜை செய்வதை அனுமதித்திருக்க மாட்டார். நெற்றியில் சந்தனம், குங்குமம் பூச அனுமதித்திருக்க மாட்டார். தன்னை நாடி வந்த பணக்காரர்கள் மூலம் எத்தனையோ சிவன், விநாயகர் உள்ளிட்ட இந்து ஆலயங்களை சீரமைத்து புதுப்பித்திருக்க மாட்டார்.

இந்துக்கள்தான் காது குத்தி, மொட்டை அடித்துக் கொள்வார்கள். பாபாவுக்கு காதுகள் குத்தப்பட்டிருந்தது. அப்படியானால் அவரை எப்படி முஸ்லிம் என்று சொல்ல முடியும்?

அதே சமயத்தில் அவர் முஸ்லிம்களின் சந்தனக் கூடு திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர். ஈத் திருவிழாவின் போது முஸ்லிம்கள் அனைவரும் தமது இருப்பிடமான துவாரக மாயியில் ஒன்று கூடி நமாஸ் கூறித் தொழுகை நடத்த அனுமதித்தார். முகரம் திருவிழாவின்போது தாபூத் (முஸ்லிம் ஞானியரின் பாடை உருவகம்) செய்யவும், அதை சில நாட்கள் மசூதியில் வைத்திருந்து கிராமத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் சம்மதித்தார்.

இப்படி இஸ்லாமியர்களின் எல்லா பண்டிகைகைளையும் கொண்டாடினார். அப்படியானால் அவரை எப்படி இந்து என்று சொல்ல முடியும்?

ஆனால் அவர் தினமும் தண்ணீர் ஊற்றி பூஞ்செடிகள் வளர்த்த லென்டித்தோட்டத்தில் அதிக அளவில் துளசியைத்தான் வளர்த்தார். இதனால் அந்த தோட்டம் துளசி செடிகள் நிறைந்த பிருந்தாவனமாக இருந்தது.

அந்த தோட்டத்து துளசியை பறித்து வந்து அவர் ஆண்டுதோறும் ராமநவமியையும் விமரிசையாகக் கொண்டாடினார். சீரடியில் முஸ்லிம்கள் தங்குவதற்காக தாகியா என்று அழைக்கப்பட்ட விடுதி ஒன்று இருந்தது. சில நாள் இரவு சாய்பாபா அந்த விடுதிக்கு செல்வார்.

அங்கிருக்கும் இஸ்லாமிய தலைவர்களுடன் அன்போடு பேசுவார். பிறகு தன் கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு பாடி நடனமாடுவார். அவர் பாடும் பாடல்கள் பாரசீகம் அல்லது அரேபிய மொழியில் இருக்கும். மறுநாள் மசூதியில் இருக்கும் போது ஹரியின் கீர்த்தனைகளை பாடும்படி கூறுவார். ஹரியின் புகழை 7 நாட்கள் தொடர்ந்து பஜனையாகவும் அவர் அடிக்கடி நடத்துவதுண்டு. ஹரியின் நாம சங்கீர்த்தனை மூலம் இறைவனை எளிதாக அடையலாம் என்று பாபா அடிக்கடி கூறுவதுண்டு.

ஆக, சாய்பாபா எந்த மதச் சாயமும் இல்லாமல், எல்லாம் கலந்த கலவையாக இருந்தார் என்பது உறுதியாகிறது. என்றாலும் பாபாவை பார்க்க வரும் முஸ்லிம்கள் அங்கு ஃபாத்தியா ஓதுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அவர்கள் பாபா முன்பு தொழுகை நடத்தி முடிந்ததும் தேங்காய் உடைத்து, சர்க்கரைக் கட்டிகளை சேர்த்து பிரசாதமாக கொடுப்பார்கள். பாபா மறுக்காமல் வாங்கிச் சாப்பிடுவார்.

அடுத்த சில நிமிடங்களில் இந்துக்கள் வந்து அவருக்கு மாலை அணிவித்து, சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, பாத பூஜை செய்து நைவேத்தியம் படைத்து, மணி அடித்து, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள். அதாவது ஆலயத்தில் மூலவருக்கு எப்படி பூஜை நடத்தப்படுமோ, அப்படியே செய்வார்கள். அதையும் பாபா தடுக்கவில்லை. புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டார்.

இந்துக்களும், முஸ்லிம்களும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு பாபாவுக்கு உரிமை கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது. ஒரு முறை பாபாவைத் தரிசிக்க வந்த முஸ்லிம்கள் நமாஸ் செய்ய விரும்பினார்கள். ஆனால் அங்கிருந்த இந்துக்கள் பாபா முன் தாங்களே முதலில் கீர்த்தனைகளை பாடி வழிபட விரும்பினார்கள்.

அவர்கள் வாக்குவாதம் செய்வதை கண்ட பாபா, “ராமரும் ரகீமும் ஒன்று தான். அதை முதலில் உணருங்கள். பிறகு யோகம், தியானம், தவம், ஞானம் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முயலுங்கள். இப்படி சண்டை போடாதீர்கள். மதத்தை முன்னிலைப்படுத்தி உங்களுக்குள் சண்டையிட்டால், நீங்கள் இந்த பிறவி எடுத்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்” என்றார்.

பாபாவின் இந்த போதனையைக் கேட்டு, முக்தியில் ஆர்வம் உள்ளவர்கள் மனம் திருந்தினார்கள். சிலர் மட்டும் பாபா இந்துவா, முஸ்லீமா என்ற சர்ச்சையை நீடிக்க செய்தபடி இருந்தனர். பாபா இந்துக்களின் அன்பை ஏற்பதைக்கண்ட சில முஸ்லிம்கள் அவர் மீது கோபம் கொண்டனர். பாபா மத துரோகம் செய்துவிட்டதாக கூறினார்கள். அதைக்கேட்ட ரோஹில்லா என்பவன் சாய்பாபாவை கொல்ல துணிந்தான். ஒருநாள் அவன் பாபாவை பின் தொடர்ந்து சென்று கம்பால் அடிக்க கையை உயர்த்தினான்.

அடுத்த வினாடி… பாபா திரும்பிப் பார்த்தார். அவன் உயர்த்திய கை அப்படியே நின்று போனது. அவனிடம் பாபா தம் இரு உள்ளங்கைகளையும் திறந்து காட்டினார். அவரது ஒரு உள்ளங்கையில் மெக்கா, மதீனா படங்கள் தெரிந்தன. மற்றொரு உள்ளங்கையில் திருக்குர்ஆன் வாசகங்கள் காணப்பட்டன. அவற்றை பார்த்த ரோஹில்லா ஆச்சரியப்பட்டான். சாய்பாபா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வழிபட்டான்.

மற்றொரு தடவை சில முஸ்லிம்கள் மசூதி முன்பு திரண்டு மகல்சாபதியை பாபாவுக்கு இனி எந்தவித ஆராதனையும் காட்டக்கூடாது என்று விரட்டினார்கள். பயந்து போன மகல்சாபதி மசூதி பின்பக்கம் சென்று மணியடித்து பூஜை நடத்தினார். மணி சத்தம் கேட்ட பாபா உடனே அங்கிருந்த முஸ்லிம்களை விரட்டினார். பிறகு மகல்சாபதியிடம் வழக்கமான ஆராதனைகள் செய்ய வைத்தார்.

இன்னொரு தடவை மசூதியில் படுத்திருந்த இந்துக்களை கொல்ல வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி, “ முதலில் என்னை வெட்டிக்கொல்” என்று கூறி தலையை குனிந்து நின்றார். இப்படி பல்வேறு செயல்பாடுகள் மூலம் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் மக்களை அவ்வளவு எளிதில் திருத்திவிடவா முடியும்? இந்துக்கள் பாபா எங்களுக்கே என்றனர். முஸ்லிம்கள் பாபா தங்களுக்கே என்றனர். 1916-ம் ஆண்டு பாபா இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்டினார். அதாவது அவர் உடலை விட்டு நீங்குவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவத்தை அரங்கேற்றினார்.

1916-ம் ஆண்டு விஜயதசமியன்று மசூதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் வழக்கம் போல் பாபாவுக்கு உரிமை கொண்டாடி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதை அறிந்ததும் சாய்பாபாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கோபம் ஏற்பட்டது. உடைகள் அனைத்தையும் கழற்றி நெருப்புக்குண்டத்துக்குள் வீசி எறிந்த அவர் நிர்வாணமாக நின்றார். பிறகு அவர் கர்ஜிக்கும் குரலில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பார்த்து பேசினார்.

“ ஒருவன் பிறக்கும் போது நிர்வாணமாக பிறக்கிறான். மதத்துக்கான எந்த அடையாளமும் அவனிடம் இருப்பதில்லை. நிறமற்ற, குணமற்ற ஆன்மா மதங்களை கடந்தது. ஆன்மா போலவே உடலும் மதம் கடந்தது. எனவே இனி யாரும் மதம், மதம் என்று பேசாதீர்கள்” என்றார்.

பாபாவின் இந்த விளக்கம் நிறைய பேர் கண்களைத் திறந்தது. அதன்பிறகு சீரடி மக்கள் மனதில் இருந்து குறுகிய மனப்பான்மை ஒழிந்தது. பாபா மதங்களை கடந்தவர். அவர் மக்களின் குறைகளைத் தீர்க்க வந்த அவதார புருஷர் என்ற எண்ணம் தோன்றியது. பாபா முன்பு மத யானைகள் மண்டியிட்டன.

இந்த நிகழ்வுக்கு பிறகு பாபா இந்துவா அல்லது முஸ்லிமா என்ற சர்ச்சை ஓய்ந்தது. சீரடி மக்கள் பாபாவை கண் கண்ட தெய்வமாக போற்றினார்கள். தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் சாதி, மதவேறுபாடின்றி பாபாவை, மக்கள் துயர் தீர்க்க வந்த அவதாரப் புருஷர் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மக்கள் மனதை ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்ட பாபா ஒரு விஷயத்தில் தோற்றுப்போனார். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply