இழந்தது கிடைக்க இங்கு வாருங்கள்! ஒரு தாமரை, ஒரு கை வில்வம் போதும்!

0

திருமால்பூர் தெரியுமா. எங்கே இருக்கிறது என்று தெரியுமா? போயிருக்கிறீர்களா?

இப்படியொரு ஊர் இருப்பது சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு யூனிட் ரயில் எனப்படும் எலெக்ட்ரிக் ரயிலைக் கொண்டுதான் தெரியும் என நினைக்கிறேன். சென்னை பீச் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து திருமால்பூர் ரயில்நிலையத்துக்கு யூனிட் ரயில்கள் இயங்குகின்றன.

சென்னையில் இருந்து தாம்பரம் வழியே செங்கல்பட்டு வந்து, அங்கிருந்து திருமால்பூருக்குச் செல்கின்றன எலெக்ட்ரிக் ரயில்கள். ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருமால்பூர். காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில், 14 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர்.

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், காஞ்சிபுரம் செல்லும் நுழைவாயில் வளைவு வரும். அதையடுத்து வரும் மேம்பாலத்தின் கீழே சென்று, அரக்கோணம் செல்லும் சாலையில் பயணித்தால், 14 கி.மீ. தொலைவில் உள்ள திருமால்பூர் ரயில்வே ஸ்டேஷனை அடையலாம். அங்கிருந்து 4 கி.மீ. தொலைவு சென்றால், திருமால்பூரையும் ஊருக்கு நடுவே உள்ள ஸ்ரீமணிகண்டீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம். ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

வேலூர் மாவட்டத்தின் கடைக் கோடியில், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்தத் திருமால்பூர் தலத்தை, பக்தர்கள் பலர் இன்னும் சரிவர அறியவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அருகில் இருந்தாலும்கூட, காஞ்சிக் கோயில்கள்போல இந்தக் கோயில் பிரசித்தி பெறவில்லை. அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய தலம் இது.

‘’பெருமாளுக்கே வரம் தந்த சிவனார். இவரின் திருநாமம் மணிகண்டீஸ்வரர். இங்கே எந்தக் கிழமையிலும் வந்து வேண்டிக் கொள்ளலாம். ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்ததில் குளிர்ந்துபோன ஸ்ரீமணிகண்டீஸ்வரருக்கு நாம் – ஆயிரம் மலர்களெல்லாம் வேண்டாம், ஒரேயொரு தாமரைப்பூ, கொஞ்சம் வில்வம் கொண்டு வந்து சார்த்தினாலே போதும்; குளிர்ந்துவிடுவார் மணிகண்டீஸ்வரர். வரப்பிரசாதி இவர். இவரை தரிசிக்க தரிசிக்க, வாழ்வில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்கிறார் கோயிலின் சண்முக குருக்கள்.

கிழக்குப் பார்த்த கோபுரம். கருவறையில் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகிறார் ஸ்ரீமணிகண்டீஸ்வரர். லிங்கத் திருமேனிக்கு வஸ்திரம் சார்த்தி, தாமரையும் வில்வமும் சமர்ப்பித்து வழிபட்டால், நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்; கடன் தொல்லையில் இருந்து மீளலாம் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

மிகச் சிறிய மூர்த்தம்தான். ஆனால், ஓங்கி உயர்ந்த கீர்த்தியைக் கொண்டவர் மணிகண்டீஸ்வரர். மனக்கிலேசம் உள்ளவர்கள், குழப்பத்தில் தவிப்பவர்கள், இனம் புரியாத கவலையும் மனம் கொள்ளாத துக்கமும் கொண்டு கலங்குபவர்கள், எதிலும் தயக்கம் எப்போதும் சோகம் என இருப்பவர்கள் இங்கு திங்கட்கிழமையன்று வந்து, வழிபடுவது, வாழ்வில் மிகப்பெரிய நல்லதொரு மாற்றத்தை வழங்கும் என்பதுதான் தலத்தின் மகிமை என்று போற்றுகிறார்கள் சிவவழிபாட்டுக் குழுவினர்.

திங்கள்கிழமை என்பது சிவனாருக்கு உகந்த நாள். திங்கள் என்றால் சந்திரன். அவன் மனோகாரகன். சந்திரனும் இந்தத் தலத்தில் தங்கி, ஈசனை வழிபட்டுள்ளான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கு வந்து வழிபட்டால், சந்திர பலம் பெருகும். மனோபலம் அதிகரிக்கும். மனக்கிலேசங்கள் நீங்கும். குழப்பங்கள் தீர்ந்து, தெளிவான மனோநிலையுடனும் மன உறுதியுடனும் நிம்மதியும் நிறைவுமாக வாழலாம்!

மேலும் இழந்த பொருளைப் பெறுவதற்கும், இழந்த அல்லது தடைப்பட்ட பதவியை அடைவதற்கும் திருமால்பூர் மணிகண்டீஸ்வரரை வணங்கினால், விரைவில் நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

இழந்த தன் சக்ராயுதத்தை திருமால் தவமிருந்து பெற்ற தலம் இது. சந்திர பகவான், இழந்த தன் பொலிவை மீண்டும் அடைவதற்கு தவம் இருந்து, பலன் பெற்ற திருத்தலமும் இதுவே. எனவே, இங்கு வந்து சிவ தரிசனம் செய்து, சிவனாருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், இழந்ததை விரைவில் பெறலாம் என்கிறார் சண்முக குருக்கள்.- Source: thehindu


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply