ஷீரடி சாய் பாபாவின் புனித சரித்திரம்..!

0

நான் நுழைவதற்கு சுவரோ, மலையோ தடையாக இருக்காது. ஆனால் உங்கள் மனதில் நம்பிக்கையின்மை, என் மீது முழுமையான விசுவாசமின்மை என்ற தடைகள் இருக்கின்றனவே… அவற்றைத் தாண்டி என்னால் வர முடியவில்லை. அவற்றை முதலில் அகற்றுங்கள். பிறகு நான் செய்யும் அற்புதங்களை கண்குளிரக் காண்பீர்கள்.
– பாபா மொழி

‘‘சரி! இவ்வளவு பேசுகிறீர்களே! நீங்கள் ஏன் நம் கோயில் பூசாரியின் தலைவலியைக் குணப்படுத்தவில்லை?’’ – மகல்சாபதி கேட்டதில் குல்கர்னி வெகுண்டான்.
‘‘அதற்கு அவன் பத்தியம் இருக்கணும். வெறும் மருந்து மாத்திரம் வேலை செய்யாது!’’
‘‘சரி, தலைவலிக்கு வேறு என்ன மருந்து, அதைச் சொல்லுங்கள்!’’
‘‘மகல்சாபதி! நீ ரொம்பவும் அதிகமாகப் பேசுகிறாய். என்னை கேலி செய்கிறாயா? என் அறிவைப் பரிசோதிக்கிறாயா? சரி விடு! சாயியிடம்தானே போகிறீர்கள்? நானும் வருகிறேன். அந்த பாலயோகி, தலைவலிக்கு என்ன மருந்து கொடுக்கிறான் என்று நானும் பார்க்கிறேன்… வாருங்கள்!’’
எல்லோரும் கிளம்பி, மசூதியை அடைந்தார்கள்.

‘‘எஜமான், என் தலை வலியால் வெடித்து விடும் போலிருக்கிறது… ஏதாவது மருந்து கொடுங்களேன்!’’ – பூசாரி கேட்டான்.
சாயி அவன் பக்கம் திரும்பாமல் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

‘‘சாயீ, என்னைப் பாருங்களேன். தலைவலி உயிர் போகிறது.’’
‘‘அது போனால் என்ன? என்னிடம் ஏன் சொல்கிறாய்? நீதானே கோயிலிலிருந்து என்னை விரட்டினவன்? நான் சிறுபிள்ளையாகத் தெரிந்தேனா? கண்டேராயா எனக்கும் கடவுள் இல்லையா? இருபத்திநாலு மணிநேரமும் கோயிலில் சுவாமி அருகில் இருந்து பூஜை செய்யும் நீ, மனிதர்களிடையே பிரிவினைவாதம் செய்கிறாயா? கிட்டே வராதே… தூரப்போ…’’ என்று சாயி பெரிதாகக் கத்தினார்.

அவர் கோபத்தைக் கண்டு, குழந்தைகள் பயந்து ஓடிவிட்டன.
மகல்சாபதிக்குப் புரிந்துவிட்டது. அப்படியானால் சாயி பழைய சம்பவத்தை மறக்கவில்லை.
சாயியின் முன் வந்து, கை கூப்பி, ‘‘சாயீ… அவன் தன் தவறை உணர்ந்துவிட்டான். அவன் மேல் இரக்கம் காட்டுங்கள். அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். பூசாரீ, முன்னே வாய்யா! சாயியின் காலில் விழு…’’ என்றார் மகல்சாபதி.

‘‘ஒன்றும் வேண்டாம்…’’
இருந்தாலும், கிட்டே வரும்படி பூசாரிக்கு சமிக்ஞை செய்தார் மகல்சாபதி. பூசாரி கிட்டே நெருங்கியதும், சடாரென்று எழுந்தார் சாயி. இமைக்கும் நேரத்தில் பட்டென்று பூசாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்!
‘‘அய்யோ செத்தேன்…’’
அலறியவாறே பூசாரி தரையில் போய் விழுந்தான்.
மகல்சாபதி திடுக்கிட்டார்.
‘காளை மாட்டின் பலம் இருக்கிறது இந்தப் பைத்தியக்கார பக்கீருக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்டான் குல்கர்னி.
‘‘பார்த்தாயா… நான்தான் சொன்னேனே, இந்த மகல்சாபதி சொல்வதைக் கேட்காதே என்று!’’ என்ற குல்கர்னி, பொய்யான இரக்க முகத்துடன், ‘‘மருந்திற்கு பதிலாக அறை! தலைவலி நிற்பதற்குப் பதிலாக, தலையே வெடிக்கும்படி ஆகிவிட்டது. ராம்… ராம்! கிளம்பு என்னுடன். நான் கொடுக்கிறேன் தலைவலித் தைலம்!’’ என்றான்.
‘‘நில்லுங்கள் வைத்தியரே!’’ – எழுந்துகொண்டே பூசாரி பேசினான், ‘‘சாயீ… உங்களுக்கு நன்றி!’’
‘‘என்ன?’’ – குல்கர்னி திடுக்கிட்டுக் கேட்டான். மகல்சாபதி குழம்பினார்.

‘‘எஜமானரே! சாயி அருள் பாலித்தார். என்னை அறைந்ததில் தலைவலி நின்றது. வேதனை அகன்றது. தலையில் இருந்த சூடு தணிந்தது. இப்போது நிம்மதியாக இருக்கிறது. சாயி, என்னை மன்னியுங்கள். நீங்கள் விட்ட அறையே எனக்கு ஆசீர்வாதம். உங்களுக்கு ரொம்ப நன்றி…’’ என்றான் பூசாரி.
புயலடித்து ஓய்ந்ததுபோல் அமைதியாக உட்கார்ந்திருந்தார் சாயி. அவருடைய தேஜஸான முகம் களைகட்டியது. பூசாரி ஓடிவந்து சாயியின் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். அவருடைய காலில் ஒட்டியிருந்த மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டு, வாயிலும் போட்டுக்கொண்டான்.
குர்கர்னிக்கு இதைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவன் நினைத்தது வேறு… நடந்தது வேறு. ‘‘எல்லாம் கேவலமான செயல்களாக இருக்கிறது. இங்கிருப்பதைவிட நகர்வதே மேல்…’’ என அங்கிருந்து வேகமாகச் சென்றான். சாயி, அவனுடைய முதுகைப் பார்த்து, ‘‘மகல்சாபதி, அகங்காரத்தின் மொத்த உருவம் போகிறது பார்! மனிதத்தன்மையை அடகு வைத்தது போல் போகிறான் பார்!’’ என்றார்.

கங்காகீர்…
பெயருக்கேற்பவே மனத்திலும் கங்கை போல பவித்திரமானவர். புனாவாசி. ஞானத்திலும் பக்தி மார்க்கத்திலும் சிறந்தவர். மக்களுக்குத் தன் வாயால் நல்லதையே சொல்லிவந்தார். வாரத்திற்கு ஒருமுறை கங்காகீர் ஷீரடிக்கு வந்து போவது வழக்கம். தனக்குப் பரிச்சயமானவரான மாதவராவைக் கண்டதும், இருவரும் பேசிக்கொண்டே வந்தனர். எதிரில் சாயி, இரண்டு தோள்களிலும் மண் குடங்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துவந்தார்… செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச.
‘‘எதிரில் யார் வருகிறார்கள் பார்த்தீர்களா?’’
‘‘யார்?’’
‘‘இவர்தான் சாயி! முகத்தில் எவ்வளவு தேஜஸ்! என்ன கம்பீரம்! இவரைப் பார்த்தாலே உள்ளம் புளகாங்கிதமடைகிறது.’’
‘‘எதற்காக அவரே குடங்களைத் தூக்கி வருகிறார்?’’
‘‘அவர் நட்ட பூச்செடிகளுக்குத் தண்ணீர் விட…’’
‘‘அவருக்கு சிஷ்யர்கள் யாருமில்லையா?’’
‘‘நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், இந்த குரு வேறுபட்டவர். தானே எல்லா வேலைகளையும் செய்வார்.’’
அதற்குள் சாயி அருகில் வந்தார். கங்காகீரின் கண்களும் சாயியின் கண்களும் நேருக்குநேர் பார்த்துக்கொண்டன. சாயியை கங்காகீர் குனிந்து வணங்கினார்.
சாயி ஒரு நிமிடம் நின்றார். குடங்களைத் தரையில் வைத்தார்.

‘‘நான் கங்காகீர்… உங்களை தரிசித்ததில் வாழ்க்கை முழுமை அடைந்தது.’’
‘‘கங்காகீர்… நீ என்னுடையவன். இனி ஷீரடிக்கு வந்தால், எனக்காக வரணும்.’’
‘‘சரி சாயி’’
‘‘கங்காகீர், சந்திரனுக்குக்கூடக் களங்கம் இருக்கிறது. நீ எனக்கு சந்திரனாட்டம் இருக்கிறாய்.’’
கைகூப்பிய கங்காகீர், ‘‘சாயீ, என்னில் என்ன களங்கம் இருக்கிறது?’’ என்றார்.
‘‘எங்கோ குழப்பம் இருக்கிறது. நீ நிம்மதியாக இல்லை. பயமில்லாத, யார் மேலும் சந்தேகப்படாத மனிதன்தான் வேறொரு மனிதனை அறிந்துகொள்ள முடியும். மறுகரையை அடைய முடியும்.’’
‘‘நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். இந்த சந்தேக வியாதி, காற்றில் ஊசலாடும் விளக்கைப்போல் அங்குமிங்கும் ஆடி, நிம்மதியைக் கெடுக்கிறது.’’
சாயி வெறுமனே சிரித்தார். குடத்தில் கையை விட்டு உள்ளங்கையினால் தண்ணீரை அளாவினார்.
‘‘கங்காகீர், வாயைத் திற…’’
அவருடைய நாக்கில் தன் உள்ளங்கையினால் தண்ணீர் விட்டார்.

உடனே கங்காகீருக்கு இருந்த சந்தேக வியாதி பறந்தது. உடல் புத்துணர்ச்சி பெற்றது. சுய நினைவு வந்து பார்த்த போது, சாயி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
‘‘மாதவ், ஷீரடி உண்மையிலேயே பாக்கியம் செய்திருக்கிறது, இம்மாதிரி விலையில்லா ரத்தினங்களை அடைவதற்கு. அதனால்தான் இவர் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார். சாயி, சாதாரண மனிதர் அல்ல… அவர் ஓர் அற்புத யோகி. எல்லா பிரமாண்டத்தையும் விழுங்கின சாட்சாத் பரமேஸ்வரன். ஷீரடி போலவே, நானும் பாக்கியமடைந்தேன். இன்று அவர் எனக்கு நிரந்தர நிம்மதியைக் கொடுத்து அருள் பாலித்தார். ஆசீர்வாதமும் பெற்றேன். வாழ்க்கையின் பலனை அனுபவித்தேன்.’’
இருவரும் சாயியை வணங்கிச் சென்றார்கள்.

ஏவல் என்னும் கிராமத்தில் இருந்த ஒரு மடத்தின் எதிரிலிருந்த மைதானத்தில் ஆனந்தநாத் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் அலைந்தார். அவ்வூரில் அவர் மடத்தை ஸ்தாபித்தவர். அவரிடம் ஜனங்கள் வந்தார்கள். தனக்குத் தெரிந்ததை மட்டும் எல்லோருக்கும் உபதேசம் செய்வார். தன்னாலான உதவியும் புரிவார். என்றைக்கும் யாரையும் அவர் ஏமாற்றியதில்லை. பொய் சொன்னதில்லை. அதிகம் கற்றதினால் கர்வம் கொண்டதில்லை. என்றைக்கும் உண்மை பேசுவதில் உறுதியுடன் இருந்தார்.
அன்றைய தினம் அவருக்கு என்ன ஆயிற்றோ அவருக்கே தெரியவில்லை. அங்குமிங்கும், நிம்மதி இல்லாமல் அலைந்தார். இதை சிஷ்யன் புண்டலிக் பார்த்தான்.
‘‘குருதேவ், நிலைகொள்ளாமல் தவிக்கிறீர்களே, உங்கள் மனதை ஏதேனும் கவலை அரிக்கிறதா?’’
‘‘புண்டலிகா, நான் நிஷ்டையில் இருக்கும்போது, திவ்யமான தேகம் கொண்ட ஒருவன் தெரிந்தான்.’’
‘‘யாரது?’’
‘‘தெரியவில்லை. ஆனால் பார்க்க அவன் அழகாக இருந்தான்.’’
‘‘பிறகு…’’
‘‘என் யோகநிலை கலைந்தது. அவன் மறைந்துவிட்டான். இது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கிறது.’’
‘‘அப்படியா?’’
‘‘ஆனால் எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. அந்த அதிசய மனிதன் யார்? எங்கிருந்து வந்தான்? என் கனவில் ஏன் வந்தான்? இதன் தாத்பரியம் என்ன?’’
‘‘இதன் பலன் கொஞ்சம் கொஞ்சமாக பிறகு தெரிய வரும். இது வெறும் ஆரம்பம்தான். முன்னறிவிப்பு.’’
‘‘இருக்கலாம்… ஒரு வேளை ஷீரடிக்குப் போய் வந்தால் பிரச்னைக்கு முடிவு வரலாம் அல்லவா? இது நல்லதிற்கான அறிகுறி என நினைக்கிறேன்.’’
‘‘அப்படியே இருக்கலாம். ஷீரடிக்கு எப்பொழுது கிளம்பலாம்?’’
‘‘இன்றைக்கே, இப்பொழுதே போவோம். யாராவது நம்முடன் வருவதாகச் சொன்னால், அவர்களையும் அழைத்துப் போவோம்.’’
சரியான நேரத்தில் அவர்கள் ஷீரடியை அடைந்தார்கள். அக்கல்கோட் ஸ்வாமி ஸமர்த்தரின் பெரிய சிஷ்யர் இந்த ஆனந்தநாத். அவரை தரிசிக்க ஜனங்கள் கூடினார்கள். எல்லோரையும் ஆசீர்வதித்துவிட்டு ஆனந்தநாத் ஓய்ந்தபோது, மறுபடி இருதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

‘‘புண்டலிகா…’’
‘‘என்ன…?’’
‘‘மறுபடி நான் ஏதோ ஒரு உணர்ச்சியினால் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். அந்த அற்புதமான ஒளி பொருந்திய உருவம் என் கண்ணில் பட்டது. ஆனால் உனக்கு அவர் தெரியமாட்டார். காரணம், நான் அவரால் ஈர்க்கப்பட்டேன்…’’
‘‘குருதேவ்…’’
‘‘என்ன?’’
‘‘அந்த திவ்ய சொரூபம் என் கண்ணிலும் தென்பட்டது.’’
‘‘உண்மையாகவா?’’
‘‘ஆமாம்.’’
‘‘இது நடக்காது…’’
‘‘எனக்கும் தெரிகிறது குருஜி! எதிரில் பாருங்கள்… அந்த அற்புத மனிதர் வந்துகொண்டிருக்கிறார். ஆஹா.. ஹா… என்ன பிரமிக்கத்தக்க தோற்றம்? எவ்வளவு வசீகரமான முகம்… தீர்க்கமான கண்கள். மனிதர்கள் கூட இவ்வளவு அழகாக இருக்க முடியுமா?’’ – புண்டலிக் தன்னை மறந்து பேசினான்.
‘‘யாராக இருக்கும் இந்த மனுஷன்?’’
‘‘சாயி… சாயி… என்று சொல்கிறார்கள்’’ – அருகில் நின்றிருந்த ஷீரடிக்காரன் சொன்னான்.

‘‘சாயி..?’’
‘‘ஆமாம்’’
‘‘நன்றி புண்டலிகா… என் கனவில் வந்தவரும் இவரே! நான் முதன்முதலில் இப்பொழுதுதான் பார்க்கிறேன். எப்படி நான் தியானத்தில் இருந்தபொழுது, என் மனத்தில் தோன்றினார்? நான் ஷீரடிக்கு நேரே வந்து அவரை தரிசிக்க வேண்டும் என்பதற்காக வந்தாரா? எப்படி இருப்பினும், இவரைக் கண்டு என் மனம் நிம்மதியாயிற்று. என் பாக்கியமே பாக்கியம்…’’
அதற்குள் சாயி அங்கு வந்தார்.
ஆனந்தநாத் உடனே, சாயியின் காலைத்தொட்டு வணங்கினார்.

‘‘எழுந்திரு. ரொம்ப தொலைவிலிருந்து வந்திருக்கிறாய். நான் கூப்பிட்டதும், ஓடி வந்தாயா! சந்தோஷம். அக்கல்கோட் மகாராஜாவின் பெயரைக் காப்பாற்றினாய். நான் இப்பொழுது பிச்சைக்குக் கிளம்பிவிட்டேன். பிறகு மசூதிக்கு வா! சாவகாசமாகப் பேசலாம்’’ என்று சொல்லிவிட்டு, சாயி அகன்றார். சூரியனின் ஒளிக்கிரணம் அருகில் செல்வதுபோல் உணர்ந்தார்கள் குருவும் சிஷ்யனும்.
சாயியின் முதுகைப் பார்த்துக் கொண்டே ஆனந்தநாத், ஷீரடிவாசிகளிடம் சொன்னார். ‘‘இவர் சாதாரண மனிதர் அல்ல, அற்புதங்களை நிகழ்த்தும் யோகி. மனிதர்களை உய்விக்க வந்த ஞானி. இவரால் ஷீரடியும் மற்றவர்களும் பெருமை அடைவார்கள். உலகின் நன்மைக்காக மக்களின் வாழ்வாதாரங்களை உன்னத நிலைக்கு உயர்த்தப் பாடுபடுவார். நான் இன்று சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! பிறகு ஒருநாள் அதை நீங்களே உணர்வீர்கள்!’’- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply