குறைவிலா வாழ்வருளும் குருபரன்

0

குழந்தைக்குமரன் கயிலையின் வாயிலில் தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால், உள்ளுக்குள் பெரியோனாய் கனிந்திருந்தது. உலகாளும் சிவபிரானை காண்பதற்கு வருவோர் போவோரெல்லாம் முருகக் குழந்தையை கொஞ்சிச் சென்றனர். ஞானத்தை தமக்குள் தேக்கிச் சென்றனர். செல்வக்குமரன் விளையாடியத் திரிந்தது வினை தீர்க்கும் குருபரனாகும் காலமும் நெருங்கி வந்தது. நான்மறைகளை முகமாகக் கொண்ட பிரம்மாவை வைத்து முருகன் விளையாடத் தொடங்கினான். பிரம்மாவோ பூரண பிரம்ம சொரூபத்தை வெறும் பாலகன் எனக் கண்டார். பிரபஞ்சத்தை படைப்பதாலேயே ஈசனுக்கு நிகர் நானே என மயக்கம் கொண்டார். சுப்ரமணியத்தின் அருகே வரும்போது ஞானாக்னி மெல்ல உரசியது. மாயையில் உழன்றிருந்த பிரம்மாவின் மனம் அதை அறிய உணராது, குமரனை தாண்டிச் சென்றது. ஞானசொரூபனின் திருப்பார்வை இப்போது பிரம்மாவின் மீது கவிழ்ந்தது. சிறிது காலம் கழித்து கயிலை வந்த பிரம்மாவை பார்த்துச் சிரித்தது.

‘‘நீங்கள் யாரய்யா. நீர் எந்த கலைகளிலெல்லாம் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்.’’ குழந்தை மழலை கலையாது கேட்டது. பிரம்மா முகத்தில் கர்வக்களை அரும்பியது. எதை விட, எதைச் சொல்ல இந்தப் பாலகனிடம். சரி சொல்லித்தான் பார்ப்போமே. இல்லையெனில் புரியவைக்க முயற்சிப்போம் என்று தலைகீழ் கணக்குப் போட்டது. முருகப் பெருமான் அந்த கணமே இவரை நேராக்க வேண்டுமென துணிந்தார். பிரம்மாவும் சொல்லத் தொடங்கினார். ‘‘நானே பிரம்மா. நான்மறைகளைத் தாங்கியவன். பிரபஞ்ச சிருஷ்டிக்கு அதிபதி. தேவர்கள் முதல் சிறு துரும்பு வரை என் படைப்புகளே. எனக்கு நிகர் இங்கு எவர். சகல வித்தைகளுக்கும் தலைவன். தாங்கள் தந்தை கயிலைப் பிரானை தரிசிக்கவே இங்கு வந்தோம்.’’ என்றார். குமரன் உற்றுப்பார்த்தபடி இருந்தார். ஏனோ ஒருபயம் அவரை பிரம்மாவை துரத்தியபடி இருந்தது.

‘‘அது சரி ஐயா. வேதத்தின் உட்பொருளை அறிந்தவர்தானே நீங்கள்’’‘‘அதிலென்ன சந்தேகம்’’‘‘உங்களைப் போன்றோர் துணை கொண்டு அர்த்தத்தை கேட்பது எவ்வளவு அலாதியானது. நீங்கள் சொல்லி நாங்கள் கேட்கவேண்டுமென்பது வெகுநாள் ஆசை’’ என்று தன் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு பேசினார். பிரம்மாவை வீழ்த்துவதில் சிறிதளவும் அவர்களுக்குச் சிரமமில்லை. ஆனால், பிரம்மாவோ தான் சிம்மத்தின் வாயில் தலை கொடுத்திருக்கிறோம் என்பதை அறியாதிருந்தார்.‘‘என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்’’ முகத்தில் அலட்சியம் பரவிக்கிடந்தது.‘‘முதலிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்தைச்
சொல்லுங்கள். ’’பிரம்மா கண்களை மூடிக்கொண்டார். வேதத்திரட்சி அவரிடமிருந்து வைகரி வாக்குகளாக வெளிவந்தன. ‘‘நிறுத்துங்கள்…நிறுத்துங்கள்… இவ்வளவு வேகமாகச் சொன்னால் எங்களுக்கு எப்படி புரியும்? முதல் வார்த்தை என்ன சொன்னீர்கள்.‘‘பிரணவ மந்திரத்தை சொன்னேன். ஓம் என்று தொடங்கினேன்.’’‘‘சரி, அதன் பொருளென்ன.’’

‘‘நான்தான் அதன் பொருளாக விளங்குகிறேன்’’ விசித்திரமான பதிலைக் கூறினார் பிரம்மா. சொல்கடந்த பேருண்மையை இத்தனை பொறுப்பற்ற பதிலாக உரைத்ததை கண்டு பாலமுருகன் கோபமுற்றார். ‘‘அப்போது நீங்கள் யார். உங்களை நீங்களே எப்படி பொருள்படுத்திக் கூறுவீர்கள்.’’‘‘நான் பிரம்மா. பிரணவத்தின் சொரூபமாக விளங்குகிறேன்’’சுப்ரமணியர் மிகுந்த கோபம் கொண்டார்.‘‘ஏன் முரண்படுகிறீர்கள். நீங்கள் பிரணவ மந்திரமாக விளங்குகிறீர்கள் என்றால் அதன் பொருளைச் சொல்லுங்கள். ஏன் பிரம்மா என்று சொல்கிறீர்கள். அப்போது இரண்டுமாக இருக்கிறீர்களா.’’‘‘ஆமாம்..ஆமாம்..’’ அவசர அவசரமாக தலையசைத்தார். இப்போது பிரம்மா வசமாக சிக்கிக் கொண்டார். குற்றவாளியைப்போல எதையாவதுப் பேசி வெளியேறலாம் என்று நினைத்தார்.
ஞானத்தின் பாதம் பணிந்து உண்மைப் பொருளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற விவேகம் வரவேயில்லை. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply