சீரடி சாய் பாபாவின் 4 ஆண்டு தவ வாழ்க்கை..!

0

மகான்களின் தரிசனம் எல்லோருக்கும் எளிதில் நினைத்தவுடன் கிடைத்து விடாது. அதற்கு நாம் எவ்வளவோ புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்.

அப்படியே புண்ணியம் செய்திருந்தாலும் நாம் அந்த மகானை இடைவிடாமல் நினைக்க வேண்டும். மனதில் ஆழமாக நிலை நிறுத்தி வழிபட வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே மகான்களுடன் பழகும் வாய்ப்பும், பார்த்து தரிசிக்கும் பாக்கியமும் கிடைக்கும்.

சீரடியில் வசித்த மகல்சாபதி உள்ளிட்ட சிலர் அந்த மாபெரும் வாய்ப்பையும், பாக்கியத்தையும் பெற்றிருந்தனர். அதனால்தான் அவர்கள் இளம்பாபாவை கண் குளிர கண்டு களிக்கும் பிறவிப் பயனை பெற்றனர்.

பாபாவை எல்லாரும் பித்தர் என்றும் சித்தர் என்றும் சொல்லிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மகல்சாபதி உள்ளிட்ட சிலர் பாபாவை கண்கண்ட கடவுளாக உணர்ந்தனர். உறுதியாக அதை நம்பினார்கள்.

பாபாவை பார்க்கும் ஒவ்வொரு வினாடியையும் இறைவனுடன் இருப்பதாக நினைத்துப் பூரித்துப் போனார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாபாவை திடீரென காணவில்லை என்றதும் எப்படி இருந்திருக்கும்? ஆறுதல் சொல்ல முடியாத அளவுக்கு தவித்துப் போனார்கள்.

“என்று காண்போம் எங்கள் தெய்வத்தை?-” என்று புலம்பி திரிந்தனர். 1854ம் ஆண்டு சீரடி கிராம மக்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டது. 1858-ம் ஆண்டு இளம் பாபா சீரடிக்கு திரும்பி வரும் வரை அவர் எங்கு போனார்? என்ன ஆனார்? என்ன செய்தார்? என்பது யாருக்குமே தெரியவில்லை. உண்மையில் 1854-ம் ஆண்டு முதல் 1858-ம் ஆண்டு வரை இளம் பாபா எங்குதான் போனார்? இது பற்றி பிற்காலத்தில் பாபா தன்னிடம் நெருக்கமாக இருந்தவர்களிடம் இடையிடையே சில தகவல்களை மட்டும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பாபா சென்று வந்த இடங்களை சில நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசாயி சத்சரிதம் நூலில் அந்த 4 ஆண்டுகள் தொடர்பான எந்த குறிப்புகளும் இல்லை.

சீரடியில் இருந்து வெளியேறிய பாபா, பெல்காம், மகர்கட், கிர்னர், மவுன்ட் அபு, அக்கல்கோட், தவுலத்பாத், பந்தர்பூர், அவுரங்காபாத், தூப்கேடா ஆகிய ஊர்களுக்கு சென்றதாகவும், வழி நெடுக உள்ள இந்து ஆலயங்களிலும் இஸ்லாமிய தர்க்காக்களிலும் அவர் தங்கி இருந்து தன் ஆன்ம பலத்தை அதிகரித்துக் கொண்டதாவும் சில ஆங்கில நூல்களில் எழுதப்பட்டுள்ளது. அது பற்றி சற்று விரிவாக காணலாம்.

சீரடியில் இருந்து மாயமானதும் பாபா கால் போன போக்கில் நடந்தார். சுமார் 320 மைல்களை அவர் நடந்து கழித்திருந்த போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் நகரை அடைந்திருந்தார். அங்கு அவர் ஒரு நெசவுத் தொழிற்சாலையில் நெசவாளியாக பணி புரிந்தார். எம்ப்ராய்டரி வேலைகளில் அவர் திறமையை வெளிப்படுத்தினார். அங்கு மாத சம்பளமாக 50 ரூபாய் பாபாவுக்கு வழங்கப்பட்டது. பிறகு அந்த சம்பளம் 100 ரூபாயாக உயர்ந்தது.

பாபாவின் சுறுசுறுப்பும், கருணைப்பார்வையும் நெசவுக் கூடத்தின் உரிமையாளரை மிகவும் கவர்ந்தது. அவர் பாபாவுக்கு ஒரு தடவை சால்வை, தலைப்பாகை மற்றும் புத்தாடையைப் பரிசாகக் கொடுத்தார். ஆனால் பாபா அதை தொடக்கூடவில்லை. மனிதர்கள் கொடுக்கும் எதுவும் நம்முடன் கடைசி வரை வராது. கடவுள் கொடுப்பது மட்டுமே கடைசி வரை நம்முடன் இருக்கும் என்று கூறி விட்டார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய, ஜான்சி ராணி லட்சுமி பாயின் படையில் சிறிது நாள் இளம்பாபா இருந்தார் என்று சிலர் சொல்லியுள்ளனர். ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பெல்காமில் சில மாதம் வசித்த பிறகு அங்கிருந்து வெளியேறி மராட்டிய மாநிலத்தில் உள்ள மகர்கட் என்ற ஊருக்கு பாபா சென்றார். நந்தத் மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் தத்தாத்ரேயார் அவதார தலமாகக் கருதப் படுகிறது.

இங்குள்ள சக்தி பீடத்தில் பாபா பல மாதங்கள் தவம் இருந்ததாக சொல்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து சீரடி சாய்பாபாவை தத்தாத்ரேயரின் மறு அம்சம் என்றும் சொல்கிறார்கள். மகர்கட் நகரில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு பாபா பயணமானார். அங்கு கிர்னர் என்ற புனித தலத்துக்கு சென்று தியானம் இருந்தார். அந்த ஊரை கிரிநகர் என்றும் சொல்வார்கள். இங்குள்ள மலை, இமய மலை தோன்றியதற்கு முன்பே தோன்றிய பழமையான மலையாகும். இங்கு தத்தாத்ரேயரின் காலடி தடம் உள்ளது.

இங்குள்ள மலையில் ஏராளமான இந்து சாதுக்களும், ஜெயின் சாமியார்களும் தவம் இருந்து அளப்பரிய ஆற்றல்களை பெற்றுள்ளனர். இங்கு யோகா இருந்தவர்கள் உயர்ந்த நிலையை அடைந்தனர். பாபாவுக்கும் அந்த உயர் நிலை இந்த மலை தியானத்தில் கிடைத்ததாக சொல்கிறார்கள்.

கிர்னர் மலையில் பாபா ஓராண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு அவர் ராஜஸ்தானில் உள்ள மவுன்ட் அபு நகருக்கு சென்றார். ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள இந்த மலை நகரிலும் பாபா தியானத்தில் ஈடுபட்டார். 1857-ல் அங்கிருந்து அவர் மீண்டும் மராட்டியத்துக்கு வந்தார். சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல் கோட் நகரில் உள்ள ஆலயங்களில் பாபா சில நாட்கள் தங்கியிருந்தார். பிறகு தவுலத்பாத் நகருக்கு சென்றார்.

சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூர் (பண்டரிபுரம்) உள்ளது. பீமா நதிக்கரை நகரமான இந்த ஊர், மராட்டிய மாநிலத்தின் ஆன்மீக தலைநகரமாகக் கருதப்படுகிறது.சீரடியில் இருந்து சுமார் 275 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்டரிபுரத்துக்கு பாபா வந்தார். அங்குள்ள விட்டோபா ஆலயத்துக்கு சென்றார். அங்குள்ள ஒரு இடத்தில் அவர் சில தினங்கள் தியானம் செய்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு பாபா அவுரங்காபாத் நகருக்கு சென்றார். அங்கு படோபாபா என்பவருடன் பழகினார். சில மாதங்கள் அவருடன் தங்கி இருந்தார்.

அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள இந்து-முஸ்லிம் ஆலயங்களுக்கு பாபா தவறாமல் சென்று வந்தார். ஒருவாரம் இந்து துறவிகளுடன் அலைவார். அடுத்த வாரம் அவர் இஸ்லாமிய பக்கிரிகளுடன் சுற்றுவார். அவர் வாய் அல்லா மாலிக் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் 1858-ம் ஆண்டு பிறந்திருந்தது. பாபாவின் கால்கள் தாமாக சீரடி நோக்கி நடக்கத் தொடங்கி இருந்தது.

அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தூப்கேடா எனும் ஊரில் அவர் இருந்தபோது தான் மாபெரும் செல்வந்தரான சாந்த் பாட்டீலிடம் அடுத்தடுத்து சில அற்புதங்களை பாபா நிகழ்த்தினார். அந்த அற்புதங்கள் தான் தூப்கேடாவில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீரடிக்கு பாபா மீண்டும் வந்து சேர்வதற்கு அடிப்படையாக இருந்தது.

1854 முதல் 1858-ம் ஆண்டு வரை பாபா வாழ்வில் இவையெல்லாம் நடந்தன என்பதை பலர் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் அதற்கு ஆதாரமாக பாபா மாயமான 4 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் சீரடி அருகே தான் இருந்தார். ஓராண்டு மட்டுமே அவர் எங்கு போனார்? என்ன செய்தார்? என்பது இன்னமும் புரியாத புதிராக இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் பாபாவே தனக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம் மேற்கண்ட நகரங்களுக்கு சென்று வந்ததை தெளிவாக கூறியுள்ளார். எனவே பாபாவின் 4 ஆண்டு பயணத்துக்கு ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் அது நம்பப்படுகிறது. பாபா சென்ற இந்த ஊர்களை சற்று ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தால், அந்த ஊர்களில் உள்ள புனித மலைகளில் பல மகான்கள் தவம் இருந்து மக்களுக்கு சேவை செய்தது தெரிகிறது. ஆகையால் இந்த 4 ஆண்டு பயணத்தின் போது பாபா ஆழ்ந்த தியானத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாபாவின் 4 ஆண்டு பயணத்தில் முரண்பாடான தகவல்கள் இருந்தாலும் அவர் தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்தார் என்பது உறுதியாகியுள்ளது. மகான்களின் செயல்களை யாரால் கணித்து சொல்ல முடியும்? பாபாவின் பிறப்பு, வளர்ப்பு தொடர்பாக நிலவும் மர்மங்கள் போலவே சீரடியில் இருந்து அகன்ற அவரது 4 ஆண்டுகள் வாழ்க்கையும் மர்மமானதாகவே கருதப்படுகிறது. அவர் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்று வந்ததாக கூறப்பட்டாலும் மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

அதாவது 1854-ம் ஆண்டு முதல் 1858-ம் ஆண்டு வரை பாபா, மறைந்த தம் குரு வெங்குசாவுடன் இருந்தார் என்று ஒரு பரபரப்பு நிகழ்வு கூறப்படுகிறது. சில ஆங்கில நூல்களிலும், இணையத் தளங்களிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணம் அடைந்த வெங்குசா மீண்டும் பாபாவை சந்தித்து நிறைய ஆற்றல்களை கொடுத்தார் என்றும், வெங்குசாதான் அசரீரியாக பாபாவை மீண்டும் சீரடிக்கு செல்ல உத்தரவிட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தத்தாத்ரேயரின் மறு அம்சம் :

சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் உள்ளடக்கிய கடவுளாக தத்தாத்ரேயர் வணங்கப்படுகிறார். மூன்று கடவுள்களின் ஒருங்கிணைந்த அம்சம் என்பதால் தத்தாத்ரேயரை திரிமூர்த்தி என்றும் சொல்வார்கள். அனைத்தையும் துறந்த அவதூதர்கள், சன்னியாசிகளுக்கு தத்தாத்ரேயர் தெய்வமாக வழிபடப்படுகிறார். மராட்டிய மாநிலத்தில் தத்தாத்ரேயர் வழிபாடு பல இடங்களில் உள்ளது. அங்கெல்லாம் இளம்பாபா சென்றதாக ஏராளமான குறிப்புகள் உள்ளன. மகர்கட் நகரில் மூன்று புனித மலைகள் உள்ளன.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply