அஷ்டமி பிரதட்சணம்… ஈசன் உலக உயிர்களுக்கு படியளக்கும் திருநாள்

0

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவன் ஈசன். ஓரறிவு உயிரணுவில் தொடங்கி ஆறறிவு மனிதன் வரை அவனின் அருட்பார்வையினால் தான் ஜீவிக்கிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசி களுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும். இது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழா அங்கு, ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. இந்த படியளக்கும் திருநாள் எதற்காக சிறப்பிக்கப்படுகிறது என்பது பற்றிய ஒரு சுவாரசியமான புராணக் கதையைப் பார்ப்போம்.

கயிலாயத்தில் ஒரு சமயம், பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’என்பது தான் அது.சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா… ஒரு எறும்பை எடுத்து குடுவைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.

குடுவைக்குள் அடைப்பட்டுள்ள அந்த சின்னஞ் சிறிய உயிருக்கு ஈசன் எப்படி படியளக்கிறார் பார்ப்போம் என்று நினைத்தாள்.

வழக்கம் போல், சிவபெருமான் அன்றைய தினம் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.

‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்..?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.

‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஈசனை சந்தேகப்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இந்த திருவிளையாடல் நடந்த நாள் – மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள். இந்த படியளக்கும் லீலை சொக்கநாதர் வீற்றிருக்கும் மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது. இன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவது விழாவின் சிறப்பம்சமாகும்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவு கூறும் வகையில், அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். ஏற்ற தாழ்வு இன்றி அனைத்து மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் படியளக்கும் விழா சப்பரம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். மதுரையில் நடக்கும் மற்ற விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம்.

இன்றைய நாளில் பெரிய அளவில் நம்மால் தான தர்மங்கள் செய்ய முடியாவிட்டாலும்,நம்மால் இயன்ற அளவு, விரதமிருந்து மார்கழி அஷ்டமி திருநாளில் நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து சொக்கனின் அருளைப் பெறுவோம்.- Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply