பன்னிரெண்டு ராசிகளை உள்ளடக்கிய அபூர்வ ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் அனைவரின் விருப்பமும் நிறைவேறும்

0

நமக்கு அன்றும் இன்றும் என்றும் வேண்டியது பலம். ஆத்ம பலம், மனோ பலம், புத்தி பலம், தேக பலம், பிராண பலம், சம்பத் பலம் என்ற இந்த ஆறு பலங்களையும் பெற்று வீரதீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய அருட்பார்வை கண்டிப்பாக வேண்டும். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பூர்ண மனிதனாகப் பொலிய வேண்டும். அதற்கு நாம் அஞ்சனை மைந்தன் அனுமனை லட்சிய புருஷனாகக் கண்டுகொள்வதே தக்க நெறியாகும். ஒருவனுக்கு உடல் வலிமை இருக்கும். அறிவு இருக்காது. இன்னொருவருக்கு அறிவு இருக்கும். அம்மனிதனுக்கு அடக்கம் இருக்காது.

மற்றொருவன் வைதீக நெறியில் நிற்பான். அவனிடத்தில் எல்லாம் நிறைந்து இருக்கும். ஆனால் அவனிடம் ஆண்டவனிடத்தில் பக்தி இருக்காது. அனுமன்தான் பூரணமான மனிதன். ஒரு லட்சிய புருஷன். அவனைப்போல் நாம் விளங்க வேண்டும். அவன் அருளை நாட வேண்டும். அவன் வழியைப் பின்பற்ற வேண்டும். எனவே, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப்படும் பன்னிரெண்டு ராசிகளையும் உள்ளடக்கிய, நல்லன எல்லாம் தரும் அபூர்வ ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் அனைவரின் விருப்பமும் நிறைவேறும்.

ஆனந்த வாழ்வு வந்து சேரும். அவனே அனைவரையும் வாழ்விக்கும் வழிகாட்டியாவான். பன்னிரெண்டு ராசிகளையும் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கே இருக்கிறார்? இவரை தரிசிக்க வேண்டுமானால் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் ஆதனூர் என்ற ஊருக்கு வரவேண்டும். கும்பகோணத்தில் இருந்து திருவைகாவூர் செல்லும் நகர பேருந்தில் ஏறி, ஆதனூரில் இறங்கிக்கொள்ள வேண்டும். இங்குள்ள பெருமாளையும், ஆஞ்சநேயரையும் தரிசித்து அருள் பெறலாம். ஆஞ்சநேயர் என்றால் சனீஸ்வர பகவானுக்கு பயம் என்று கூறுவார்கள்.

ஆனால், இந்த ஆதனூர் ஆஞ்சநேயர் தனது ஜடா முடியில் பன்னிரெண்டு ராசி மண்டலங்களையும் உள்ளடக்கி வைத்துள்ளார். ஆறடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன திருவுருவம் அழகே உருவாக ஆதனூர் கிராம எல்லையில் தனியாக எழுந்தருளியிருக்கிறார். வடக்கு திசை நோக்கி எழுந்தருளியிருக்கும் திருக்கோலம் சிரசில் அழகிய கிரீடம் அலங்கரிக்கிறது. இதில் வட்ட வடிவமாக பன்னிரெண்டு ராசிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த பன்னிரெண்டு ராசிகளையும் இந்த ஆஞ்சநேய சுவாமி தனது வாலால் சுருட்டி மடக்கி, அடக்கி வைத்திருப்பது அற்புத காட்சியாக உள்ளது. தனது பக்தர்களுக்கு இந்தப் பன்னிரு ராசிகளின் அருள் சாதகமாக இருக்க வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாகும்.

நட்சத்திர தோஷம் மற்றும் கிரக தோஷம் உள்ளவர்கள் அந்த தோஷத்தை எளிதாக நீக்கிக்கொள்ள இந்த ஆதனூர் ஆஞ்சநேய சுவாமியை பிரார்த்தித்து, அர்ச்சனைகள் செய்து, வணங்கி வழிபட்டுச் செல்கிறார்கள். இதுபோன்று பன்னிரு ராசிகளையும் அடக்கிய கோலத்தில் உள்ள ஆஞ்சநேயர் விக்கிரகம் தமிழ்நாட்டில் இவ்வூரில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். ஆதனூர் வந்து ஆழ்ந்த பக்தியுடன் ஆஞ்சநேய சுவாமியைக் கையெடுத்துக் கும்பிட்டு வழிபடும் பக்தர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கிறது. இப்படி அஞ்சனா தேவியின் மைந்தன் ஆஞ்சநேயரை நாம் அனுதினமும் நினைத்து வழிபட்டு வந்தால் லோகாதாய வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான இடர்பாடுகள் ராசிகள் தரும் அச்சங்கள் எல்லாம் சிறு துகள்போல கண்ணுக்குத் தெரியாமல் போகும். வளமான வாழ்வு வந்து சேரும். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply