மன உளைச்சல் நீக்கி தெளிவு தரும் சாந்தநாயகி வழிபாடு..!

0

பிரம்மமான பரமேஸ்வரன் அரு உருவை குறிக்கும் அம்சமாகவுள்ள லிங்கத்திருமேனி கொண்டு கோயில்களில் எழுந்தருளி பக்தர்களை தன் திருவடி சேர்த்துக்கொள்ள, ரத்தின கம்பளம் விரிக்கிறார். அவ்வாறு மகேசன் உறையும் சிறப்புமிக்க தலங்களில் ஒன்றுதான் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோயில். பொன்னன் என்பது பிரம்மனைக் குறிக்கும். பிரம்மன் இங்கு வழிபட்டதன் காரணமாக இவ்வூர் பொன்னூர் என்றானது. ஒரே வளாகத்தில் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இது சைவவைணவ ஒற்றுமையினை மேலோங்க செய்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தொண்டை மண்டல வைப்பு தலமாக போற்றிய சிறப்புடையது பொன்னூர் திருத்தலம்.

இங்கு ஈசன், ‘திருக்காமீஸ்வரர்’ எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். பராசர முனிவர் வழிபட்டதால் பராசரேஸ்வரர் என்றும் பிரம்மன் பூஜித்தமையால் பிரம்மேஸ்வரர் என்றும் இவருக்கு பல்வேறு திருநாமங்கள் உள்ளன. கிழக்கு முகம் பார்த்தபடி ஒளிவீசும் பொன்னார் மேனியனாக பிரகாசிக்கின்றார் இறைவன். அர்ச்சகர் ஆரத்திக்காட்டும்போது, கற்பூர ஒளி லிங்கத்தின் மீது பட்டு தகதகவென மின்னும். தாயார் சாந்தநாயகி என்ற திருநாமத்தோடு சாந்தமே உருவாய் அருளை வாரி வழங்குகின்றாள். பலவித பிரச்னைகளால் மன உளைச்சல் கொண்டவர்கள் தாயாரை மனம் உருகி வணங்கினால் உடனே தெளிவு கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான நம்பிக்கை.

ஒரே திருச்சுற்றுடைய இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. இங்கு சிவன் சன்னதியும், அம்பிகை சன்னதியும் ஒரே சபா மண்டபத்தை கொண்டதாக அமைந்துள்ளது. அதாவது இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும் அம்பாள் சன்னதி தென்முகமாகவும் உள்ளது. இதனால் ஒரே இடத்தில் நின்றவாறு ஒரே நோக்கில் சுவாமியையும் அம்பாளையும் தரிசிக்கலாம். இது மிகவும் அரிய தரிசனமாகும். சுவாமி சன்னதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் அமைந்துள்ளது. அம்பாள் சன்னதி சபா மண்டபம், மகா மண்டபம், அந்தராளம், கருவறை ஆகிய அமைப்போடு அமைந்துள்ளது. இத்தல தீர்த்தமாக, தென்கிழக்கு மூலையில் திருக்குளம் அமைந்துள்ளது. பிரம்மா ஏற்படுத்தியதால் இது ‘பிரம்ம தீர்த்தம்’ என்று போற்றப்படுகிறது.

தல விருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. இவ்வாலய கோஷ்ட தெய்வங்கள் யாவும் சுற்று முறையில் இன்றி, வரிசை முறையில் மகா மண்டபத்தில் காணப்படுவதும் விசேஷம். சரக்கொன்றை மலரால் திருக்காமீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் நீண்டநாள் பாவங்களில் இருந்து சாப விமோசனம் பெறலாம். பல்லவர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்த வளாகத்திலுள்ள பெருமாள் சன்னதியும் கட்டப் பெற்றுள்ளது. இச்செய்தியினை பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டின் மூலம் அறியலாம். மீண்டும், வென்றுமண் கொண்ட சம்புவராயரின் 14வது ஆட்சிக் காலத்தில், அதாவது கி.பி.1336ல் விஷ்ணு சன்னதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீ விண்ணகர் என்று அழைக்கப்பெற்ற இப்பெருமாள் ஆலயம் தற்போது அழகப்பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது. சிவன் சன்னதிக்கு வடபுறம் ஏழு அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்று உள்ளது.

இச்சிலையே பழைய பெருமாள் சிலையாகும். மேற்கு நோக்கியிருக்கும் இத்திருமால் ஆலயம், ஒரு சுற்று கொண்டது. மூலவர் சிலை அத்தி மரத்தால் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தைல சேவை மட்டுமே; அபிஷேகம் கிடையாது. அரசர் காலத்தில் ஸ்ரீகரண விண்ணகர எம்பெருமான் என்று அழைக்கப்பட்ட இப்பெருமாள் ஸ்ரீதேவிபூதேவி சமேதராகக் காட்சி தருகின்றார். இவருக்கருகே சவுந்தர்ய வரதராஜப் பெருமாளின் கற்சிலை சிறிய அளவில் உள்ளது. இப்பெருமானுக்கு அபிஷேகம் உண்டு. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பொன்னூர். வந்தவாசியிலிருந்து கீழ்புத்தூர், வங்காரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பொன்னூரை அடையலாம். வந்தவாசியிலிருந்து நேரடிப் பேருந்துகளும் உள்ளன.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply