
இந்த அம்மன் சன்னிதியின் பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த விநாயகர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகப்பெருமான், பிரம்மச்சாரி என்பதால் இப்படி காவி உடை அணிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
மும்மூர்த்திகளின் இசை
கடலூர் மாவட்டம் திருத்திணை தலத்தில் நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மதேவர் மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்கள். இருவரது இசைக்கும் ஏற்ப, இறைவன் நடனமாடும் வகையில் அந்த அமைப்பு இருக்கிறது. இசையில் சிறந்த இடத்தைப் பிடிக்க நினைப்பவர்கள், இந்த சன்னிதியில் வந்து நடராஜரையும், பிரம்மதேவரையும், திருமாலையும் வணங்கி வழிபட்டுச் செல்லலாம்.
அமிர்த கலசத்துடன் கருடன்

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருத்தண்கால். இங்கு அமிர்த கலசம், நாகம் ஏந்திய கைகளுடன் கருட பகவான் காட்சி தருகிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். தன்னுடைய தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காக, இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்களிடம் கொடுத்தார் கருடன். அந்த கதையை நினைவு கூரும் வகையில் இந்த வடிவம் இருப்பது சிறப்புக்குரியதாகும்.
கொடி மரத்தின் வெளியே நந்தி
பொதுவாக அனைத்து ஆலயங்களிலும், கொடிமரத்தின் அருகிலேயே நந்தி பகவான் வீற்றிருப்பார். ஆனால் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் திருத்தலத்தில் கொடிமரத்திற்கு வெளிப்பகுதியில் நந்தி இருக்கிறார். பக்தர் ஒருவரின் உயிரை எடுக்க வந்த எமதர்மனை, இத்தல நந்தி விரட்டியதாக தல வரலாறு சொல்கிறது. மீண்டும் எமதர்மன் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான், நந்தியம்பெருமான் கொடிமரத்திற்கு வெளிப் பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.- Source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
