சீமராஜா – சினிமா விமர்சனம்

0

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகை சமந்தா
இயக்குனர் பொன்ராம்
இசை டி.இமான்
ஓளிப்பதிவு பாலசுப்ரமணியம்

சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ஊரையே கட்டி ஆண்டு வந்த ராஜா குடும்பத்தினரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முயற்சிக்கிறது. இந்த நிலையில், தங்களுக்கு சொந்தமான நிலங்களை தனது ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.

கடைசியில் ஒரு வீடு மற்றும் சில வயல்வெளிகள் மட்டுமே இவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. இருப்பினும் அந்த ஊர் மக்கள் நெப்போலியனை பெரிய ராஜா என்றும், சிவகார்த்திகேயனை சின்ன ராஜா என்றும் அழைக்கின்றனர்.

ஒரு ராஜாவுக்கு அளிக்கப்படும் மரியாதையையும் அளித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனும் ஒரு ராஜாவுக்கு உண்டான கெத்துடனும், மிடுக்குடனும் எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணம் செய்கிறார். ஒரு ராஜாவாக ஜாலியான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது கணக்கு பிள்ளையாக சூரியும் எப்போதும் அவருடனேயே இருக்கிறார்.

சிங்கப்பட்டி ஊருக்கும், பக்கத்து ஊரான புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. புளியம்பட்டியில் பெரிய பணக்காரர் லால். அவரது மனைவி சிம்ரன். என்னதான் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், புளியம்பட்டி மக்களும் சிவகார்த்திகேயன் குடும்பத்தையே ராஜாவாக பார்க்கின்றனர். இதனால் கடுப்பாகும் லால் மற்றும் சிம்ரன், சிவகார்த்திகேயனை சரிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.

இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சமந்தாவை பார்க்கும் சிவகார்த்திகேயன் அவர் மீது காதல் வயப்படுகிறார். தனது காதலை சமந்தாவிடம் சொல்ல பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். ஆனால் சமந்தா, சிவாகார்த்திகேயனின் காதல் ஏற்பதாக இல்லை.

ஒரு கட்டத்தில் சந்தை போடுவதில் இரு ஊருக்கு இடையேயான சண்டை முற்ற, பிரச்சனை தீரும் வரையில் யாரும் அங்கு சந்தை போடக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிடுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்கவும், சமந்தாவின் சம்மதத்தை பெறவும் ராஜாவான சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில் எதிலும் பெரியதாக சிரத்தை காட்டாத சிவகார்த்திகேயனுக்கு தனது மூதாதையரின் பெருமை என்னவென்பதும் தெரியாமலேயே இருக்கிறார்.

கடைசியில் சின்ன ராஜா சிவகார்த்திகேயன் தனது பூர்வ பெருமையை தெரிந்து கொண்டாரா? சந்தை போடுதில் உள்ள பிரச்சனையை எப்படி தீர்த்தார்? சிவகார்த்திகேயனின் காதல் தூதை சமந்தா ஏற்றுக் கொண்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு ராஜாவாக சிவகார்த்திகேயன் தனக்கே உண்டான குறும்புத்தனத்துடன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணிப்பதும், கணக்குப்பிள்ளை சூரியை தன்னுடனேயே வைத்துக் கொள்வது, சமந்தாவுடன் காதல் என காமெடி, ஆக்‌ஷன், காதல், அதிரடி என அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனுடனேயே பயணிக்கும் சூரிக்கும் படத்தில் பெரிய பங்கு இருக்கிறது. படம் முழுவதும் சிவகார்த்திகேயன் உடனேயே பயணிக்கிறார். எப்போதும் போல் இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி, சண்டை எல்லாமே ரசிக்க வைக்கிறது. காதல் காட்சி, ரொமேன்ஸ் காட்சிகளில் கூட சூரி வரும் அளவுக்கு தனக்கு சமமான கதாபாத்திரத்தை சூரியுடன் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அதற்காக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள். சூரி இனி சிக்ஸ்பேக் சூரி என்று அன்போடு அழைக்கப்படுவார். சிக்ஸ் பேக்குக்கான அவரது உழைப்பை பார்க்க முடிகிறது.

உடற்கல்வி ஆசிரியராக சமந்தா படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்துமே ஹிட்டடித்த நிலையில், இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் சமந்தாவில் சிலம்பம் சுற்றுவது சிறப்பாக வந்துள்ளது. சிறப்பு தோற்றத்தில் ராணியாக வரும் கீர்த்தி சுரேஷ் காட்சியும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்ரன், வில்லி கதாபாத்திரத்தில் வந்து மிரட்டுகிறார். சிவகார்த்திகேயனுக்கு, சிம்ரன் சவால் விடும் காட்சிகளில் அனல் பறக்கிறது. லால் வில்லனுக்குண்டான மிடுக்குடன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிம்ரன் – லால் கூட்டணி சிறப்பாக வந்துள்ளது. நெப்போலியன் தான் ராஜா எனபதையே மறந்து ஒரு சாதாரண மனிதராக, ராஜாவுக்குண்டான குணநலன்களுடன் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

மற்றபடி கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்தீப் சுர்னேனி, ரகு என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

தனது முதல் இரண்டு படங்களையும் கிராமத்து சாயலில் எடுத்தது போல், இந்த படத்தையும் ராஜா கதையை மையப்படுத்தி கிராமத்து சாயலில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இவரது படங்களில் இருக்கும் காதல், காமெடி காட்சிகள் இதிலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். வசனங்களும் படத்திற்கு பலம் தான்.

இசையும் மற்றும் ஒளிப்பதி தான் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக டைட்டில் கார்டில் வரும் பின்னணி இசை அற்புதமாக இருக்கிறது. பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `சீமராஜா’ விருந்து. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply