
ஷிர்டியில் ஸ்ரீ சாயிபாபா சரீரத்துடன் இருந்த காலம் முதல் அங்கு ஸ்ரீ ராமநவமிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு கொண்டாடப்பட்டுவருகிறது. பாபா ஸ்ரீ ராமநவமிக்கு முக்கியத்துவம் தந்தது போல விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்திற்கும் முக்கியத்துவம் அளித்துவந்தார்.
ஒருமுறை பாபாவுக்கு நெஞ்சுவலி வந்த போது அவர் விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தைத் தம் மார்போடு அணைத்துக்கொண்டதோடு அது பற்றி அவரது அடியவரான ஷாமா என்கிற மாதவராவ் தேஷ் பாண்டேயிடம் , ‘விஷ்ணு சகஸ்ரநாமம் என் உயிரையும் விட மேலானது’ என்று சொல்லி அதைப் பாராயணம் செய்ய வலியுறுத்தியிருக்கிறார். அத்தகைய விஷ்ணு பக்தியின் அடையாளமாகவே பாபா ஸ்ரீ ராமநவமி கொண்டாடினார்.
ஷிர்டிக்கு அருகே இருக்கும் கோபர்கான் என்கிற ஊரில் கோபால்ராவ் குண்ட் என்கிற போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் நீண்ட வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துவந்தார். அவருக்கு சாயிபாபாவின் நல்லருளால் ஆண் குழந்தை பிறந்தது. கோபால்ராவ் குண்ட் அந்த மகிழ்ச்சியை ஒரு திருவிழா போல கொண்டாட ஆசைப்பட்டார்.

அக்காலகட்டத்தில் அதாவது, 1897 ஆம் ஆண்டில் உருஸ் என்கிற சந்தனத் திருவிழா கொண்டாடப்பட்டுவந்தது.கோபால் ராவ், மற்ற பாபா அடியவர்களான தாத்யா பாட்டீல், தாதா கோதே பாட்டீல், மாதவ்ராவ் தேஷ்பாண்டே போன்றவர்களிடம், தனது எண்ணத்தைச் சொன்னார். அவர்களும் அந்த யோசனைக்கு உடன்பட்டு அதற்காக சாயிபாபாவிடம் முன் அனுமதியையும் ஆசியையும் பெற்றனர்.
விழாவைக் கொண்டாடுவதற்கு கலெக்டரிடம் அனுமதி பெற முறைப்படி விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால் கிராம குல்கர்னியால் (அதிகாரி) முதலில் திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ,கடைசியாக உருஸ் என்ற பண்டிகை நாளின்போதே திருவிழா நடத்த அனுமதி கிடைத்தது.
ஷிர்டியில் தண்ணீர் பஞ்சம்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷிர்டியில் அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது. அங்கிருந்த இரண்டு கிணறுகளில் ஒரு கிணற்றில் நீர் வற்றிவிட்டது. மற்றொன்றில் உப்புத் தண்ணீர்.

ஆனால் பாபா தம் மகிமையால் அக்கிணற்றில் பூக்களைத் தூவி உப்பு நீரை நல்ல நீராக மாற்றி அற்புதம் செய்ததாக பக்தர்கள் கூறுகிறார்கள். ஷிர்டி கிராமமே திருவிழாக் கோலம் பூண்டது.
திருவிழாவிற்காகத் தயாரிக்கப்பட்ட இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு துவாரகாமாயி என்று சாயிபாபாவினால் அழைக்கப்பட்ட சாவடி மசூதியின் இரண்டு மூலைகளிலும் ஊன்றப்பட்டன.
திருவிழாவில் மற்றொரு அம்சமாக இஸ்லாமிய சந்தன ஊர்வலமும் துவங்கப்பட்டது. முகமதிய ஞானியரைக் கௌரவிக்கும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் ‘தலி’ என்னும் தட்டுக்களில் போடப்பட்டு பேண்டு வாத்திய இசையுடன் எடுத்துச் செல்லப்பட்டன. மசூதிக்குத் திரும்பிய பின்னர் சுவற்றிலும் அவைகள் பூசப்பட்டன. தட்டுகளில் மீதம் இருந்தவை ‘‘நிம்பார் ’’ என்னும் குழிகளில் கொட்டப்பட்டன.
ஒரே நாளில் முகமதியர்களின் சந்தன ஊர்வலமும் இந்துக்களின் கொடி ஊர்வலமும் அருகருகில் சென்றன. இத்திருவிழாவில் சாயிபாபாவுக்கு மிகவும் பிடித்தமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

புனிதமான பிரியமான நாள்
1913-ம் ஆண்டிலிருந்து ஸ்ரீ ராம நவமி நிகழ்ச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன. ஸ்ரீ ராம நவமியின்போது ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து நாம ஸப்தாகம் நடைபெற்றது. ஷிர்டியில் நடைபெறும் ஸ்ரீ ராமநவமியைக் கேள்விப்பட்டுப் பல ஊர்களில் இருந்தும் ஆண்டுதோறும் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கானது.
இருந்தாலும் ஆண்டுதோறும் ஸ்ரீ ராமநவமிக்கு பஜனை செய்ய பாகவதர்களை அழைப்பதில் சிக்கல்கள் உண்டாகின. 1914-ம் ஆண்டு முதல் பாபாவின் அடியவரான தாஸ்கணு மகராஜ் பஜனை செய்யும் பொறுப்பைத் தானே நிரந்தரமாக ஏற்றுக் கொண்டு அவர் காலம் வரையிலும் அப்பணியை மிகச் சிறப்பாகச் செய்து வந்தார்.
ஷிர்டியில் ஸ்ரீ ராமநவமி உற்சவத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாட ஆரம்பித்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் கூடுதல் சிறப்புடன் பக்தி சிரத்தையாக நடந்துவருகிறது. நாளடைவில் பெரும்பாலான சாயிபாபா ஆலயங்களிலும் ஸ்ரீ ராமநவமி ஆண்டுதோறும் முக்கிய தினமாக வழிபடப்பட்டுவருகிறது. இன்று வரையிலும் ஷிர்டியில் ஸ்ரீ ராமநவமி கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிகின்றனர்.
உருஸ் என்கிற முஸ்லிம் சந்தனத் திருவிழா போலவே ராம நவமியையும் சாயிபாபா கொண்டாடினார். – Source: thehindu
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
