கேட்கக் கேட்க உள்ளம் சிலிர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாயகன்

0

பஞ்செட்டி என்று இப்போது வழங்கப்படும், பஞ்சேஷ்டி தலம், அகத்தியரால் ஏற்றம் பெற்றது. அவர் நிறுவிய தீர்த்தம், அங்கே அனைவருக்கும் வள்ளலாக அமர்ந்த அகத்தீஸ்வரர், ஆனந்த வாழ்வு தரும் ஆனந்தவல்லியின் அற்புதங்களை கேட்கக் கேட்க உள்ளம் சிலிர்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகும். பசும்பொன்னால் வேயப்பட்ட மாளிகைகளும், வைர, வைடூரியங்களால் இழைக்கப்பட்ட அறைகளும் கொண்ட அளகாபுரி எனும் நகரத்தில், மாபெரும் செல்வந்தனான குபேரன் கம்பீரமாக வாழ்ந்திருந்தான். மணிபத்திரன் எனும் குபேரனின் நண்பன் அளகாபுரியை நிர்வகித்தான்.

மணிபத்திரனின் அருகாமை குபேரனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. தேவர்களுடைய வருகை அவனை குதூகலப்படுத்தியது. ஆனால், மணிபத்திரனின் சகோதரனான சுகேது என்பவனின் நடத்தை மட்டும் சற்றே அவனை நடுங்க வைத்தது. தான் வாழ்வது போக வாழ்வெனினும் அதை அளித்தது மகாசக்தியான ஈசனே என்பதை மறவாதிருந்தான் குபேரன். ஆனால், சுகேதுவோ போகம், போகம் என்று தன்னை மறந்திருந்தான்.

கட்டுக்கடங்காத காமம் குபேரனின் நந்தவனத்தில் உலாவும் பெண்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அங்கே பேரழகியாக விளங்கிய சுகேசியை மயக்கினான். தேவர்களுக்கு நிகரான தவச்சக்தி படைத்த குபேரன் இதைக் கண்டு சுகேதுவின் மீது கடுங்கோபம் கொண்டான். கோபத்தின் வெம்மை சுகேதுவை சுக்கு நூறாக்கியது. அவன் புலன்களெல்லாம் ஒடுங்கி, வயோதிகனாகத் தளர்ந்தான். சுகேசியோ மூர்க்கியாக மாறி, அரக்கியாக வலம் வந்தாள். இருவரும் தமக்கேற்பட்ட கொடுமை விலக வழி தேடினார்கள்.

சுகேதுவும், சுகேசியும் வைராக்கியம் கொண்டார்கள். பிரம்மனை நோக்கிக் கடுந்தவமியற்றினார்கள். உயிர் நீங்குமளவுக்கும் தவம் உக்கிரமானபோது, நான்முகன் தாய்போல் பரிதவித்து ஓடோடி வந்தார். அந்த தவாக்கினியில் உருகிப்போன பிரம்மன், அவர்களுக்கு உயிர் காக்கும் வரங்களை தாராளமாக வழங்கினார். பிறகு தீவிர பக்தனுக்கு ஆதரவு தந்த நிறைவில் மறைந்தார் பிரம்மா. உலகம் மெல்ல அவர்களின் அட்டகாசத்தில் அலற ஆரம்பித்தது. கயிலை பரமேஸ்வர தம்பதியரையே பரிகாசமாகப் பார்த்தான், சுகேது.

கர்வத்தின் விளிம்பில் இருந்த அவன் அசுரனாக மாறினான். வெறிபிடித்த ஓநாயாகத் திரிந்தான். சுகேசி அல்லாது, மாண்டுகி எனும் அரக்கியோடும் இணைந்தான். பிள்ளைகள் பெற்றான். சுகேது, தம் பிள்ளைகள் மனதுக்குள் ‘தேவர்களை அழிக்கவே நாம் பிறந்துள்ளோம்’ என்று விதையை ஆழமாக விதைத்தான். குறுக்கே வருவது தம் குலத்தவரான அரக்கர்களேயானாலும் மிதித்தெறியச் சொன்னான். எதிரிகள், தமக்கு எதிராக நிற்கும் தம் இனத்தவர்கள் என்று தர்ம நியாயங்களை அலட்சியப்படுத்தி, தான்தோன்றியாக அலைந்தது அந்தக் கூட்டம்.

தந்தையை மிஞ்சி மகன்கள் முன்னேறினார்கள். தவத்தால் வரங்கள் பெற்றார்கள். பூலோகத்தை புரட்டிப் போட்டார்கள். தேவலோகத்தை திருகினார்கள். அரக்க இனத்தவர்களை அறைந்து பணியச் செய்தார்கள். ஆனால், வல்லவனை வெல்ல வையத்தில் ஒருவன் இருப்பது போல சுகேதுவை ஜெயிக்க மத்தன், பிரம்மதத்தன் என்ற பெயர்களோடு ஓர் அரக்க கூட்டம் கிளம்பியது. அவர்களுடைய வலிமை தொயாமல் போரிட்ட சுகேது, அவர்களுடைய வேகம் தாங்காமல் புறமுதுகு காட்டி ஓடினான். ஆழ்கடலில் பதுங்கினான்.

சுகேதுவின் மகன்கள் தந்தையின் நிலைமையை அறிந்து கொதித்தார்கள். நெருப்பாக மாறி எதிரி அரக்கக் கூட்டத்தோடு போரிட்டார்கள். வென்றார்கள். தந்தையைக் காண அந்தக் கடலினுள் பெருங்கூட்டமாக குதித்தார்கள். கடல் கலங்கியது. உயிரினங்கள் அல்லாடின. அவர்களுடைய அட்டகாசங்களால் கடலை விண்ணுக்குப் பொங்க வைத்தன.
குறுமுனி அகத்தியர், சமுத்திரம் போன்ற ஞானக்கடலை சிற்றோடையாக தமக்குள் முடிந்து வைத்திருந்தவர். பெருங்கடலையும் அள்ளி முகர்ந்து குடித்துவிடும் வலிமையைப் பெற்றிருந்தவர்.

அவர் அந்த சமுத்திரக் கரையருகே அமர்ந்தார். அரக்கர்களால் கொந்தளித்துக் கொந்தளித்து கடல் படும்பாட்டைப் பரிவோடு கவனித்தார். அவருக்குள்ளிருந்த ஞானத்தீ பிழம்பாகி கடலைச் சந்தித்தது. அசுரர்கள் அதிர்ச்சியுற்றார்கள். குறுமுனியின் வெம்மை அவர்களைப் பொசுக்கியது. திறந்த அவரது வாய்க்குள் நீர் எளிதாகப் புகுந்து கடல் வற்றியது. கடல் மட்டுமா, சகல இடங்களும் வறண்டுவிட உயிர்கள் தவித்தன. உடனே, பெருங்கருணை கொண்ட இம்மகான், ஞான அலைகள் புரளும் புனித நீரை தொண்டை மண்டலத்திலுள்ள பஞ்சேஷ்டி என்ற தலத்தில் உமிழ்ந்தார்.

தடாகத்தில், பேரலை மகிழ்ச்சியுடன் நீர் பொங்கியது. நீர்ச்சாரலில் உயிர்தரும் அமிர்த வாசனை வீசியது. பூவுலகமே சிலிர்த்தது. அத்தலம் நோக்கி உயிர்கள் திரும்பின. அகத்தியரால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் சகலரும் நீராடி பெரும் பேறு பெற்றனர். அசுரனாக இருந்த சுகேதுவும் பழையபடி தேவராக மாறினான். குபேரனுக்கு அருகில் சென்று வணங்கினான், மன்னிப்பு கோரினான், அமர்ந்தான். உலகம் சீராக இயங்கத் துவங்கியது. அகத்தியரின் ஞானத் தென்றல் எல்லோரையும் வருடியது. அகத்தியர், அந்த தீர்த்தத்திற்கு அருகேயே இருந்த சுயம்பு லிங்கத்தைத் தொழுதார்.

ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மிக உயர்ந்த பிரம்மயக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம், மானுஷயக்ஞம், பிதுர்யக்ஞம் என்று ஐந்து விதமான வேள்விகளை நிகழ்த்தினார். வேண்டும் வரங்களை வற்றாது தரும் இந்த யாகங்களுக்கு ‘இஷ்டி’ என்று பெயர். அகத்தியரால் இந்த பஞ்ச (ஐந்து) யாகங்களும் இத்தலத்தில் நடத்தப்பட்டதால் இவ்விடம் ‘பஞ்சேஷ்டி’ என அழைக்கப்பட்டது. தற்போது பஞ்சேஷ்டி என்பது மருவி ‘பஞ்செட்டி’ என்று ஆகிவிட்டிருக்கிறது. அதெல்லாம் தாண்டி அன்னதானத்தையே ஒரு யாகமாக இங்கு செய்திருக்கிறார், அகத்தியர்.

இன்றும் பலபேர் வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்கிறார்கள். இது அன்னதானத் தலமென்றால் மிகையில்லை. இந்தக் கோயிலின் அசாதாரணமான ராஜகோபுரம், கோயிலின் உள்ளே நுழையுமுன் பக்தர்களைப் பல மணிநேரம் நின்று பார்க்க வைக்கும். ராஜகோபுரமா சிற்பக்கூடமா என்று பார்ப்போரை திகைப்பில் கட்டிப்போடும். பதினெண் புராணங்கள் விவரிக்கும் ஆயிரக்கணக்கான விஷயங்களை அநாயாசமாக அந்த சிற்பங்களில் செதுக்கியிருக்கிறார்கள், விஜயநகரப் பேரரசு காலத்தில் வாழ்ந்த சந்திரகிரி வம்சத்தினர். அந்த அற்புத முத்துச் சரத்தில் ஒருசில முத்துகள்:

பாற்கடல் மையத்தில் மேருவை இருத்தி வாசுகிப் பாம்பு அதை இறுக்க, தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடையும் காட்சி அசரவைக்கும். விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் விநியோகிக்கும் ஒயில் வியப்பூட்டும். ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டம் மயங்கிச் சரிந்து கிடக்கும் கோலம் நம்மை உடல் நடுங்க வைக்கும். கண்ணப்ப நாயனார் ஒருகாலை சிவலிங்கத்தின் மீது பதித்து இன்னொரு கண்ணையும் பிடுங்கிக்கொள்ளும் காட்சி வயிற்றில் உதிரம் சுரக்க வைக்கும். ராகு, கேது உருவான வரலாறும், பிரதோஷ காலத்தில் கயிலைநாதனின் ஆனந்தத் தாண்டவமும், நந்தி மத்தளம் கொட்டுவதும், நாரதரின் தம்பூரா, சரஸ்வதியின் வீணை மீட்டலும் விழியை விரிய வைக்கும் அற்புதம்.

ஆதிசிவனார் திரிபுரத்தை எரிக்க பிரபஞ்சத்தையே தேராகச் செய்து, சூரியசந்திரர்களை சக்கரங்களாக மாற்றி தேரை நகர்த்தும் அற்புதத்தையும், திரிபுராந்தகராக மலர்ந்ததையும் சிற்பத்தில் கொண்டுவந்து சாதனை செய்திருக்கிறார்கள். படேசாகிப்ருத்ரத்தில் வரும் ‘சமக’த்தை ஆட்டுத்தலை மகிஷன் பாடும் சிற்பம் அலாதியானது. குழலூதும் கண்ணனும், விஷ்ணுவின் அனந்தசயனமும், நரசிம்மரின் பலவிதத் திருக்கோலங்களும் மூச்சை நிறுத்தும் பேரழகு.

சிவனா, விஷ்ணுவா, பிரம்மாவா, அம்மனா, காளியா, கிருஷ்ணனா, முனிவர்களா, தேவர்களா எத்தனை கடவுளர்கள் உண்டோ அத்தனைபேரும் இந்த ராஜகோபுரத்திலேயே கோயில்கொண்டிருக்கிறார்கள்! இன்னும் எத்தனை எத்தனையோ சிற்பங்கள் விஷயங்கள் பல சொல்லி நம் வியப்பைப் பன்மடங்காக்கும். பல யுகங்களுக்குள் புகுந்து புராண சம்பவங்களைக் கண்ட பிரமிப்பை ராஜகோபுரம் கொடுக்க, அதனால் மிகவும் தயங்கி நிற்கும் கால்களை இயக்கி கோயிலுக்குள் நுழைவோம். முன் வாயிலிலிருந்து நேரே பார்க்க அம்பாள் தண்ணிலவாகத் திகழ்கிறாள்.

அருகேயே அகத்தீஸ்வரர் சந்நதி. ஈசனின் சந்நதிக்கு நேரே அகத்தியரின் சிலை உள்ளது. இத்தலத்தை சிகரத்திற்கு உயர்த்திய இவருக்கு வெள்ளிக் கவசம் செய்து ஆனந்தமடைந்திருக்கிறார்கள். மூலவரான அகத்தீஸ்வரர் சந்நதியை நெருங்க கடலலைபோல அருட்சாரல் மனதில் மோதித் தெறிக்கிறது. பஞ்ச யக்ஞங்களால் சிவந்த அந்தத் தலத்தில் இன்னும் மென்மையாய் தணல் பரவிக் கிடக்கிறது. பூவின் வாசமும், விபூதியின் மணமும், அச்சந்நதியை நிறைத்து மனதை லேசாக்குகிறது.

இஷ்டி என்றால் விருப்பம் என்றும் பொருளுண்டு. வேண்டும் வரங்களைப் பெற்றிடவே பஞ்ச யாகங்களை அகத்தியர் இத்தலத்தில் நிகழ்த்தியுள்ளார். சந்நதி முன் நின்றபடி விஷயங்களை மனதில் நினைக்க, அவற்றை உடனே நிறைவேற்றுவதில் அதிவேகமிக்கவர் அகத்தீஸ்வரர். அந்தச் சாந்நித்தியத்தை விட்டு விலக மனமில்லாது இங்கேயே தங்கிவிட மாட்டோமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆனால், இவரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைகொண்டாலே போதும். மீதியை அவர் பார்த்துக் கொள்வார் என்பதுதான் அனுபவபூர்வமான உண்மை.

காஞ்சியை ஆண்ட மித்ரத்வஜன் எனும் மன்னன் பிரதோஷம் தவறாது அகத்தீஸ்வரரை வணங்கிச் செல்வான். ஒரு பிரதோஷ காலத்தில் பஞ்சேஷ்டிக்கு வந்தான். அப்போது புலியொன்று ஒரு வயோதிகனை மடக்கிக் கொண்டது. ‘விட்டு விடு’ என்றான் மித்ரத்வஜன். ‘தனது குட்டி உயிர் வாழ வேண்டுமெனில் வயோதிகன் உணவாக வேண்டும்’ என உறுமியது புலி. ‘அப்படியா? அவருக்கு பதில் என்னை உணவாக்கிக் கொள். ஆனால், நான் பஞ்சேஷ்டி நாயகனாம் அகத்தீஸ்வரரை தரிசித்து வந்து விடுகிறேன். அதுவரை காத்திரு. என் ஈசன் மீது ஆணை’ என்று உறுதியளித்தான்.

கண்களில் நீரோடு அகத்தீஸ்வரரை தரிசித்தான். காடு திரும்பினான். புலியை நோக்கிக் கைகூப்பி, ‘எடுத்துக்கொள் என்னை’ என்றான். சட்டென்று புலி மறைந்தது. ரிஷிபாரூடராக ஈசன், உமையோடு எழுந்தார். மித்ரத்வஜனை ஆட்கொண்டார். புலி மறைந்து சிவனாக காட்சியளித்த இடம் இன்றளவும் ‘திருவிலங்கேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்கதை இத்தலத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது.
ஈசனின் சந்நதியை விட்டு மனமின்றி நகர்ந்து ஆனந்தவல்லித் தாயார் சந்நதியை தரிசிப்போம்.

‘முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்குமில்லையே’ என்று அபிராம பட்டர் பாடியவாறு ஆனந்தவல்லிக்கு மூன்று கண்கள், இத்தலத்தில். பச்சை மரகதத் திருமேனி. இடது பாதத்தை சற்றே முன்வைத்து மூன்று கண்களையும் அகலத் திறந்து அசுரர்களை சம்ஹரித்த தோற்றம். அகத்தியரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சத்ரு சம்ஹார கோலம் எடுத்திருக்கிறாள். ஆனால், திருமுகமோ, ‘இவளா சம்ஹரித்தாள்!’ என்று அதிசயிக்கும்படி மென்மையும், சாந்தமும், அழகும் குடிகொண்டிருக்கும் கொள்ளை அழகுடன் மிளிர்கிறாள்.

அகத்தியரே அம்பாளை சாந்தப்படுத்துவதற்காக துர்க்கா யந்திரத்தை பிரதிஷ்டை செய்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்குமோ? யந்திரத்திலிருந்து பரவும் குங்குமத்தின் சுகந்தம் அச்சந்நதியை சுழற்றியடிக்கிறது. அச்சூறையில் சுழன்று, தீவினைகள் காணாமல் போகின்றன. கோயிலை வலமாகச் சுற்றி வந்தால் அகத்தியருடைய சீடர் புலத்தியர் இஷ்டலிங்கம் என்றொரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார். மக்கள் அங்கு அமர்ந்து தியானிக்கிறார்கள். அதிர்வுகளால் நிறைந்த இன்னொரு அழகான இடம் அது.

அருகேயிருக்கும் கம்பிக் கதவுகள் வழியே பார்க்க அகத்தியர் உருவாக்கிய தீர்த்தம் பரந்து விரிந்திருக்கிறது. வைகாசி பௌர்ணமியில் அதிலே கங்கை சங்கமிப்பதாக ஐதீகம். காலத்தால் அழிக்க முடியாத தடாகத்தைக் காணும்போது அகத்தியரின் சத்தியம் எப்பேற்பட்டது என்ற பிரமிப்பு மேலிடுகிறது. மேலும் இக்கோயிலில் சிருஷ்டிக் கோலத்தோடு காணப்படும் முருகப்பெருமான், சண்டிகேஸ்வர சந்நதி, நவகிரக சந்நதி என்று ஆலயத்தைச் சுற்றி அழகாக அமைந்துள்ளன.

வருடாந்திர விசேஷ தினங்களில் கோயிலே கயிலையாக மாறுகிறது, உண்மை. கோபுரம் முதல் கருவறை வரை தரிசித்து, பிராகாரத்தை வலமாக வந்து கொடிமரத்தில் வீழ்ந்து நமஸ்கரிக்க நமக்குள்ளும் அகத்தீ சட்டென்று பற்றிக் கொள்கிறது. சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் புழலை அடுத்துள்ள காரனோடை ஜனப்பத்சத்திர கூட்டுரோடை தாண்டி நெடுஞ்சாலையிலேயே 3 கி.மீ. பயணித்தால் பஞ்செட்டியை அடையலாம். சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply