சபரிமலை கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு.

0

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தமிழ் மாத பிறப்பின் போது திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி புரட்டாசி மாதம் வருகிற 18-ந்தேதி பிறப்பதை முன்னிட்டு, சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.

அதன் பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 18-ந்தேதி மாதப்பிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

வருகிற 21-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். சபரிமலை கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த முன்பதிவை இது வரை கேரள காவல்துறை செயல்படுத்தி வந்தது.

2010-ம் ஆண்டு முதல் 2011 வரை சபரிமலையில் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த ஏ.டி.ஜி.பி. பி. சந்திரசேகரனால் இந்த முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கையாள வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் முதல் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செயல்படுத்துகிறது.

இதற்காக தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் தனியார் நிறுவனத்துடன் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் சுமார் 50 வாரிய ஊழியர்கள் தொழில் நுட்பம் குறித்து பயிற்சியும் பெற்றனர்.

Leave a Reply