வீட்டில் பூஜை அறை இப்படி வாஸ்துப்படி அமைந்திருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

0

நம்மில் பெரும்பாலானோர் தினமும் பூஜை அறையில் இறைவனை வழிபட்டாலும்கூட, வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைத்திருக்கிறோமா என்பதும், முறைப்படி பூஜைகள் செய்கிறோமா என்பதும் மிகவும் முக்கியம். வீடுகளில் எப்படி பூஜை செய்ய வேண்டும், அதன் முறைகள் என்ன என்பது பற்றி சாஸ்திர நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
கடவுளை அனைத்து இடங்களிலும் வழிபடலாம் என்றாலும் குடியிருக்கும் வீட்டில் உள்ள பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில் (வட கிழக்கே), கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமிப் படங்கள் இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும்.

பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும். ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கே பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம்.

பூஜை அறையைப் புனிதமான இடமாக பாவிக்கவேண்டுமே தவிர, தேவையற்ற பொருள்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது.

அப்படிச் செய்வது தெய்வ சாந்நித்யத்தைக் குறைத்துவிடும்.

வீடானது கிழக்கு தாழ்ந்து, தெற்கும் மேற்கும் உயர்ந்து இருக்க வேண்டும். அறிவியல் பூர்வமாக நம் ஊரில் காற்றோட்டத் திசையானது கிழக்கு மற்றும் வடக்கிலிருந்தே வீசும். அதனால் காற்று கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து தெற்கு மற்றும் மேற்கு வழியே வெளியேற வேண்டும். இந்தக் காற்றோட்டத் திசை மாறினால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும். இந்தக் காற்றோட்டத்துக்குத் தகுந்த மாதிரிதான் வீடுகளின் அமைப்பு இருக்க வேண்டும். வீட்டின் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருந்தால் வீசும் காற்றில் பூஜை அறையின் சாம்பிராணி மற்றும் ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, வீடு முழுவதையும் தெய்வ சாந்நித்யம் நிறைந்ததாகச் செய்துவிடும்” என்று தெரிவித்தார்.

நாம் வசிக்கும் இல்லங்களில் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருப்பதன் சிறப்பு, பூஜை அறையானது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பூஜை அறையில் சூரிய உதயத்தின்போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்ய வேண்டும். காலையில் அன்னம், பால் படைப்பது நல்லது. மாலையில் விளக்கு ஏற்றி பழங்கள் படைப்பது சிறப்பு. பூஜை அறையில் இருக்கும் விக்கிரகமானது குடும்பத் தலைவரின் கட்டை விரல் அளவுக்குத்தான் இருக்க வேண்டும். அதைவிடப் பெரிய சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்வது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆகாது. ஏனெனில், அந்த விக்கிரகத்தின் சக்தியை குடும்பத்தில் வசிப்பவர்களால் தாங்க முடியாது. பூஜை அறையில் சாளகிராமம் வைத்து வழிபடலாம். சாளகிராமம் என்பது நேபாளத்திலிருக்கும் கண்டகி நதியில் கிடைக்கும் ஒரு வகை கல். வஜ்ரம் என்ற வண்டு துளைத்து சக்கரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தும்.

இந்தச் சக்கரம் விஷ்ணுவின் அம்சமாகப் பாகவதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனால் அதை வைத்தும் வழிபடலாம். பூஜை அறை விக்கிரகத்தையும் சாளகிராமத்தையும் பெண்கள் தொடக்கூடாது. மற்றபடி அனைத்து வகையான பூஜைகளையும் செய்யலாம். பூஜை அறைக்குள் முன்னோர்களின் படங்கள் இருக்கக்கூடாது. பூஜை அறையில் குலதெய்வங்களின் படங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். சிலர், சில குறிப்பிட்ட சுவாமிப் படங்களை வைத்து வழிபடக் கூடாது என்று கூறுவார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. புனிதமான இடத்தில் அனைத்து வகையான தெய்வங்களின் படங்களையும் வைத்து வழிபடலாம். எந்த இஷ்ட தெய்வத்தையும் பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம்.

Leave a Reply