தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

0

சென்னை தரமணி டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் “நாளையை நோக்கி இன்றே தலை நிமிர்ந்த தமிழ்நாடு”எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு டான்சாம் மற்றும் டாம்கோ ஆகிய நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2022-யையும் வெளியிட்டார். டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து ரூ.251.54 கோடி செலவில் டைடல் பார்க்கில் அமைத்துள்ள “டான்சாம்”, மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

டான்சாம் திறன்மிகு மையம் நம் நாட்டில் முதல்முறையாக அமைக்கப்பட்டு உள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். டிட்கோ மற்றும் ஜி.இ. ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூ.141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3டி அச்சிடுதல் தொழில் நுட்பத்தில், உலகத்தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான டாம்கோ திறன்மிகு மையத்தினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த ஜூலை மாதம் “டஸோட் ” நிறுவனத்தின் திறன்மிகு மையத்தை டைடல் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.

இந்த திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும், தொழிற்சாலைக்கு செல்லாமலே, அச்சூழலுக்கு ஏற்றவாறு மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த திறன்மிகு மையங்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்” திட்ட நோக்கத்துடன் இணைந்து செயல்படும்.

மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் ரிமோட் பைலட் பயிற்சி மையங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி இணைந்து, மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ள ரிமோட் பைலட் பயிற்சி மையங்களையும் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தொழில்துறை, தொழில் துறை கூட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பேப்ஹெட்ஸ், மேக்ஸ் பைட், பிரைமியம் ஆகிய நிறுவனங்களுடன் டாம்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. டிட்கோ நிறுவனமும், ஜி.டி.என். நிறுவனமும் இணைந்து பொது வசதி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சமீப காலங்களில், விவசாயம், சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இப்பயிற்சி மையங்கள் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

ஒரு வருடத்திற்குள் சுமார் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த திறன்மிகு மையங்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக, உற்பத்தித் துறையைவிட சேவைத்துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளர்ச்சி பெற இயலும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், நம்மைப் பொறுத்தவரை உற்பத்தித்துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டிலுமே முன்னணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியை நாம் பெற்றிட முடியும். எனவேதான், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் வெகுவாக உதவும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களைப் பயன்படுத்திக்கொண்டு, வெகு விரைவில் முன்னேற்றம் காண இயலும்.

டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மையம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திறன்மிகு மையம், “நான் முதல்வன்” திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த மையங்களில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள் மூலமாகவும், நமது மாநிலத்திற்கு அதிக காப்புரிமைகள் கிடைக்கும்.

எனவே, அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளுடன், தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்திடும் சக்தியாகவும் இந்த திறன்மிகு மையங்கள் விளங்கிடும். தொழில் வளர்ச்சி-4.0 தொடர்பான நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இத்திறன்மிகு மையங்கள் செயல்படும் என்பதால், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறன் வெகுவாக மேம்படும். வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு எப்போதுமே, முன்னணி மாநிலமாகத்தான் இருந்து வருகிறது.

Leave a Reply