எதிர்பாராத திருப்பங்கள் தரும் திருவாசி ஈசன்… கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

0

இந்த ஆலயத்திற்கு சோழன், பாண்டியன், விஜயநகர மன்னன், ஹொய்சால மன்னன் என பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்துள்ளனர். முதலாம் ராஜராஜன், ராஜராஜ விடங்கன் எனும் சிவலிங்க மூர்த்தம் நிறுவியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இத்தலத்து இறைவன் சமீவனநாதன் என்றும், சமீவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படு கிறார். மேலும் பிரம்ம தேவன் வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர், மாற்றறிவரதர், மாற்றுரைவரதீஸ்வரர் போன்ற பெயர்களிலும் வழங்கப்படுகிறார்.

உமாதேவி ஒரு முறை சிவபெருமானிடம், “28 சிவாகமங்களில் விருப்பமான செயல் ஒன்றை அருள வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு இறைவன், “நான் விரும்புவது பூசனையே. அதுவும் காவிரி வடகரையில், தேவர்கள், முனிவர்கள் தவம் செய்யும் திருப்பாச்சிலாச்சிராமம் தலமே என் விருப்பம்” என்றார்.

அதைக் கேட்டதும், பார்வதி தேவி யாரும் அறியாத வகையில், அன்னப் பறவை வடிவம் எடுத்து இத்தலம் வந்து இறைவனை வழிபட்டார். அன்னையின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், “நீ வழிபட்ட இந்த தலத்தில் உள்ள தீர்த் தத்தில் நீராடி வணங்குவோரின் பிணிகள் நீங்கும். இந்த தீர்த்தமானது ‘அன்னமாம் பொய்கை’ என்று வழங்கப்படும்” என்று அருளினார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.

சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானிடம் பொன் வேண்டி பதிகம் பாடினார். இதையடுத்து அவருக்கு இறைவன் பொற்கிழி வழங்கினார். ஆனால் அந்த பொன் அனைத்தும் மாற்று குறைவாக இருப்பதாக, இறைவனிடம் சுந்தரர் உரைத்துக் காட்டினார். இதனை அறிந்த இறைவன் அதை மாற்றி வழங்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘மாற்றறிவரதர், மாற்றுரைவரதீஸ்வரர்’ என்று பெயர் வந்தது.

ஆலய அமைப்பு

ஐந்து நிலை ராஜகோபுரம், எதிரே நான்கு கால் கல் மண்டபம் என எழிலாக காட்சி தருகிறது, இந்த ஆலயம். ராஜகோபுரத்தைக் கடந்ததும், தென்பகுதியில் பாலாம்பிகை அம்மன் சன்னிதி இருக்கிறது. அம்மன் சன்னிதிக்கு எதிரே அன்னமாம் பொய்கை தீர்த்தம் மற்றும் வன்னி மரம் உள்ளது. முதல் கோபுரம் மற்றும் இரண்டாம் கோபுரத்தின் இடையே ‘ஆவுடையாப்பிள்ளை மண்டபம்’ எனும் பெயர் கொண்ட மகாமண்டபம் அமைந்துள்ளது. இதில் கொடிமரம், பலிபீடம், நந்தி சிலை உள்ளன.

முதல் கோபுர நுழைவு வாசலின் தெற்கே விநாயகர், வடக்கே அபூர்வ நடராஜர் சன்னிதிகள் உள்ளன. அதற்கு நேராக பிரமாண்ட கலைக்கோவிலாக சுவாமியின் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் மாற்றறிவரதர் எழிலாக காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் திருமேனிகள் உள்ளன.

சகஸ்ர மண்டபத்தில், 1008 லிங்கம் அமைந்துள்ளது. தென் மண்டபத்தில் அறுபத்து மூவர், கோடி விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், திருமால், கஜலட்சுமி, சந்திரசேகரர் மண்டபம் என ஒருங்கே அமைந்துள்ளன. இங்கு திருஞானசம்பந்தர் வலக்கை சுட்டுவிரல் நீட்டியபடி, இடக்கையில் கிண்ணம் தாங்கி நிற்கிறார். சுந்தரர் இரண்டு கைகளாலும் தாளங்களைக் கொண்டு நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். இவை இரண்டுமே அபூர்வமானவை.

ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமியை முடிவாகக் கொண்டு, புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி, 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாதந்தோறும் சிவாலய விழாக்கள் எந்த வித குறைகளும் இன்றி நடத்தப்படுகின்றன. வன்னி மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. தலத் தீர்த்தமாக அன்னமாம் பொய்கை விளங்குகிறது. இதற்கு பிரம்ம தீர்த்தம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் தான் சுந்தரர் தங்கத்தைத் தேய்த்து பார்த்து சோதனை செய்தார் என்று சொல்லப் படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமி தரி சனம் செய்யலாம்.

சமீவனநாதர் ஆலயம் அமைந்த திருவாசியைச் சுற்றிலும், அடைக்கலம் காத்தான், தேரடி கருப்பு, மதுரைவீரன், ஆச்சிராயி, விளக்கவந்தாள் என பல கோவில்கள் காணப்படுகின்றன.

அமைவிடம்

திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் வட்டத்தில் திருவாசி அமைந்துள்ளது. இதன் பழங்காலப் பெயர் ‘திருப்பாச்சிலாச்சிராமம்’ என்பதாகும். திருச்சியில் இருந்து முக்கிய சாலை வழியாக சேலம் செல்லும் வழித்தடத்தில் சமயபுரம் டோல்கேட் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருவாசி இருக்கிறது. – Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply