
நம்முடைய வீட்டு வாசற்படியில் எலுமிச்சையும் மிளகாயும் கோர்த்து திருஷ்டிக்காகக் கட்டியிருப்பார்கள். சில பெரிய வீடுகளில் பூசணிக்காயில் திருஷ்டி பொம்மை படம் வரைந்து தொங்கவிடப்பட்டிருக்கும். ஆனால் இதுமட்டும் இல்லாமல் நம்முடைய கிராமப் புறங்களில் வீட்டு வாசலில் கழுகுப் போன்ற உருவம் கொண்ட ஒரு காய்ந்த கிழங்கு ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
அந்த கிழங்கின் பெயர் தான் ஆகாய கருடன் கிழங்கு. காட்டுப் பகுதிகளில் கிடைக்கும் இந்த கிழங்கு பற்றிய பல அபூா்வத் தகவல்கள் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த கிழங்குக்கு கொல்லங்கோவை, பேய்சீண்டல் போன்ற பெயர்கள் இருந்தாலும் கூட, ஆகாய கருடன் கிழங்கு என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும். காட்டுப் பகுதிகளில் மட்டுமே வளரும் இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இந்த கொடியை வேருடன் வெட்டினால் மண்ணுக்கு அடியில் இந்த கிழங்கு கிடைக்கும்.
மண்ணுக்கு அடியில் இருக்கும் இந்த கிழங்கை தோண்டி எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவது வழக்கமாக இருக்கிறது. நம்முடைய காலத்தில் நிறைய பேர் கற்றாழையை வீட்டுமுன் தொங்கவிட்டிருப்பார்கள். அதேபோல அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த ஆகாய கருடன் கிழங்கைத் தான் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்.

கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் போது, அது கருடன் வடிவத்தில் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. அதோடு வானத்தில் இருக்கும் கழுகு நிலத்தில் இருக்கின்ற பாம்பினை வேட்டையாடுவதைப் போன்று, இந்த கிழங்கு பாம்புகளை விரட்டுகின்ற சக்தி கொண்டது. அதற்குக் காரணம் இந்த கிழங்கின் வாசம் தான். இந்த வாசத்தால் எந்த விஷப்பூச்சிகளும் நம்முடைய வீட்டுக்குள் வரவே வராது
மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்பட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான தொற்றுநோய்களும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. விஷப் பூச்சிகளை வரட்டுவது போலவே வீட்டுக்கு ஏற்படுகின்ற திருஷ்டி, தோஷங்கள், பில்லி சூன்யங்களை நீங்குவதோடு தீய சக்திகளையும் அண்ட விடாமல் தனக்குள் கிரகித்துக் கொள்கின்ற ஆற்றல் இந்த கிழங்குக்கு உண்டு.
கோவில் கோபுர கலசங்கள் பிரபஞ்சத்தில் உள்ள நேர்மறை சக்திகளையும் ஈர்த்து கோவில் கருவறைக்கு அனுப்புவது போல, இந்த ஆகாய கருடன் கிழங்கும் நேர்மறை சக்திகளை ஈர்த்து, வீட்டுக்குள் அனுப்புகிறது.
அந்த காலத்தில் காடுகளில் விளையும் இந்த கிழங்குகளைக் கொண்டு வந்து, சந்தைகளில் விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கால மாற்றத்தால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதன் தேவையும் குறைந்துவிட்டது.- Source: webdunia
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
