கேது திசை இருக்கும்போது திருமணம் செய்யலாமா?

0

இறையருளும் குருவருளும் இருந்தால், எந்தத் தடையையும் வெல்லலாம். எந்த தோஷத்தின் வீரியத்தையும் குறைக்கலாம். ஆகவே கவலை வேண்டாம் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

ஆனாலும் திருமணத்திற்குத் தடை தரக்கூடிய சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்,

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தார், 33 வயது,7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

அவருக்கு ஒருமுறை அல்ல இருமுறை திருமணம் நடந்துள்ளது, ஆனாலும் தற்போது தனியாகத்தான் உள்ளார்.

ஏன்? என்ன ஆனது?

முதல் கணவர் விபத்தில்உயிரிழந்தார். (இவருக்குப் பிறந்த குழந்தைதான் இந்தப் பையன்).

இரண்டாவதாக விவாகரத்து பெற்றவரை மணந்தார், ஆனால் அவர் சில மாதங்களிலேயே தன் முதல் மனைவியோடு மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கிவிட்டார். இந்தப் பெண் மீண்டும் தனிமையாக வாழ்ந்து வருகிறார்.

இப்போது அந்தப் பெண்மணியின் கேள்வி… எனக்கு ஏன் திருமணம் நிலைக்கவில்லை? ஏதாவது தோஷம் உள்ளதா?

நன்றாக கவனியுங்கள். இவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை. ராகு கேது தோஷமும் இல்லை.

ஆனாலும் ஏன் மணவாழ்க்கை நிலைக்கவில்லை?

மிக எளிமையான விஷயம்தான். அதாவது மிகச் சாதாரணமான விஷயம்தான் நடந்திருக்கிறது அப்போது.

இவருடைய முதல் திருமணம் நடக்கும் போது கேது திசை நடந்தது.

இரண்டாவது திருமணமும் அதே கேது திசையில் தான் நடந்தது,

எனவேதான் இரண்டும் நிலைக்கவில்லை.

முதல் கணவர் இறந்தது அவர் ஜாதகப்படி மாரக திசை,

இந்தப் பெண்ணுக்கு கேதுதிசையின் காரணமாக நிலைக்காத கணவர் அமைய வேண்டும் என்பது விதி. ஆகவே அது நடந்தது.

இரண்டாவது கணவர் ஆயுளுக்கு பங்கம் இல்லை. அதனால் மனம் மாறி முதல் மனைவியிடமே அவரைக் கொண்டு சேர்த்தது,

இப்போது சொல்லுங்கள்… தோஷமே இல்லாதவருக்கும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறதா? இல்லையா?

எனவே தோஷங்களுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்,

உங்கள் ஜாதகத்திற்கும் இன்றைய கிரக நிலைகளுக்கும் உள்ள தொடர்பை கவனித்து, என்ன திசா புத்தி நடக்கிறது என ஆராய்ந்து மண வாழ்க்கை அமைத்துக் கொண்டால் சிறப்பைத் தரும்.

சரி… கேது திசையில் திருமணம் செய்யக்கூடாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

அதற்கு முன்னதாக, முதலில் கேதுவைத் தெரிந்து கொள்வோம்,

ஓரிரு வரிகளில் சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.

சர்க்கரை நோயாளியிடம் லட்டு கொடுத்தால் என்ன செய்வார்? அவர் சாப்பிடமாட்டார். சாப்பிட்டால், இன்னும் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும். வேறுயாரிடமாவது கொடுத்து விடுவார்.

அதுபோலத்தான் கேது பகவான் ஒருவருக்கு பொருளைக்கொடுத்துவிட்டு அதை அனுபவிக்க விடமாட்டார். அல்லது அந்த பொருளினால் பிரச்சினைகளைக் கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்,

கேதுவின் திசா ஆண்டுகளான 7 வருடமும் இது நீடிக்கும்.

இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

ஒரே பதில்… ஏழு வருடத்தையும் அமைதியாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதன் மீதும் பற்றில்லாமல் துறவியைப்போல் வாழ்ந்தால், துன்பம் இல்லாமல் கடந்து போய்விடலாம். எதன் மீதாவது ஆசையோ பற்றோ வைத்தால் அவ்வளவுதான்… அதை உங்களுக்கு உடனடியாகக் கொடுத்து அதன்மூலமாக பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போவார்.

வேறு பரிகாரமே இல்லையா என்று கேட்கிறீர்களா?

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பரிகாரம் என்பது தோஷத்தின் வீரியத்தைக் குறைக்குமே தவிர, தோஷத்தையே இல்லாமல் செய்துவிடாது.

தோஷ வீரியத்தை எப்படிக் குறைக்கலாம்? உங்களுக்கு ஒரு பழமொழி சொல்கிறேன்.

“பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை” என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் உண்மையான அர்த்தம் பிள்ளையாரில் தொடங்கி அனுமனிடம் முடிக்க வேண்டும் என்பதே.

காரணம் கேது என்பவர் பாம்பின் வால் பகுதி ஆவார், எனவே துதிக்கை உள்ள விநாயகரும், வால் உள்ள அனுமனும் கேது திசையின் வீரியத்தை கட்டுப்படுத்தவார்கள்.

மேலும் கேது பகவானின் அதிதேவதை வழிபாடும் பலம் சேர்க்கும்.

யமதர்ம ராஜனின் உதவியாளர், நம் பாவபுண்ணியங்களை கணக்கிட்டுவரும் “சித்ரகுப்தன்” தான் கேதுவின் அதிதேவதை.

அவர் காஞ்சிபுரத்தில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார் சித்திரகுப்தன். அந்தக் கோயிலுக்குச் சென்று 7 விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். நன்மை நடக்கும். அப்படிக் கோயிலுக்குச் செல்லும் போது, மறக்காமல் உங்கள் ஜாதகத்தையும் எடுத்துச் சென்று அவர் காலடியில் வைத்து வணங்குங்கள்.

பௌர்ணமி அல்லது சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தரிசனம் செய்யுங்கள். நல்ல மாற்றத்தை உணருங்கள்.

இன்னும் சில பரிகாரங்கள்…

நவக்கிரகத்தில் உள்ள கேது பகவானுக்கு சித்ரான்னம் எனும் உணவு அல்லது புளியோதரை சாதம் நைவேத்தியம் செய்து தானம் வழங்குங்கள். நன்மை கிடைக்கும்.

இதையெல்லாம் செய்ய முடியாவிட்டால், சித்தன் போக்கு சிவன் போக்கு” என அமைதியாக இருங்கள். எல்லாம் நன்மையே.

ஆமாம் அந்தப் பெண்ணுக்கு என்னதான் தீர்வு சொன்னீர்கள்? என்று கேட்கிறீர்களா?

3 வது திருமணமே நிலைக்கும் எனச் சொன்னேன்.- Source: thehindu


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply