ஆம்னி பஸ் பயணிகள் அதிகளவில் அரசு சிறப்பு பேருந்துகளுக்கு மாறினார்கள்.

0

பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் புகார் எழுகிறது.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையின் போதும் அதிக கட்டணம் வசூலித்தனர்.

அதனையடுத்து தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னதாக ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் 30 சதவீதம் கட்டணத்தை குறைத்து நிர்ணயித்தனர்.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆம்னி பஸ்களின் வகைகளின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்து அறிவித்தனர்.

ஆனால் அந்த கட்டணமும் ரூ.1000-க்கு குறைவாக இல்லை. ஏ.சி.படுக்கை வசதிக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை நீண்ட தூரத்திற்கு நிர்ணயித்தனர்.

புதிய கட்டணத்தின்படி தீபாவளி பண்டிகையின் போது பொது மக்களிடம் வசூலித்தனர்.

ஆம்னி பஸ்களின் கட்டணத்திற்கும் அரசு பஸ்களின் கட்டணத்திற்கும் இடையே மிகுந்த வேறுபாடு இருந்தது.

அரசு பஸ்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல ரூ.550 கட்டணம். ஆம்னி பஸ்களில் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வசூலித்தனர்.

குடும்பமாக செல்லும்போது ரூ.10 ஆயிரம் வரை பஸ் பயணத்திற்கு ஒரு முறை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

பல மடங்கு கட்டண உயர்வால் இந்த முறை ஆம்னி பஸ்களை மக்கள் அதிகம் நாடவில்லை.

மாறாக அரசு விரைவு பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் பக்கம் படையெடுத்தனர்.

ஆம்னி ஏ.சி.பஸ்சில் ஒருவர் தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.3000 வரை கட்டணத்திற்கு செலவாகிறது.

ஆனால் அரசு பஸ்களில் ரூ.1000க்கும் குறைவாகத்தான் கட்டணம் உள்ளது. மிகப்பெரிய அளவில் கட்டண வித்தியாசம் இருப்பதால் மட்டுமின்றி இந்த முறை அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும்.

வழக்கமாக அரசு விரைவு பஸ்களில் முன் பதிவு முடிந்தவுடன் பிற போக்குவரத்து கழக குறைந்த அளவு பஸ்கள் மட்டுமே முன் பதிவிற்காக ஒதுக்கப்படுவது உண்டு.

ஆனால் இந்த முறை தீபாவளிக்கு அமைச்சர் சிவசங்கர் மதுரை, திருநெல்வேலி, கோவை, கும்பகோணம் போன்ற போக்கு வரத்து கழகங்களை சேர்ந்த 500 பஸ்கள் முன் பதிவில் சேர்க்கப்பட்டன.

முன்பதிவிற்கான இணையதளத்தில் பஸ்சில் இடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு அடுத்தடுத்து முன் பதிவிற்கான பஸ்களை இணைத்து கொண்டு வந்தது முக்கிய காரணமாகும்.

இதனால் மக்கள் அரசு பஸ்களில் இடமில்லை என்று ஆம்னி பஸ்கள் பக்கம் திரும்பவில்லை. அதற்கான வாய்ப்பை அதிகாரிகள் உருவாக்காததால் அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு தீபாவளியை விட அதிகரித்துள்ளது.

இந்த வருடம் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன் பதிவு செய்தனர். இது கடந்த வருடம் 75 ஆயிரமாக இருந்தன.

மேலும் இந்த ஆண்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் மூலமாக மட்டும் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளன.

இது கடந்த ஆண்டு 4 லட்சமாக இருந்ததாக போக்குவரத்து கழக அதிகாரிகள் புள்ளி விவரங்களை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறும்போது, பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஒருவர் கூட இடமில்லை என்று ஆம்னி பஸ் பக்கம் செல்லவில்லை.

அந்த அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முன்பதிவு பஸ்களும் இருக்கைகள் நிறைய நிறைய கொண்டு வந்ததால் அரசு பஸ்களில் அதிக மக்கள், பயணம் செய்தனர்.

ஆம்னி பஸ் கட்டண உயர்வும் அரசு பஸ் பக்கம் மக்கள் வர ஒரு முக்கிய காரணமாக இருந்தன என்றார். இதுகுறித்து ஆம்னி பஸ் ஆபரேட்டர் ஒருவர் கூறுகையில் 21-ந்தேதி மட்டும் தான் ஆம்னி பஸ்கள் முழு அளவில் சென்றன.

22-ந்தேதி 30 முதல் 40 சதவீதம் காலியாக சென்றன. 23-ந்தேதி பயணிகள் கூட்டமே இல்லை. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து கட்டணம் உயர்வு தான் காரணம் என்றால் அதனை குறைக்க பரிசீலிப்போம் என்றார்.

Leave a Reply