பிரதமர் பதவிக்காய் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை.

0

பிரதமர் பதவியை பொறுப்பேற்க தான் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும்,கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துப்பூர்வமாக பகிரங்கமாக தனது பதிலைத் தெரிவித்ததாகவும்,இது கட்சியின் நாடாளுமன்ற குழு,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் உடன்பாடு மற்றும் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தாம் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மாத்திரம் முன்வைத்த வன்னம் அதிபர் உண்மையான நிலைப்பாடுகளை திரிபுபடுத்தியுள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நிபந்தனைகளுடனையே உரிய கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நிபந்தனையின்றி பட்டம் பதவி சலுகைகளை ஏற்றுக் கொள்வதற்காக தான் ஒருபோதும் செயற்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவ்வாறான பதவி வெறி தனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கோ இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமும், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குத் தீவைத்த கீழ் தர நடவடிக்கையும் ஒன்றல்ல வேறுபட்டவை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு தான் முற்றிலும் எதிரானவன் எனவும்,ஜனநாயகப் போராட்டங்களுக்கு நிபந்தனையின்றி சார்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply