பஞ்சபூதங்களை கட்டுப்படுத்திய சீரடி சாய்பாபா!!!

0

முற்றும் துறந்த துறவிகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. பந்த பாசம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர், ஊராக சென்றபடி இருப்பார்கள். ஆனால் சாய்பாபா, அப்படி இல்லாமல் சீரடியில் நிரந்தரமாக தங்கினார். ஏனெனில் அவர் துறவியல்ல. ஏழேலு உலகங்களையும் காத்து அருளும் பகவானாக திகழ்ந்தார். இன்றும் திகழ்கிறார்.

அவர் முக்காலமும் உணர்ந்தவர். கோடான கோடி பேருக்கு கண் கண்ட தெய்வமாக அவர் உள்ளார். தம்மை நம்பி முற்றிலும் சரண் அடைந்தவர்களை அவர் ஒரு போதும் கைவிட்டதில்லை. இந்த பிரபஞ்சத்தில் அவர் அசைவின்றி எதுவும் அசையாது.

பஞ்சபூதங்களையும் அவர் கட்டுப்படுத்தினார். அவர் உத்தரவுக்கு பஞ்சபூதங்களும் பணிந்தன. சீரடியில் அவர் வாழ்ந்த 60 ஆண்டு காலத்தில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பாபாவின் வார்த்தைக்கு அடங்கி நடந்தன என்பதை நிரூபிக்கும் அற்புதங்கள் பல தடவை நடந்தன. சீரடி மக்கள் நலனுக்காக பல தடவை பஞ்சபூதங்களை பாபா முடக்கியதுண்டு.

சீரடிக்கு இளம் வயதில் வந்த போதே அவர் அதை மக்களுக்கு உணர்த்தினார். வேப்பமரத்தடியில் தங்கி இருந்த அவரை இயற்கை சீற்றங்கள் எதுவும் செய்ய இயலவில்லை. ஒருநாள் இரவில் சீரடியில் பேய்மழை பெய்தது. ஊரே வெள்ளத்தில் மூழ்கியது. 2 நாள் கழித்துதான் வெள்ளம் வடிந்தது. வீடுகளை விட்டு வெளியில் வந்த மக்கள், வேப்ப மரத்தடியில் இருந்த இளம்பாபாவுக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் ஓடி வந்தனர்.

ஆனால் இளம்பாபா வேப்பமரத்தடியில் மண்ணும், செடி, கொடிகளும் உடம்பை மூடி இருக்க ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தார். இதைக் கண்டு சீரடி மக்கள் வியந்தனர். அதன்பிறகு சீரடியின் ஒட்டுமொத்த மக்களும் நம்பும் வகையில் அடுத்தடுத்து அற்புதங்களை பாபா நிகழ்த்தினார்.

சீரடியில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று நல்ல தண்ணீர் கிணறு. மற்றொன்று உப்புத் தண்ணீர் கிணறு. திடீரென நல்ல தண்ணீர் கிணறு வற்றி போனது.

உப்பு தண்ணீர் கிணற்றின் நீரை பயன்படுத்த முடியாமல் பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர். ஒருநாள் அவர்கள் அனைவரும் காலிக்குடங்களுடன் சென்று சாய்பாபாவை சந்தித்து குடி தண்ணீர் பிரச்சினை பற்றி சொன்னார்கள்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சாய்பாபா, அருகில் உள்ள நந்தவனத்தில் இருந்து பூக்களைப் பறித்து வரச் சொன்னார். அந்த மலர்களை கைகளில் ஏந்தி, கண் மூடி பிரார்த்தனை செய்தார். பிறகு அவர் பெண்களை பார்த்து, ‘‘வாருங்கள் போகலாம்’’ என்று அழைத்தப்படி ‘‘உப்புத் தண்ணீர்’’ கிணற்றடிக்கு சென்றார். கையில் உள்ள மலர்களை கிணற்றுக்குள் அர்ச்சனை செய்வது போல தூவினார்.

சில வினாடிகள் கழித்து ‘‘ம்…ம்… சரியாகி விட்டது. இனி இந்த தண்ணீரை குடிக்கலாம்’’ என்று சிரித்தப்படி பாபா சொன்னார். சீரடி பெண்களுக்கு அதை நம்ப முடியவில்லை. உடனே அந்த கிணற்றில் இருந்து ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்தனர். அதை குடித்துப் பார்த்தனர். சிறிது நேரத்துக்கு முன்பு வரை உப்பாகக் கரித்த தண்ணீர் கல்கண்டு சுவையாக மாறியிருந்தது.

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?

பாபாவின் சக்தியை உணர்ந்த பெண்கள் ‘‘ஜெய்சாய்நாத்’’ என்று மகிழ்ச்சி கோஷமிட்டனர். அப்போது பாபா, ‘‘உங்கள் இல்லங்களில் உணவு, உடை எவற்றுக்குமே எந்த குறையும் வராது. உங்கள் மனதை எப்போதும் என்னிடம் செலுத்துங்கள். உங்கள் நலன்களை கவனிப்பதே என் வேலை’’ என்றார்.

அதை நடைமுறையில் பாபா செய்தும் காட்டினார். ஒரு நாள் சீரடியில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இடியுடன் பலத்த மழை பெய்தது. பத்தே நிமிடங்களில் சீரடி வெள்ளத்தில் மிதந்தது. பயந்து போன மக்கள் மசூதிக்கு ஓடிச் சென்று பாபாவை பார்த்து ‘‘மழை போதும்… நிறுத்துங்கள்’’ என்றனர். உடனே வெளியில் வந்த பாபா வானத்தை பார்த்தபடி, ‘‘போதும்… நிறுத்து, உன் கோபத்தை அடக்கு. அமைதியாக இரு’’ என்றார்.

மிகவும் உரத்தக் குரலில் பாபா உத்தரவிட்ட மறுநிமிடம் மழை நின்றது. சுழற்காற்று காணாமல் போய் விட்டது. அடுத்த சில நிமிடங்களில் சீரடியில் இயல்பு நிலை திரும்பியது. மக்கள் நன்றி தெரிவித்து பாபாவிடம் விடை பெற்றனர். மற்றொரு நாள் மதியம் பாபா தம் பக்தர்களோடு அமர்ந்து மசூதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மசூதி மேற்கூரை இடிந்து விடுவது போன்ற ஏதோ சத்தம் கேட்டது. பாபா கூரையைப் பார்த்து, கையை உயர்த்தி ‘‘கொஞ்சம் பொறு… இரு, இரு’’ என்றார். உடனே சத்தம் நின்று விட்டது. அனைவரும் சாப்பிட்டு முடித்து வெளியில் வந்த அடுத்த வினாடி, மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போதுதான் பாபா உத்தரவை ஏற்று மசூதி கூரையின் கல்லும், மண்ணும் கட்டுப்பட்டு கிடந்தன என்ற உண்மை பக்தர்களுக்குத் தெரிய வந்தது.

இன்னொரு தடவை மசூதி துனி தீ உயர்ந்து எரிந்தது. மசூதி கூரை வரை தீ ஜூவாலை சென்றது. பக்தர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதை குறிப்பால் உணர்ந்த பாபா, தன் அருகில் இருந்த குச்சியை எடுத்து தரையில் அடித்தபடி ‘‘கீழே இறங்கு, அமைதியாக இரு’’ என்றார்.

மறுவினாடி துனி தீ வேகம் குறைந்தது. சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்தது. பாபா உத்தரவுக்கு தீ கட்டுப்பட்டதை நேரில் பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். சீரடியைச் சேர்ந்த கொண்டாஜி என்பவர் ஒரு நாள் பாபாவை பார்க்க வந்தார். அவரிடம் பாபா, ‘‘உன் வைக்கோல் படப்பில் தீ எரிகிறது. போய் அணைத்து விட்டு வா’’ என்றார்.

கொண்டாஜி பதறியபடி ஓடினார். ஆனால் வைக்கோல் போரில் தீ எதுவும் இல்லை. திரும்பி வந்த கொண்டாஜி, ‘என்ன பாபா…. சும்மா ஏன் என்னை அலைய விட்டீர்கள்?’’ என்றார். உடனே பாபா, திரும்பிப் பார் என்றார். கொண்டாஜி திரும்பிப் பார்த்தார். அவர் வைக்கோல் போரில் தீ பிடித்து புகை வந்து கொண்டிருந்தது. அது மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது.

அங்கு விரைந்து சென்ற பாபா, வைக்கோல் போரைச் சுற்றி தண்ணீரால் ஒரு வட்டம் போட்டார். ‘‘இந்த வட்டத்தை விட்டு வெளியில் வரக் கூடாது’’ என்று அவர் தீயைப் பார்த்து கூறினார். அவர் உத்தரவுக்கு கட்டுப்பட்ட தீ வட்டத்தைத் தாண்டி வெளியில் வரவே இல்லை.

ஒரு தடவை பீமா என்ற பக்தர், பாபாவின் லீலைகளை பார்க்க சீரடிக்கு வந்திருந்தார். அன்று மதியம் பீமா உள்பட பக்தர்களை அவசரம், அவசரமாக அழைத்த பாபா, ‘‘ஓடுங்கள் உங்கள் அறைகளுக்குள் போய் இருங்கள். 10 நிமிடத்துக்கு யாரும் வெளியில் வரக்கூடாது, ஓடுங்கள்’’ என்றார்.

பாபா ஏன் திடீரென இப்படி சொல்கிறார் என்பது புரியாமல் பக்தர்கள் ஓடினார்கள். அடுத்த நிமிடம் பிரளயம் ஏற்பட்டு விட்டது போல சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. 10 நிமிடங்கள் கழித்தே நின்றது. இதை கண்டு பீமா உள்பட அனைத்து பக்தர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.

அதுபோல சீரடியில் ஒரு தடவை பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, மும்பை ஐகோர்ட்டு அரசு வக்கீல் ஒருவர் சீரடியில் இருந்து மும்பை செல்ல முடியாமல் தவித்தார். அதைப் பார்த்த பாபா, ‘‘மழை நிற்கட்டும். என் குழந்தை செல்ல வேண்டும்’’ என்றார். அடுத்த நிமிடம் மழை நின்றது.

பாபா இன்னொரு அதிசயத்தை தினமும் நடத்தி கொண்டிருந்தார். அவர் உருவாக்கிய லெண்டிபார்க் தோட்டத்து செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வாமன் தாத்யா என்பவர் சுடாத, பச்சை மண்ணால் செய்த 2 பானைகளை கொடுப்பார். அந்த பானைகளில் தண்ணீர் எடுத்து முடித்ததும் அவற்றை பாபா கீழே வைப்பார். மறுவினாடி அந்த 2 பானைகளும் உடைந்து மண்ணோடு மண்ணாக கலந்துவிடும். தினமும் இந்த அற்புதம் நடந்தது.

ஒருநாள் பாபா தன் கால் விரல்களுக்கிடையே கங்கை, யமுனா, புனித நீரை தாஸ்கனு மகாராஜ் என்ற பக்தருக்காக வரவழைத்து காட்டினார். ஒரு தடவை கடும் வெயிலைத் தாங்க முடியாமல் பக்தர்கள் ஒவ்வொருவராக மசூதியை விட்டு வெளியேறினார்கள். 5 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் 5 பேரையும் துனி நெருப்பு அருகில் போய் இருக்குமாறு பாபா உத்தரவிட்டார்.

அவர்கள் அங்கு சென்று அமர்ந்ததும், அந்த மசூதியில் இருந்த வெப்பம் நீங்கி, குளிர்ந்த காற்று வீசியது. ஏ.சி. அறை போல மாறியது.
இப்படி பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்திய சாய்பாபா, தான் ஒரு கடவுள் அவதாரம் என்பதையும் அடிக்கடி நிரூபித்தார்.

வாய்க்குள் உலகம்

சாய்பாபா சிறுவனாக இருந்த போது முஸ்லிம் பக்கீர் ஒருவர் வீட்டில் வளர்ந்தார் என்பதை ஏற்கனவே நீங்கள் படித்திருப்பீர்கள். ஒருநாள் சிறு வயது பாபாவும், பணக்கார வீட்டு பையனும் கோலி விளையாடினார்கள். பணக்கார வீட்டுப் பையன் தன் பூஜை அறையில் இருந்த சாளக்கிராம கல்லை எடுத்து வந்து விளையாடினான்.

விளையாட்டில் வெற்றி பெற்ற பாபா, அந்த சாளக்கிராம கல்லை எடுத்து தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார். இதை அறிந்த பணக்கார வீட்டுப் பையனின் தாய் ஓடி வந்து, ‘‘தம்பி அது சாமி, அதை தந்து விடு… வாயைத் திற….’’ என்றார்.

இளம் பாபா வாயைத் திறந்தார். அவர் வாய்க்குள் உலகம் சுழன்றது. கிருஷ்ண பரமாத்மாவும் சிறு வயதில் தன் வாய்க்குள் உலகம் சுழல்வதை இப்படித்தான் காட்டினார். இந்த நிகழ்வு மூலம் பாபாவின் சிறு வயதிலேயே அவருக்குள் பஞ்சபூதங்களும் அடங்கிக் கிடந்தன என்பது உறுதியாகிறது.

ஒவ்வொருவரின் இஷ்ட தெய்வமாகவே மாறி அவர் பெருமாளாக, சிவனாக, ஆஞ்சநேயராக காட்சி கொடுத்தார். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply