தற்காலிக ஆசிரியர் பணி- திருத்திய வழிகாட்டுதல் வெளியீடு.

0

பள்ளிக்கல்வித் துறையில் காலியாகவுள்ள 13000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக திருத்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடைவிதித்த நிலையில் திருத்திய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பழைய நியமனங்கள் அனைத்தும் ரத்தானது என்றும் திறமை அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அந்த வழிகாட்டுதலில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்றும், இடைநிலை ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள்-1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இல்லம தேடிக் கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக பணியாற்றி வருவோரையும் ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பள்ளிக்கு அருகே, மாவட்டத்துக்குள் வசிப்போருக்கு முன்னுரிமை தந்து ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்றும் முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2020-ல் வெளியான அரசாணைப்படி தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி திருப்தி இல்லாதபட்சத்தில் உடனே பணியிலிருந்து நீக்கப்படும் என்றும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு வரும் 4-ம் தேதி (நாளை மறுநாள்) முதல் ஜூலை 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply