
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அழகிய கிராமம் குரங்கணி. இத்தலத்தில்தான் முத்துமாலையம்மன் அருளாட்சி செய்கிறாள். ராவணனுடன் போர் புரிய வானரச் சேனைகள் அணிவகுத்து நின்ற இடமாதலால், இத்தலம் குரங்கணி என்றானது என்கிறார்கள். ராவணன் தன்னைக் கவர்ந்து சென்றபோது, ராமபிரானுக்கு அடையாளம் காட்ட, தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து வீசினாள், சீதை. அவற்றில் ஒன்றான முத்துமாலை தாமிரபரணிக் கரையில் விழுந்து ஜோதிப் பிழம்பாய் காட்சியளித்தது. அந்த ஒளி, பார்ப்பவரின் கண்களைக் கூச வைத்தது. அப்போது அங்கு வந்த பனையடியான் என்பவர் முத்து மாலையைக் கண்டார். ஒரு மண் தாழியை எடுத்து மாலையை மூடினார். அந்த மாலை, அம்மன் ரூபத்தில் அருள் சுரந்தாள். ஒருமுறை தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது தாழியோடு இந்த முத்துமாலையும் மூழ்கியது. அப்போது இப்பகுதியில் வாழ்ந்த நான்கு சகோதரர்களின் கனவில் அம்மன் தோன்றினாள்.
‘‘எனக்கு இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டுங்கள். வேண்டும் வரங்களை அருள்வேன்’’ என்றாள். அதன்படி இந்த சகோதரர்கள் தாழி இருந்த இடத்திற்கு வந்து பார்த்து, பிறகு அம்மனுக்கு கோயில் கட்டினர். அதற்குப் பின் அம்மனின் அருட்கொடை தொடங்கியது. கோயில் முகப்புத் தோற்றம் சிறியதுதான். ஆற்றங்கரையை நோக்கியும் ஒரு வாசல் உண்டு. முன்புறம் வழியாக உள்ளே வந்தால் கல் மண்டபத்தை காணலாம். அதைக் கடந்து கோயிலுள் நுழையலாம். அந்த இடத்தில் நின்று பார்த்தால் கருணை வடிவான குரங்கணி தாயார் நமது கண்ணுக்கு தெரிவாள். அம்மனுக்கு இடது புறம் நாராயணர், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். முத்துமாலை அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசுவாமி சந்நதி உள்ளது. ஒரு காலத்தில் இந்தக் கோயிலின் பூசாரி மற்றும் இவ்வூரை சேர்ந்த நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றி, ‘மலையாள தேசத்தில் என் காவல் வீரன் பெரியசாமி இருக்கிறான்.

அவன் நாளை தாமிரபரணி வெள்ளத்தில் சிலை வடிவில் நமது கோயில் அருகே மிதந்து வருவான். அவனை மேளதாளத்தோடு வரவேற்று எனது கோட்டைக்குள் வடக்கு நோக்கி வையுங்கள்’ என்று உத்தரவிட்டாள். அதேபோல வந்த பெரியசாமியை எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்தனர். முப்பிடாதி அம்மன். சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி, பேச்சியம்மன், பிரம்மசக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் பைரவர், வீரபத்திரர் ஆகியோர் தனித்தனி சந்நதியில் வீற்றிருக்கின்றனர். விநாயகர்-காசிநாதர்-விசாலாட்சிக்கு ஒரு சந்நதி. நவகிரக சந்நதி, துர்க்கை அம்மன், பனையடியான் பீடம் மற்றும் பரிவார தேவதைகளும் உள்ளனர். குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலுக்கு தென்புறம் ‘கோயில் வீடு’ என்று ஒரு கோயில் உள்ளது. இவ்விடத்தில் பெரிய ஆலமரம் இருந்துள்ளது. இதன் நிழலில் அமர்ந்துதான் ராமர், லட்சுமணர், அனுமன், சுக்ரீவன் ஆகியோர் போர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இக்கோயிலில் ஆனி, ஆடி மாதங்களில் பெருந்திருவிழா நடக்கும். தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு மறுநாள் நிகழும் தீர்த்த வாரியன்று மதியம் சிறப்பு பூஜை நடக்கும். அதற்குப் பின்னர் கோயில் அர்ச்சகர்கள் நால்வர் மட்டும் பங்கேற்கும் விழுந்து கும்பிடுதல் வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்கள் தெய்வ சந்நதிகளுக்கு அப்பால் மௌனமாக நிற்பார்கள். அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிடும். அன்று அம்மன் கோட்டைக்குள் பக்தர்கள், பொங்கலிட்டு, அன்னைக்குப் படைத்த வாழைக் குலைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள். நெல்லை – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ஏரல் ஊரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தென்திருப்பேரையிலிருந்தும், ஏரலில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு. – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
