சனீஸ்வரர் அருள் பெற்ற குரு ஸ்தலம்! இழந்ததை அடைந்து இனிதே வாழ்வீர்கள்!

0

சனீஸ்வர பகவானின் அருளுடன் திகழும் திட்டை குரு பகவான் தலத்துக்கு வந்து வேண்டுங்கள். இழந்ததைப் பெறுவீர்கள். இனிதே வாழ்வீர்கள்!

தாயாரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, தந்தையின் சொல்படி எமதருமன் வந்து, கடும் தவம் செய்து வழிபட்டு, சிவபெருமானின் அருளைப் பெற்று தருமராஜன் எனும் பதவியைப் பெற்றான் அல்லவா.

அதேபோல, தந்தையின் ஆணைப்படி சனி பகவானும் திட்டை திருத்தலத்துக்கு வந்தார். சிவனாரை நோக்கி தவமிருந்தார். நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டிருப்பது போலவே, வேத நெறி பிறழாமல், சிவ பூஜையில் லயித்தார்.

நாம் என்ன செய்கிறோம்? கோயிலுக்குப் போகிறோம். அங்கே, ஸ்வாமிக்கு உரிய வஸ்திரத்தை வழங்கி, உரிய நைவேத்தியத்தைப் படைத்து, உரிய மலர்மாலைகளை அணிவித்து, முன்வரிசையில் நின்று கொண்டு, தீபாராதனை காட்டுகிற வேளையில், நம் கோரிக்கைகளையும் விருப்பங்களையும், ஆசைகளையும் தேவைகளையும் பட்டியல் போட்டு வேண்டிக் கொள்கிறோம். பிறகு மற்ற ஸ்வாமிகளையும் தரிசித்துவிட்டு, கோயிலை விட்டு வெளியே வந்தது முதல், ‘நம்மளோட வேண்டுதல் எப்போ நடக்கும் எப்போ நடக்கும்’ என்று எதிர்பார்த்தே காலத்தை ஓட்டுகிறோம்.

ஆனால் சனிபகவான், ஒருவருடமோ பத்து வருடமோ அல்ல… சுமார் ஆயிரம் வருடங்கள் சிவனாரை நினைத்து பூஜை செய்தார். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து, தவத்தில் மூழ்கிக் கிடந்தார். முழுவதுமாக தன்னையும் தன் எண்ணங்களையும் சிவபாதத்தில் ஒப்படைத்து, சரணடைந்தார். அதன் விளைவாக… சிவனார் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக பதவி தந்து அருளினார்.

நவக்கிரகங்களில் ஒருகிரகம்.. சனி கிரகம். அதிலும் கிரகங்களுக்கெல்லாம் நாதனாகத் திகழ்கிற பாக்கியமும் கிடைத்தது சனிபகவானுக்கு!

அதுமட்டுமா? சிவனாருக்கு இணையாக, ஈஸ்வரனுக்கு நிகராக, சனீஸ்வரன் என்று நாம் போற்றும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் இருந்து அருள்பாலிக்கிறார் சனீஸ்வர பகவான்.

பதவி உயர்வு நிச்சயம்!

எதிர்ப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் பதவியும் கிடைக்கலை; உயர்வும் இல்லை. உரிய ஊதியமும் தரலை என்று எதிர்பார்த்து ஏங்குபவர்கள், இந்தத் தென்குடித்திட்டை தலத்துக்கு ஒருமுறையேனும் வாருங்கள். உங்கள் குறைகளை சிவனாரிடம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். அப்படியே குரு பகவானிடம் வேண்டிக் கொண்டு, குரு பலத்தையும் பெற்று, நினைத்தபடி பதவி, உயர்வு, ஊதியம் ஆகியவற்றைப் பெற்று அமோகமாக வாழ்வீர்கள்.

அதுமட்டுமா? ஆத்மார்த்தமாக சிவனாரையும் அம்பாளையும் வேண்டுங்கள். இழந்த பதவியைப் பெறுவீர்கள். இனிதே வாழ்வீர்கள்!- Source: thehindu


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply