நினைத்தது நடக்க தை வெள்ளியில் அம்மனுக்கு செய்ய வேண்டியவை..!

0

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அனைவருக்கும் பொருந்தும். இயற்கையையும் கடவுளையும் வணங்கும் இம்மாதத்தில் வழிபாடுகள் சிறப்பான பலன்தரும். வாரந்தோறும் வரும் செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்தது. அன்றைய தினம் நிச்சயம் வீட்டில் வழிபாடு நடக்கும். அதிலும் ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமையும், தை மாதம் வரும் வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கும் அம்மனிடம் வேண்டி வரம் பெறும் பக்தர்களுக்கும் உகந்த நாள்.

தை மாத வெள்ளியில் ஸப்தமி தினத்தில் அல்லது அமாவாசைக்கு அடுத்து வரும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்கி, தொடர்ந்து 16 வாரங்கள் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் நினைத்தது நினைத்தப்படி நடக்கும் என்பது ஐதிகம். தவிர்க்க முடியாத காரணத்தால் வெள்ளிக்கிழமை விரதம் தடைப்பட்டாலும் அடுத்த வாரம் விரதமிருந்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். இன்றைய தினங்களில் மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தை மாத வெள்ளியில் அம்பிகைக்கு சந்தனகாப்பு சாத்தினால் அம்பிகை மனம் குளிர்ந்து நமது குடும்பத்தைத் தழைக்கச் செய்வாள்.

தை மாத வெள்ளிக்கிழமை நடக்காத விஷயங்களையும், அம்பிகை நடத்திக் காட்டும் நந்நாள் என்று சொல்லலாம்.முக்கண்ணியைத் தொழுவோருக்கு தீங்கில்லை என்கிறார் அபிராமபட்டர். சக்தி வழிபாடு என்பது நமது மண்ணிலும் மனதிலும் வேரூன்றிவிட்டது. சக்தி என்பவள் ஆதிசக்தியாக,பராசக்தியாக, மகா சக்தியாக போற்றப்படுபவள். சக்தியில்லையேல் சிவமில்லை.. சிவமில்லையேல் சக்தியில்லை என்று ஆணையும் பெண்ணையும் சரிபாதியாக நிறுத்தினாள் அம்பிகை.

காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, மகாகாளி, ஸ்ரீ துர்க்கையம்மன்,சமயபுரம் மாரியம்மன், பட்டுக்கோட்டை பன்னாரி என்று எப்படி திரும்பினாலும் அம்பிகை வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பலிக்கிறாள். மாரியம்மன் இல்லாத இடமுமில்லை. அவளிடம் வேண்டிய பக்தர்கள் வெறுங்கையுடன் வீடு திரும்பியதில்லை என்று சொல்வர். மஞ்சள் ஆடையும் எலுமிச்சை மாலையும் மாரியம்மனுக்கு பிடித்தமானவை. ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டாலும் அன்றைய தினம் கண்டிப்பாக வீட்டிலும் அம்பிகை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் நீராடி பால் பழம் மட்டும் உண்ணவேண்டும். அம்பிகையின் வரலாறு படித்து குழந்தைகளுக்கும் படித்து காட்ட வேண்டும். மஹிஷாசுர மர்த்தினி, செளந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற ஸ்லோகங்களைப் படிக்க வேண்டும், தை வெள்ளிக்கிழமையில் அம்பிகைக்கு மிகவும் பிடித்தமான பாயசம், சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.

தை வெள்ளிக்கிழமையில் ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். அந்தக் குத்து விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளியை அம்பிகையாக எண்ணி கன்னிப் பெண்களும், சுமங்கலிப் பெண்களும் வழிபடுவார்கள். சிலர் தங்கள் வீடுகளில் சுமங்கலியாகவோ, அல்லது பெண் குழந்தைகளாகவோ இறந்துவிட்டால் அவர்களைப் பூவாடைக்காரி என்று பெயரிட்டு வழிபடுவார்கள். அவர்களுக்கு புதிய ஆடைகளை படைத்து உடுத்துவர். இவர்களை வழிபட்டால் வீட்டு பெண்களை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள் என்பது அவர்களது நம்பிக்கை.
விசேஷமான தைவெள்ளியான இன்று அம்பிகையை வழிபட்டு மகாசக்தியான அவளிடமிருந்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெறுவோம். நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களையும் நடத்தி முடிப்பவள் அன்னை. அதனால் நமது சங்கடங்கள் அனைத்தும் கரைய அம்பிகையை வழிபடுவோம். – Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply