தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை அ.தி.மு.க. இழந்தது.

0

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க. 12 இடங்களிலும், தி.மு.க. 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சத்யா தலைவராகவும், துணைத்தலைவராக செல்வகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில் துணைத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். தலைவராக உள்ள சத்யா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யா தலைவர் பதவியை இழந்தார்.

ஆனால் இதை எதிர்த்து சத்யா தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சத்யாவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சத்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு 15 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை சத்யா இழந்தார்.

Leave a Reply