அனுமான் பற்றிய இந்த அரிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

0

ஆந்திர மாநிலம் புட்டப்பர்த்தி ஹில் வியூ ஸ்டேடியத்தின் அருகில் உள்ள மலைமீது, சஞ்சீவிமலையினை தமது இடது கரத்தில் தாங்கியபடி நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் உயரம் 63 அடி. இந்த ஆஞ்சநேயரின் கையில் தாங்கிக் கொண்டிருக்கும் சஞ்சீவி மலை மட்டும், 300 டன்னுக்கு மேல் எடையுள்ளது. மொத்த சிலையின் எடை 750 டன் ஆகும். இத்திருமேனி கான்கிரீட்டால் உருவானது.

பொதுவாக ஆஞ்சநேயர் சந்நதியில் வழிபாடுகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக செந்தூரம் மற்றும் துளசி தீர்த்தம் வழங்குவார்கள். ஆனால் தருமபுரி மாவட்டத்தில் தீர்த்த மலைக்கு அருகே அமைந்துள்ள ஸ்ரீ அனுமந்தீஸ்வரர் என்ற பெயரில் அருட்பாலிக்கும் ஆஞ்சநேயர் சந்நதியில் வழக்கத்திற்கு மாறாக திருநீறும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீ ராமபிரான், சிவபூஜை செய்வதைக் கண்ணுற்ற அனுமன் ஹரியும் சிவனும் ஒன்று என்று உணர்ந்தாராம். அவரைப் போன்று மக்களும் உணர வேண்டும் என்பதால் இந்த மாறுபட்ட பிரசாதம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரை ‘குபேர ஆஞ்சநேயர்’ என்று போற்றுகிறார்கள். ஸ்ரீ ராமபிரான் தென்திசையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தபோது ஸ்ரீ ஆஞ்சநேயர் வடக்கு பக்கமாக திரும்பி அவரைப் பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசையைப் பார்த்தபடி காட்சித் தருகிறார். இது குபேர திசையாகும். இவரை வழிபட செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், இத்தலத்து ஆஞ்சநேயர் பிராகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருள்புரிகிறார். இவர், தனது வாலைச்சுருட்டி தலைக்கு மேல் கிரீடம் போல வைத்து ‘வராக (பன்றி) முகத்துடன்’ காட்சி தருவது தனிச்சிறப்பு என்று போற்றப்படுகிறது.

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில், ஜக்குமலைப் பகுதியில் உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்த பின்னர், ஜக்கு மலையில் தான் ஓய்வு எடுத்தாராம். அதன் நினைவாக ஒரு அனுமன் கோயில் அமைக்கப்பட்டது. இந்தக் கோயில் அருகில்தான் வலது கையில் கதாயுதத்துடன், நின்ற கோலத்தில் 108 அடி உயரமுள்ள அனுமன் திறந்த வெளியில் காட்சி தருகிறார். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply