நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்?

0

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது. வேட்பு மனு கோரல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தெரிவத்தாட்சி அதிகாரியாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க செயற்படவுள்ளார்.

நாட்டின் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் முதன்முதலாக 1993 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மறைவை அடுத்து ஏற்படுத்த வெற்றிடத்திற்காக பதில் ஜனாதிபதியாக டீ.பி விஜேதுங்க ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.

ஏகமானதாக அவர் செய்யப்பட்டதன் காரணமாக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனிடையே, இன்று நாடாளுமன்றம் கூடியதன் பின்னர், ஜனாதிபதி வாக்கெடுப்பில் போட்டியிடும் வேட்பாளரகளின் வேட்புமனுக்களைக் கையளிக்குமாறு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்கவினால் அறிவித்தல் விடுக்கப்படும்.

அதன் பின்னர் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் வேட்பாளர்களை முன்மொழிவர். இதனை மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் வழிமொழிவார். இதன்போது தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர், பரிந்துரை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் சபையில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது அவசியமாகும்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்காவிட்டால் அவர் நிராகரிக்கப்பட்ட வேட்பாளராக கருதப்படுவார். அதன் பின்னர் வேட்பாளர், தான், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்.

ஜனாதிபதியை தெரிவு செய்யும் சட்டத்திற்கு அமைய சபாநாயகர் தவிர்ந்த 225

நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும்.

அதேநேரம் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. சபாநாயகர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாக முடியாவிட்டாலும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு அவருக்கு வாக்களிக்க முடியுமென்பது விசேட அம்சமாகும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் இன்றைய தினமும் வாக்கெடுப்பு நடைபெறும் நாளைய தினமும் நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply