ஜனாதிபதி ரணிலின் மகிழுந்து சேதத்தின் தொகை இவ்வளவா!

0

கொழும்பு 3, 5 ஆம் ஒழுங்கை இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உத்தியோகபூர்வ மகிழுந்து சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் மகிழுந்துக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் 191 மில்லியன் ரூபா என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரித்து வரும் நிலையில் அது குறித்த வழக்கு நேற்று (10) கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது அதன் அருகே அமைந்துள்ள அவரது சகோதரரான சன்ன நளின் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வீட்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் 14 மில்லியன் ரூபா எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கையை முன் வைத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த விவகாரத்தில் இதுவரை 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் பிணையில் உள்ளதோடு ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் 4,6,7,8 ஆம் இலக்க சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை பதிவுகளை பெற்று அதனை குற்றப் பிரதேசத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள கைவிரல் ரேகைகளுடன் ஒப்பீடு செய்து பரிசோதனை செய்ய இதன்போது நீதிமன்றால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் குறித்த வழக்கு மீள விசாரணைக்கு வரவுள்ளது

Leave a Reply