
மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டம் 150 ஆண்டுகளுக்கு முன்பு நிஜாம் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அந்த மாவட்டத்தில் தூப்கேதா எனும் சிறு கிராமம் ஒன்று இருந்தது. (சாய்சத்சரிதத்தில் இந்த கிராமத்தின் பெயர் தூப்காவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்த் பாய் பாடீல்- இஸ்லாமியரான இவர் மிகப்பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார். தூப்கேதா கிராமத்தின் நிர்வாக அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வந்தார். எனவே அரசாங்க வேலை நிமித்தமாக அவர் அடிக்கடி அவுரங்காபாத் சென்று வருவார்.
அந்த காலக்கட்டத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. பணக்காரரான சாந்த் பாய் பாடீல் பல வகையான குதிரைகளை வைத்திருந்தார். அந்த குதிரைகளில் பிஜிலி என்ற பெண் குதிரை மீது சாந்த் பாய் பாடீல் தனிப்பாசம் வைத்திருந்தார். அதன் அழகுக்காகவே அவர் அந்த காலத்தில் 100 ரூபாய் கொடுத்து அந்த குதிரையை வாங்கி இருந்தார்.
அந்த குதிரைக்கு மட்டும் அவர் தன் கைப்பட உணவுகள் கொடுப்பார். இதனால் அந்த குதிரையும் சாந்த் பாய் பாடீலிடம் பாசத்துடன் இருந்தது. சாந்த் பாய் பாடீலை பார்த்ததும் அவர் மீது கால்களைத் தூக்கிக் போட்டு பாசத்தை வெளிப்படுத்தும். ஒரு நாள் சாந்த் பாய் பாடீல் அந்த குதிரை மீது ஏறி அவுரங்காபாத் சென்றார். பிறகு தூப்கேதா கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

வழியில் பயணக் களைப்பு ஏற்படவே, வனப்பகுதியில் குதிரையை விட்டு இறங்கினார். குதிரையை புல் மேய விட்டு விட்டு மரத்தடியில் போய் படுத்தார். நீண்ட நேரமாக கண் அயர்ந்து நன்றாக தூங்கி விட்டார்.
சில மணி நேரம் கழித்து கண் விழித்தார். ஊர் திரும்புவதற்காக பிஜிலி குதிரையைத் தேடினார். குதிரையைக் காணவில்லை. அங்கும் இங்குமாக ஒடினார். எங்கு தேடியும் குதிரையை கண்டுபிடிக்க இயலவில்லை.
சாந்த் பாய் பாடீல் மனம் முழுவதும் சோகம் ஏற்பட்டது. ஏமாற்றத்துடன் குதிரை சேணத்தை தோளில் போட்டுக் கொண்டு தூப்கேதா கிராமத்தை நோக்கி நடந்தார்.
நல்ல ஜாதி குதிரையாயிற்றே இனி திரும்பக் கிடைக்குமா என்று பலவாறு யோசித்தபடி சாந்த் பாய் பாடீல் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு குரல் அவரை அழைத்தது.
“சாந்த் பாய்… இங்கு வாருங்கள்….”

குரல் வந்த திசையில் சாந்த் பாய் பாடீல் திரும்பிப் பார்த்தார். அங்கு இளம் பாபா ஒரு மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். சாந்த் பாய் பாடீல் கண்களுக்கு இளம்பாபா ஒரு விசித்திர மனிதர் போல காட்சி அளித்தார். இளம் பாபா கப்னி எனும் நீண்ட ஆடை அணிந்து தலையில் ஒரு வித குல்லா வைத்திருந்தார்.
அவர் அருகில் சட்கா எனும் குட்டையான, சற்று பருமனான ஒரு கட்டை இருந்தது. புகைப்பிடிப்பதற்கான ஹூக்காவை அவர் வேகம், வேகமாக தயார் செய்து கொண்டிருந்தார். சாந்த் பாய் பாடீல் அவர் அருகில் ஆச்சரியத்தோடு வந்து நின்றார். “என் பெயர் உமக்கு எப்படித் தெரியும்? நீர் யார்?” என்று சாந்த் பாய் பாடீல் கேட்டார்.
தாடியோடு, மகான் போல் காட்சியளித்த இளம்பாபா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மெல்ல சிரித்தார். உன் மூலமாகத்தானே நான் மீண்டும் சீரடிக்கு செல்லப் போகிறேன் என்று அவர் உள்மனது கூறிக் கொண்டது.
அவ்வளவுதான். அவர் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சாந்த் பாய் பாடீலை பார்த்து, “குதிரையின் சேணத்தை சுமந்து செல்கிறீர்களே… குதிரை என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அதற்கு சாந்த்பாய் பாடீல் தனது பிஜிலி குதிரையில் வந்ததையும் வழியில் அது தொலைந்து விட்டதையும் கண்ணீர் மல்க விளக்கமாக கூறினார்.
“அந்த குதிரை என்றால் எனக்கு உயிர். ஒரு நாள் கூட நான் அதை விட்டுப் பிரிந்து இருந்ததே இல்லை. இப்போது பிஜிலி எங்கு இருக்கிறதோ… என்ன பாடுபடுகிறதோ தெரியவில்லை. அந்த குதிரையை என்னால் மறக்க முடியவில்லை. எனவே தான் அதன் சேணத்தை எடுத்து சென்று கொண்டிருக்கிறேன்” என்றார்.

உடனே இளம்பாபா, “உங்களைப் பார்த்தால் பெரிய பணக்காரர் போல தெரிகிறது. பணம் கொடுத்தால் அது போல வேறு ஒரு நல்ல குதிரையை வாங்கலாமே… ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள்? என்றார்.
அதற்கு சாந்த் பாய் பாடீல், “அய்யா… நான் அதை வெறும் குதிரையாக மட்டும் பார்க்கவில்லை. என் தாயை போல அன்பு காட்டி அந்த குதிரையை வளர்த்து வந்தேன். அதுவும் என்னிடம் ரொம்ப பாசமாக இருந்தது. என் மனைவி கூட என்மீது அந்த அளவுக்கு பாசமாக இருந்திருக்க மாட்டாள். உண்மையில் அந்த குதிரை தெய்வ அம்சம் பொருந்திய குதிரை” என்றார்.
ஒரு வாயில்லா ஜீவன் மீது சாந்த் பாய் பாடீல் காட்டிய பாசம் இளம் பாபாவுக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளாமல், “சரி இங்கு அமருங்கள், புகை பிடித்து விட்டு செல்லலாம்” என்றார். அதை சாந்த் பாய் பாடீல்
ஏற்கவில்லை.
தன் குதிரை என்ன ஆனதோ என்று புலம்பினார். இதனால் சாந்த் பாய் பாடீல் மீது இளம் பாபாவுக்கு இரக்கம் ஏற்பட்டது. “சரி…. சற்று மேற்கு திசையில் செல்லுங்கள். அங்கு சிறு ஓடை வரும். அந்த ஓடை அருகில் உள்ள தோட்டத்தில் உமது குதிரை புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. போய் பிடித்து வாரும்” என்றார்.
இளம்பாபா இப்படி சொன்னதை கேட்டதும் சாந்த் பாய் பாடீல் உற்சாகம் அடைந்தார். குறிப்பிட்ட ஓடை அருகில் உள்ள தோட்டத்துக்குள் சென்றார்.
என்ன ஆச்சரியம்? சாந்த் பாய் பாடீலின் பிஜிலி குதிரை அங்கு புல் மேய்ந்து கொண்டிருந்தது. சாந்த் பாய் பாடீலை கண்டதும் அந்த குதிரை ஓடோடி வந்து பாசத்தோடு முகர்ந்து பார்த்தது.

சாந்த் பாய் பாடீல் கண்களில் இருந்து கண்ணீர் தாரை, தாரையாக வழிந்தது. பாபா இருந்த திசையை நோக்கி கும்பிட்டார்.
உண்மையிலேயே அவர் கடவுளின் அவதாரம் தான் என்று நினைத்தார்.
பிறகு குதிரையோடு மீண்டும் இளம் பாபாவிடம் வந்தார். குதிரை கிடைக்க உதவியதற்காக நன்றி கூறினார். அதற்கு இளம்பாபா, “இப்போது மகிழ்ச்சிதானே… இனி எம்மோடு அமர்ந்து புகை பிடிக்கலாமே” என்றார்.
“சரி” என்று சாந்த் பாய் பாடீல் தலையாட்டினார். இளம்பாபா அருகில் அமர்ந்தார்.
ஹூக்கா பிடிப்பதற்கான புகையிலை, மண்ணால் செய்யப்பட்ட புகைக் குழாய் இரண்டும் இருந்தன. புகையிலையை பற்ற வைப்பதற்கு நெருப்பு வேண்டும். பிறகு புகையை உறிஞ்சுவதற்கு புகைக்குழாயை சுற்றவும், உதட்டுக்கு இதமாக இருப்பதற்காக துணியை நணைக்க தண்ணீரும் வேண்டும். அந்த இரண்டும் இல்லை. நெருப்பும் தண்ணீரும் இல்லாமல் எப்படி புகை பிடிக்க முடியும் என்று சாந்த் பாய் பாடீல் யோசித்தார்.
அப்போது இளம்பாபா ஒரு அற்புதத்தை நடத்திக் காட்டினார்.
தன் அருகே வைத்திருந்த சட்காவை எடுத்தார். ஓங்கி தரையில் ஒரு அடி அடித்தார். அந்த இடத்தில் இருந்து தீ எரிந்தது. உடனே பாபா புகையிலையை எடுத்து பற்ற வைத்தார்.
பிறகு சட்காவை எடுத்து மற்றொரு இடத்தில் தரையில் மெல்ல அடித்தார். இப்போது அந்த இடத்தில் தண்ணீர் பொங்கியது. துணியை நனைத்து புகைக்குழாயைச் சுற்றினார். புகைப்பதற்கு தயாரானார்.

சாந்த் பாய் பாடீலோ ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் மெய் மறந்து போய் இருந்தார். நடப்பதெல்லாம் கணவா, நனவா என்று அவர் தவித்தார். முதலில் தன்னை பெயர் சொல்லி அழைத்தார். பிறகு தனது குதிரையை கண்டு பிடித்துக் கொடுத்தார். இப்போது தரையில் குச்சியால் தட்டியதும் தண்ணீர் வரவழைத்தாரே… எப்படி?
உண்மையில் இவர் கடவுள்தான் என்று சாந்த் பாய் பாடீல் மனம் எண்ணியது. இளம் பாபா மீது பயம் கலந்த மரியாதை ஏற்பட்டது.
அடுத்த வினாடி அவர் இளம்பாபா காலில் விழுந்து வணங்கினார். தினமும் தான் வணங்கும் ஈசன் போல அவருக்கு பாபா காட்சியளித்தார்.
சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு சாந்த் பாய் பாடீல் திரும்பினார். பாபாவின் கருணை முகம் அவர் மனதை கட்டிப்போட்டு விட்டது. அப்படியே பாபாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சாந்த் பாய் பாடீலை பார்த்து மெல்ல சிரித்தப்படி பாபா ஹூக்காவை இழுத்தார்.
பிறகு அதை சாந்த் பாய் பாடீலிடம் கொடுத்து, “நீங்களும் குடியுங்கள்” என்று கொடுத்தார்.

சாந்த்பாய் பாடீல் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. பாபாவிடம் இருந்து ஹூக்காவை வாங்கி புகைத்தார். அவர் மனதில், இந்த மகான் எப்போதும் தம்முடனே இருந்தால் மகிழ்ச்சியாக இருக்குமே என்று தோன்றியது. எப்படியாவது இந்த மகானை தன்னோடு அழைத்து சென்று விட வேண்டும் என்று நினைத்தார்.
அவர் பாபாவிடம், மெல்ல தயங்கியபடி, “அய்யா… நீங்கள் இன்று என்னை ஆசீர்வதித்து விட்டீர்கள். நான் புண்ணியம் செய்த பலனை அடைந்து விட்டேன். என் குடும்பத்தாருக்கும் உங்கள் ஆசி வேண்டும். மறுக்காமல் நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
இளம்பாபா சற்று யோசித்தார். பிறகு புன்னகைத்தப்படி, “அல்லா மாலிக்” என்றார்.
மேலும், “என்னை முழு மனதுடன் மனதார நேசிக்கும் யாரையும் நான் கைவிட மாட்டேன். அவர்களை நான் ஏற்றுக் கொள்வேன்” என்றார்.
சாந்த் பாய் பாடீல் மனம் மகிழ்ச்சியால் கும்மாளமிட்டது. அவர்கள் இருவரும் அந்த வனப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். சாந்த் பாய் பாடீல் முன்னே நடக்க இளம்பாபா பின் தொடர்ந்தார்.
இருவரும் தூப் கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அங்கிருந்து நேரடியாக சீரடிக்கு பயணமாக பாபா ஏற்கனவே முடிவு செய்திருந்தார். அதற்கும் அவர் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
