வாழ்வை வளமாக்கும் வலம்புரிச்சங்கு அபிஷேகம்…!

0

சிருஷ்டியின் ஆரம்பத்தில் இறைவன் ஜலத்தினின்று ஆவிர்ப்பவித்ததால் நாராயணன் என்று திருமால் வணங்கப்படுகிறார். நாரா என்றால் நீர், ஜலம். அந்த நாராயணன் ஜலநாராயணன் என்ற பெயரிலேயே திருவள்ளூர் வைத்யவீரராகவர் கோயிலுக்கு தென்கிழக்கில் உள்ள காக்களூர் ஊராட்சி, பூங்கா நகரில் கோயில் கொண்டுள்ளார். இது சிவா விஷ்ணு திருக்கோயிலாகும். இந்த ஆலயத்தின் கோபுரம் எதிரே கிணறு ஒன்று இருந்தது. அவ்வாறு இருப்பது கோயில் ஆகம விதிப்படி சரியல்ல எனக்கருதியதால் அதை மூடிவிட்டு வடகிழக்கு (ஈசான்யம்) மூலையில் கிணறு இருக்க வேண்டும் என்ற வாஸ்து அடிப்படையில் கிணற்றுக்குப் பதில் ஒரு நீர்த் தொட்டியை அமைத்தார்கள். நேப்பாள தலைநகர் காட்மாண்ட்டில் உள்ள ஜலநாராயணனைப்போல் இங்கும் ஒரு பெருமாள் சிற்பம் தயார் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள். விரைவில் 10 டன் எடை கொண்ட சிற்பம் உருவானது.

11 தலை ஆதிசேஷனின் மேல் நர்த்தனமாடும் பெருமாள் தன் திருக்கரங்களில், சங்கு, சக்ரம், கதாயுதம், அட்சய பாத்திரம் ஆகியவற்றைத் தாங்கியபடி, ஆகாயத்தை அருட்பார்வையால் நோக்கும் எழிலார்ந்த வடிவமாய் ஜலநாராயணன் உருவானார். 6.4.12 அன்று ஜலநாராயணர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதற்கு அடுத்தநாள் காலையில் ஜலநாராயணர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி நல்ல பாம்பு ஒன்று வலம் வந்து போன தடம் தெரிந்தது; அதோடு இக்கோயிலில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பூக்காமல் இருந்த நாகலிங்க மரம், பிரதிஷ்டை தினத்திலிருந்து பூத்துக் குலுங்குகிறது. ஏகாதசி திதிகளில் ஜலநாராயணருக்கு பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் காலை ஒன்பது மணி முதல் பத்தரை மணிக்குள் அபிஷேகம் செய்கிறார்கள். அப்போது ஒவ்வொரு முறையும் சந்நதியின் மேலே வானத்தில் கருடன் வட்டமிடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

பின் அவருக்கு அலங்காரம் செய்வித்து அர்ச்சனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து மகாலட்சுமியின் அம்சமான நெல்லிக்காயை வலம்புரிச் சங்கில் வைத்து பன்னீர் மற்றும் பூக்கள் நிறைந்த தீர்த்தத்தைக் கொண்டு ஜலநாராயணரை வலம் வந்து தங்கள் பிரார்த்தனைகளை அவரிடம் பக்தர்கள் கூறுகின்றனர். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறவும், கஷ்டங்கள் தீரவும், சந்தான பாக்கியம் கிட்டவும், திருமணத் தடைகள் நீங்கவும், நோய்கள் விலகவும், கடன் பிரச்னைகள் தீரவும், சொந்த வீடு வேண்டியும், வழக்குகளில் வெற்றி கிட்டவும் வேண்டிக்கொண்டு அந்த வலம்புரிச் சங்கில் உள்ள நீரை ஜலநாராயணரின் பாதத்தில் சமர்ப்பித்தால் அத்தனை பிரச்னைகளும் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதில் உள்ள நெல்லிக்காயை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து மறுநாள் காலையில் குளித்துவிட்டு பூஜை செய்து உட்கொண்டால் வேண்டிக் கொண்ட பிரச்னைகள் விரைவில் நிவர்த்தியாகின்றன.

இத்தலத்தில் ஸ்ரீனிவாசர்பத்மாவதி, புஷ்பவனேஸ்வரர் பூங்குழலி என விஷ்ணு, சிவ தம்பதியர் ஒரே இடத்தில், தங்களுக்கென்று தனித்தனி கொடிமரங்களுடன் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களை அருள்கின்றனர். மேலும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட கன்னிமூல கணபதி, லட்சுமி ஹயக்ரீவர், செல்வ விநாயகர், புஷ்பவனேஸ்வரர், பூங்குழலி அம்பாள், சுப்ரமணியர் வள்ளி தெய்வானை, ஐயப்பன், கன்னிகா பரமேஸ்வரி, நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை, வலம்புரி விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள், நால்வர், ஆதிசங்கரர், சிவசூரியர், ராமலிங்கர், அகத்தியர், நாகர், த்வஜகணபதி, ஸ்ரீனிவாசர், பத்மாவதி, ராதாருக்மிணி சமேத வேணுகோபாலர், ராமர் சீதை லட்சுமணர் ஹனுமன், ராமானுஜர், வேதாந்த தேசிகர், கருடாழ்வார் என அத்தனை தேவ தேவியரும் எழுந்தருளியுள்ள அற்புதத் தலம் இது.

ராஜகோபுரத்திற்கு மேற்கு திசையில் ஏழை எளிய மக்கள் இலவசமாக பயன் பெறும் வகையில் திருமணம் மற்றும் மங்கள வைபவங்கள் நடத்திட வசதியாக 2,200 சதுர அடி பரப்பளவில் மகா திருமண மண்டபம் ஸ்ரீஜயந்தி ஹால் எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் இத்தல ஈசனும், அம்பிகையும் திருத்தேரில் ஆரோகணித்து ஆலய வலம் வருவது வேறு எந்தத்தலத்திலும் இல்லாத நிகழ்வாகக் கருதப்படுகிறது.- Source :dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply