மழலை வரமருளும் பெருமாள் வழிபாடுகள்..!

0

சோமுகன் என்ற அசுரன் நான்கு வேதங்களை கவர்ந்து ஆழ்கடலில் ஒளித்தான். வேதங்களின் வழிகாட்டுதல் இல்லாமையால் பிரம்மன் படைப்புத் தொழிலை மேற்கொள்ள இயலவில்லை. படைப்புத் தொழில் நின்றதால் தேவர்கள் அவரவர் பணியினை செய்ய இயலவில்லை. இதற்கான நிவாரணத்தைத் தேடி அவர்கள் வைகுண்டம் சென்று நாராயணனைத் தொழுது நின்றனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற வைகுண்டநாதன், மச்சாவதாரம் எடுத்து சோமுகாசுரனை கொன்று வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார். வேதங்களை பெற்ற பிரம்மன், தான் படைக்கும் அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து பரந்தாமன் கடைத்தேற்ற வேண்டினான். அவ்வாறே அருளிய திருமால், ‘பிரம்மனே, கிருதயுகத்தில் தர்ம தேவதை நான்கு கால்களுடன் விளங்கும். திரேதாயுகத்தில் மூன்று கால்களில் நிற்கும். துவாபர யுகத்தில் அதற்கு இரண்டு கால்களே இருக்கும். இந்த மூன்று யுகங்களிலும் உயிர்கள் தவம், யாகம் முதலான கிரியைகளை மேற்கொண்டு எம்மை வந்தடையும்.

இறுதி யுகமான கலியுகத்தில் உயிர்கள் போட்டி, பொறாமை, வஞ்சனை, மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசை கொண்டு அதனால் சண்டை, சச்சரவு மேலோங்கி அதர்மம் மிஞ்சி நிற்கும். அப்போது தர்ம தேவதையாகிய இடபம் ஒற்றைக் காலிலேயே நிற்கும். அத்தகைய கலியுகத்தில் உயிர்களை கடைத்தேற்றவும், பாவங்களை எரிக்கவும் வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் உமக்கும், பிருகு முனிவருக்கும் ஓர் உத்தமமான மலையில் காட்சி தருவேன். அந்த இடம் மச்சாவதார பெயரிலேயே சிறந்து விளங்கும்’ என்று அருளினார். இதற்கிடையில் மும்மூர்த்திகளுள் யாரிடம் சத்வ குணம் மேலோங்கியுள்ளது என்பதில் முனிவர்களுக்குள் கருத்து மாறுபாடு எழுந்தது. அனைவரும் பிருகு முனிவரை அணுகினர். மும்மூர்த்திகளையும் நேரில் சென்று சோதித்திட பிருகு முனிவர் முடிவு செய்து முதலில் பிரம்ம லோகம் சென்றார். அங்கு தனது வருகையினை கவனிக்காமல் பிரம்மன் இருப்பதைப் பார்த்து அவனை சபித்தார். பின்னர், கயிலாயம் சென்றார்.

அங்கு தன்னை வரவேற்காமல் சிவபெருமான் பார்வதி தேவியுடன் ஏகாந்தமாய் வீற்றிருப்பதைக் கண்டு அவருக்கும் சாபமிட்டு அங்கிருந்து வைகுண்டம் சென்றார். அங்கு பாற்கடலில் ஆதிசேஷன் மீது திருமால் துயில் கொண்டிருந்தார். அவரது திருவடியில் திருமகள் வீற்றிருந்தாள். தன்னை வரவேற்காமல் திருமாலும் உள்ளாரே என்று கோபம்கொண்ட பிருகு முனிவர், தனது காலால் திருமாலின் மார்பில் உதைத்தார். கண் விழித்த பரந்தாமன், ‘பிருகு முனிவரே, எமது மார்பில் உதைத்ததால் தங்களின் மலர்பாதம் நோகுமே’ என்று கூறி அவரது பாதத்தை வருடி விட்டார். அதைக் கண்ட திருமகள், தான் வசிக்கும் திருமாலின் மார்பில் உதைத்த பிருகுவின் பாதத்தை வருடிவிட்ட தனது கணவனின் செயலுக்கும், அவருக்கு நேர்ந்த அவமானத்தையும் பொறுக்காமல் வைகுண்டத்தை விட்டு அகன்றாள். அந்த சமயம் தனது கோபமும், அறியாமையும் அகன்ற பிருகு முனிவர் திருமாலை மண்டியிட்டு வணங்கினார். ‘வைகுந்தவாசா, தாங்களே சத்வ குணத்தில் மேலானவர். அடியேனின் பிழையை பொறுத்தருள வேண்டும்’ என்று கரம் குவித்து நின்றார்.

‘முனிவரே, வருந்த வேண்டாம். கலியின் பிடியில் இருந்து உயிர்களை கரையேற்ற விரைவில் நான் புவியில் வேங்கடேசனாக அவதரிக்க உள்ளேன். அதற்கான விளையாட்டே இது. ஆகவே, கவுண்டன்ய நதிக்கரையில் தவம் செய்து பாவத்தை போக்கிக் கொள்க’ என்று அருளினார். திருமால் சொல்லியபடி கவுண்டன்ய மகாநதியின் கரையின் அருகில் சிறு குன்றின் மீது அமர்ந்து பிருகு முனிவர் தவத்தில் ஆழ்ந்தார். அதேநேரத்தில் புவியில் சேஷாத்திரி மலைத் தொடரில் ஏழுமலையில் வேங்கடேசன் என்னும் திருநாமத்துடன், வராகமூர்த்தியின் அனுமதியுடன் எழுந்தருளிய திருமால், தவத்தில் ஆழ்ந்திருந்த முனிவரின் முன்பு காட்சி தந்தார். ஓராயிரம் சூரியர்கள் ஒருங்கே அமைந்த பிரகாசத்துடன் காட்சி தந்த வேங்கடவனை முனிவர் போற்றி வணங்கினார். அப்போது பிரம்மனும் அங்கு தோன்றி வேங்கடவனை வணங்கி, ‘ஐயனே, தாங்கள் முன்பே அருளியது போன்று மச்சாவதார கோலத்தை இவ்விடத்தில் காட்டி, இங்கேயே வேங்கடவனாக எழுந்தருள வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அதையேற்று மச்சாவதாரம் என்ற மீன் அவதார ரூபத்தை அங்கே காட்டியதோடு அர்ச்சாரூபத்துடன் வேங்கடேசன் அங்கே கோயில் கொண்டார். வேங்கடேச பெருமாளுக்கு பிரம்மன் பலகாலம் திருவிழாக்கள் நடத்தி, பின்னர் தன் இருப்பிடத்தை அடைந்தான். பிரம்மனுக்கும், பிருகு முனிவருக்கும் மீன் அவதார ரூபத்தை திருமால் இங்கு காட்டியருளியதால் இந்தத் தலம் மீனூர் திருமலை என்று வழங்கப்பட்டு வருகிறது. 12 ராசிகளுக்கான தேவதைகளும் இங்கு வந்து வேங்கடேசனை வணங்கி காலங்களை இயக்கும் சக்தியைப் பெற்றன. பரீட்சித் மன்னனும், சுகமுனிவரிடம் பாகவதத்தை கேட்டறிந்த பின்னர் மீனூர் தலத்தை அடைந்து வேங்கடேசனின் தசாவதார ரூபங்களை ஒருங்கே காணும் பேறு பெற்றான். விஷ்ணு சர்மா என்ற அந்தணன், தினமும் கவுண்டன்ய தீர்த்தத்தில் நீராடி பெருமாளை அபிஷேகித்து குஷ்ட நோயிலிருந்து மீண்டான். ராசி தேவதைகள் வந்து வழிபட்டு அருள்பெற்றாலும், இந்தத் தலம் மீன ராசிக்காரர்களுக்கான பரிகார தலமாகப் போற்றப்படுகிறது.

200 அடி உயர குன்றின் மீது இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அழகிய கற்றளியோடு கூடிய கருவறையில் வேங்கடேச பெருமாள் மேற்கு நோக்கி திருமலை வாசனை நினைவுபடுத்தும் கோலத்தில் காட்சி தருகிறார். பிற கோயில்களில் மூலவர் தாமரை அல்லது ஏதாவது ஓர் ஆதார பீடத்தின் மீதே எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு பாதங்கள் பூமியில்பட நின்று அருள்கிறார். எதிரே கருடபகவான் வணங்கிய கரங்களுடன் காட்சி தருகிறார். முதல் பிராகாரம் வைகுண்ட பிராகாரம் என்று வழங்கப்படுகிறது. இரண்டாவது பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் கருணைக் கண்களுடன் பத்மாவதி தாயார் தனி சந்நதியில் வேங்கடவனை நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். மேற்கு திசையில் படிவழிப்பாதையில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாய் காட்சி தருகிறது. மலைச்சுற்றுப்பாதையே இங்கு மூன்றாவது பிராகாரமாக விளங்குகிறது. படிவழிப்பாதையில் வேங்கடவனின் மருகனின் தனிக்கோயில் ஒன்று அண்மையில் மகான் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.

அதோடு சுற்றிலும் பசுமை போர்த்திய மலைத்தொடர்கள், தென்னஞ்சோலைகள் சூழ்ந்து இயற்கை எழில் சூழ்ந்து மீனூர் திருமலை திகழ்கிறது. நாள்தோறும் இரண்டுகால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஒன்பது சனிக்கிழமைகளில் அங்கப் பிரதட்சணம் செய்து பெருமாளை பணிகின்றனர். அப்பேறு கிட்டியவர்கள் துலாபாரம் செலுத்தி தங்கள் பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர். மீன ராசிக்காரர்கள் ஒன்பது சனிக்கிழமைகள் இங்கு வந்து ஒன்பது முறை பெருமாளை வலம்வந்து ஒன்பது தீபங்களை ஏற்றி வழிபட்டு ஏற்றம் பெறுகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் மீனூர் கிராமத்தில் சிறு குன்றின் மீது அமைந்துள்ளது இத்திருக்கோயில்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply