சென்னையில் 16 தொகுதிகளில் ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்.

0

தமிழகத்தில் உள்ள 6 கோடியே 21 லட்சம் வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணி தொடங்கி ஒரு மாதம் முடிந்த போதும் 26 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.

அனைத்து வாக்களர்களையும் இத்திட்டத்தின் படி சேர்க்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கும் பணி வீடு, வீடாக நடைபெற்று வருகிறது. 6 பி படிவத்தை பூர்த்தி செயது சிலர் கொடுத்து உள்ளனர்.

பெரும்பாலானவர்களின் ஆதார் எண் சேர்க்கப்படாமல் உள்ளதால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. பொது மக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநில தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் உள்ள அலுவலரை அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்த போது படிவம் 6 பி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையின் எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply