சாய்பாபா அணிந்த உடைகளின் மகிமை..!

0

உடை கிழிந்து போனால், அதை பாபா தூர எறிந்து விட மாட்டார். யாரிடமும் கொடுக்கவும் மாட்டார். துவாரகமாயில் எரியும் அக்னி குண்டத்தில் தன் உடையைப் போட்டு எரித்து சாம்பலாக்கி விடுவார். சில உடைகளை பாபா கந்தலாகும் வரை போடுவார். அந்த உடை கிழிந்தாலும் கூட அதை தைத்து போட்டுக் கொள்வார். சில உடைகளை அணிந்த சில தினங்களில் புதுசாக இருந்தாலும் கழற்றி தீயில் போட்டு எரித்து விடுவார். சாய்பாபா எப்போதும் தன் உடல் முழுவதையும் மூடும் வகையில் நீண்ட அங்கி போன்ற உடை அணிவதையே வழக்கத்தில் வைத்திருந்தார். முதலில் அவர் பச்சை, சிவப்பு நிறங்களில் அங்கி உடையை அணிந்தார். ஆனால் பிற்காலத்தில் அவர் முழுக்க, முழுக்க வெள்ளை நிற உடைகளையே விரும்பி அணிந்தார். ஆடைகள் உடுத்தும் வி‌ஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் இன்று வரை யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

பாபாவின் உடைகள் கொஞ்சம் கிழிந்து இருப்பது தெரிந்தால் தத்யா பட்டீல் என்ற பக்தர், அந்த கிழிசலில் விரலை விட்டு இழுத்து மேலும் கிழித்து விட்டு விடுவார். அப்படியானால் தான் பாபா புதிய உடை உடுத்துவார் என்பதற்காக அவர் அப்படி செய்வார். சிலரை பார்த்ததும் அவர்களை ஆன்மீகத்தில் மேல் நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் பாபாவுக்கு உதிப்பதுண்டு. அத்தகையவர்களுக்கு பாபா தன் கிழிந்த அங்கியை கழற்றி கொடுத்து விடுவார். ஒரு தடவை பாபா தன் ஆத்மார்த்த பக்தரான மகல்சாபதிக்கு தனது பழைய கிழிந்த ஆடைகளில் ஒன்றை கொடுத்தார். இதன் காரணமாக மகல்சாபதி இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ஒரு சன்னியாசிப் போலதான் வாழ்ந்து வந்தார். பாபாவுக்கு நீண்ட நாட்களாக சேவை செய்து வந்த பல பக்தர்கள், அவரிடம் பழைய உடையை தாருங்கள் என்று கெஞ்சி கேட்பது உண்டு. ஆனால் பாபா அவ்வளவு எளிதாக தன் கிழிந்த உடைகளை கொடுக்க மாட்டார் எரித்து விடுவார்.

பாபா, சமாதியான போது அவர் வைத்திருந்த பழைய பை ஒன்றை அவரது பக்தர்கள் எடுத்துப் பார்த்தனர். அந்த பையை தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாரையும் தொட பாபா அனுமதித்ததே இல்லை. எனவே அந்த பையில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லாரிடமும் ஆவல் ஏற்பட்டது. அந்த பைக்குள் பச்சை நிற நீண்ட அங்கி உடையும், பச்சை நிற துணி தொப்பியும் இருந்தது. காசிராம் என்ற பக்தர் அந்த உடையை பாபாவுக்காக தைத்து கொடுத்திருந்தார். பாபா உடல் சமாதிக்குள் வைக்கப்பட்ட போது, அவர் பயன்படுத்திய சில பொருட்களும், அந்த பச்சை நிற உடையுடன் கூடிய பையும் வைக்கப்பட்டது. பாபா அணிந்த வெள்ளை நிறை உடைகள் சில, துவாரகமாயில் இருந்தன. அவை அனைத்தும் இன்றும் சீரடி தலத்தில் உள்ள சாய்பாபா மியூசியம் அறையில் வைக்கப்பட்டுள்ளன. சீரடி செல்பவர்கள் மியூசியத்துக்கு சென்று பாபா மேனியில் பட்ட அந்த வஸ்திரங்களை கண் குளிரக் கண்டு வணங்கி வரலாம். அந்த வணக்கமே நிச்சயம் கோடி புண்ணியம் தரும்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply